Published : 18 Dec 2020 10:29 AM
Last Updated : 18 Dec 2020 10:29 AM

கோடம்பாக்கம் சந்திப்பு: அந்தாதூனில் சந்தோஷ் நாராயணன்!

ஸ்ரீராம் ராகவன் எழுத்து, இயக்கத்தில் கடந்த 2018-ல் வெளியாகி மூன்று தேசிய விருதுகளை அள்ளிய இந்திப் படம் 'அந்தாதூன்'. வசூல், விமர்சனம் இரண்டிலுமே கலக்கிய இதன் தமிழ் மறுஆக்கத்தில், பிரசாந்த்தும் சிம்ரனும் நடிக்கிறார்கள். ஜே.ஜே.பிரெட்ரிக் இயக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

விஜய்குமார் பராக்!

உண்மைச் சம்பவங்களை திரைக்காக அதிகம் திரிக்காமல், 'உறியடி' , 'உறியடி 2' ஆகிய இரு படங்களை எழுதி, இயக்கி, நடித்தவர் விஜய்குமார். சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கும் ‘சூரரைப் போற்று' படத்தின் வசனகர்த்தா இவர்தான். தற்போது, தனது உதவி இயக்குநர் அப்பாஸ் என்பவர் இயக்கத்தில் ஒரு ஆக்ஷன் படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். பிரபலமான பல குறும்படங்களைத் தயாரித்த அனுபவத்துடன் ‘ரீல் குட் பிலிம்ஸ்’ சார்பில் ஆதித்யா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

தமிழ்ப் படங்களுக்கான போட்டி!

18-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, 2021 பிப்ரவரி 18 முதல் 25 வரை 8 நாள்கள் நடைபெற இருக்கிறது. இப்பட விழாவின் முக்கியமான அம்சங்களில் ஒன்று தமிழ்த் திரைப்படங்களுக்கான போட்டி. அதில் பங்கேற்க அனுப்பப்படும் திரைப்படங்கள், 2019 அக்டோபர் 16 முதல் 2020 அக்டோபர் 15 வரையிலான காலகட்டத்தில் தணிக்கைச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். www.icaf.in என்கிற இணையதளத்திலிருந்து படங்களை அனுப்புவதற்கான விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். படங்களை அனுப்பக் கடைசி நாள் ஜனவரி 9.

நயன்தாராவுடன் சமந்தா!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி - நயன்தாரா ஜோடியாக இணைந்த ‘நானும் ரவுடிதான்’ ஹிட்டடித்தது. தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்துக்காக இதே கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. கூடுதலாக சமந்தாவும் இணைந்திருக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டியோ சார்பில் லலித்குமாரும் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவனும் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

நடிப்புக்கு முன்னோட்டம்

‘சகாப்தம்’ என்கிற படத்தின் மூலம் கடந்த 2015-ல் கதாநாயகனாக அறிமுகமானார் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன். விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனும் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். அதற்கு முன்னோட்டம் போல், ‘என் உயிர் தோழா’ என்கிற தனியிசை வீடியோ பாடலில் நடித்து வெளியிட்டிருக்கிறார். வீடியோ பாடலுக்கு இசையமைத்திருப்பவர் ஜெஃப்ரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x