Published : 20 Dec 2020 03:14 AM
Last Updated : 20 Dec 2020 03:14 AM

பொது முடக்கக் காலத்திலும் முத்திரை பதித்தவர்கள்!

ஒவ்வோர் ஆண்டும் விளையாட்டுத் துறையில் தடம் பதித்த பெண்களின் பட்டியல் மிக நீளமானது. ஆனால், கரோனா தொற்று ஒலிம்பிக் உட்பட பெரும் போட்டிகளை இந்த ஆண்டு முடக்கிவிட்டது. ஆனால், சில வீராங்கனைகளுக்கு இந்த ஆண்டும் மறக்க முடியாத சாதனை ஆண்டாக மாறியிருக்கிறது.

* இகா ஷ்வான்டெக்

டென்னிஸில் இந்த ஆண்டு அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் இகா ஷ்வான்டெக். போலந்தைச் சேர்ந்த இவர், தான் பங்கேற்ற முதல் பிரெஞ்சு ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியிலேயே பட்டம் வென்று சாதனை படைத்தார். 19 வயதான இகா, அந்தத் தொடர் முழுவதும் ஒரு செட்டைக்கூட இழக்காமல் வென்றது தனி சாதனை.

* இளவேனில் வாலறிவன்

உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடும் போட்டியில் இரண்டு முறை 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்று முத்திரைபதித்தார் தமிழகத்தில் பிறந்த இளவேனில். வங்கதேசத்தில் நடைபெற்ற ஷேக் ரஸ்ஸெல் சர்வதேச ஏர் ரைபிள் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முத்திரை பதித்தார். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவுத் தரவரிசையில் உலகின் முதல் நிலை வீராங்கனை என்கிற நிலையில் இந்த ஆண்டும் நீடித்தார்.

* கொனேரு ஹம்பி

‘ரேபிட்’ எனப்படும் செஸ் அதிவேக பிரிவில் பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண் என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க தடத்தை பதித்தார் கொனேரு ஹம்பி. ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலக ரேபிட் செஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய கொனேரு ஹம்பி, சீனாவின் லீ டிங்ஜியை எதிர்கொண்டார். ஆட்டம் டிரா ஆனது. 'டை பிரேக்கர்' முறையில் 2-1 என்ற கணக்கில் வென்று உலக சாம்பியன் பட்டத்தை கொனேரு ஹம்பி தனதாக்கிக் கொண்டார்.

* வினேஷ் போகத்

காமன்வெல்த், ஆசிய விளையாட்டு என இரு பெரும் போட்டிகளிலும் வெற்றிபெற்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். இந்த ஆண்டு ரோம் ரேங்கிங் சீரிஸிலும் தங்கம் வென்று முத்திரை பதித்தார். இந்திய விளையாட்டுத் துறை உயரிய விருதான 'ராஜீவ் காந்தி கேல் ரத்னா' விருதை இந்த ஆண்டு பெற்றார்.

* ராணி ராம்பால்

மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் இந்த ஆண்டு விருதுகளால் பெரும் கவுரவத்தைப் பெற்றார். ஆண்டின் தொடக்கத்தில் உலக விளையாட்டு அமைப்பு சார்பில் ஓட்டெடுப்பு மூலம் உலகின் சிறந்த வீராங்கனை விருது, மத்திய அரசின் பத்ம விருது, ஆண்டின் பிற்பகுதியில் உயரிய விளையாட்டு விருதான 'ராஜீவ் காந்தி கேல் ரத்னா' விருதுகளை ராணி ராம்பால் பெற்றார்.

* லால்ரெம்சியாமி

இந்தியாவைச் சேர்ந்த 19 வயது ஹாக்கி வீராங்கனை லால்ரெம்சியாமி சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் சார்பில் கடந்த ஆண்டுக்கான ‘ரைசிங் ஸ்டார்’ விருதைப் பெற்றார். இந்த விருதைப் பெற்றுள்ள முதல் இந்திய வீராங்கனையான இவர், இந்திய மகளிர் ஹாக்கி அணியின் சிறந்த முன்களத் தடுப்பு வீராங்கனை.

* அபூர்வி சண்டேலா

துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் கவனம்பெறத் தொடங்கியிருப்பவர் அபூர்வி சண்டேலா. 2019இல் டெல்லியில் நடைபெற்ற உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடும் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்று கணக்கைத் தொடங்கிய அபூர்வி, இந்த ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் நான்காம் இடம் பிடித்து, 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இடத்தை உறுதிசெய்துகொண்டார்.

* அங்கிதா ரெய்னா

தேசிய அளவில் டென்னிஸில் பல முத்திரைகளைப் பதித்துள்ள அங்கிதா, சர்வதேச அளவிலும் இந்த ஆண்டு வெற்றிகளைப் பெற்று கவனம் ஈர்த்தார். பிரெஞ்சு ஓபனில் முதல் சுற்றில் வெற்றிபெற்று நம்பிக்கை ஊட்டினார். தாய்லாந்து சர்வதேச டென்னிஸ் தொடரிலும் துபாய் சர்வதேச டென்னிஸ் தொடரிலும் மகளிர் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றார். சானியா மிர்ஸாவுக்கு அடுத்தபடியாக இவர் கவனம்பெறத் தொடங்கியிருக்கிறார்.

* அன்னு ராணி

ஈட்டி எறிதல் போட்டிகளில் இந்தியாவின் முகமாக மாறிவருபவர் அன்னு ராணி. 2019இல் தேசிய அளவில் தன்னுடைய சொந்த சாதனையை முறியடித்து, ஈட்டி எறிதலில் புதிய உச்சத்தைத் தொட்டார். உலகத் தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் போட்டியில் எட்டாம் இடத்தைப் பிடித்த அன்னு ராணி, 2021 ஒலிம்பிக் போட்டிக்கு இடத்தை உறுதிசெய்வதற்கான பந்தயத்தில் முன்னணியில் உள்ளார்.

* நசோமி ஒக்குஹாரா

பாட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் எப்போதும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருப்பவர் ஜப்பானைச் சேர்ந்த நசோமி. பல சூப்பர் சீரிஸ் பட்டங்களை வென்றிருக்கும் நசோமி, புகழ்பெற்ற டென்மார்க் ஓபன் சீரிஸில் முதன்முறையாகத் தங்கம் வென்றார். கடந்த ஆண்டு இதே தொடரில் வெள்ளி வென்றிருந்த அவர், இந்த ஆண்டு சாம்பியன் அந்தஸ்தைப் பெற்றுப் பெருமை தேடிக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x