Last Updated : 17 Oct, 2015 11:33 AM

 

Published : 17 Oct 2015 11:33 AM
Last Updated : 17 Oct 2015 11:33 AM

மரங்களை இடம்மாற்றும் எந்திரம்

கட்டிட வேலைக்காக உலகம் முழுவதும் பல லட்சம் வெட்டப்படுகின்றன. இதனால் பெருமளவு இயற்கை வளம் குறைகிறது. மட்டுமல்லாது அதனால் நாம் வாழும் பூமி மறைமுகமாகப் பாதிக்கப்படுகிறது. மரங்கள் கட்டுமானப் பணிகளால் இரண்டு விதத்தில் பாதிக்கப்படுகின்றன. ஒன்று கட்டுமானப் பொருள்கள் தயாரிப்புக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. ஜன்னல், கதவு, அறைக்கலன்கள், அலங்காரப் பொருள்கள் தயாரிக்க மரங்கள் பெருமளவு பயன்படுகின்றன.

இதனால் மரங்கள் வெட்டப்படுகின்றன. இவை அல்லாது இடத் தேவைக்காக மரங்களை அழித்து அந்த இடத்தில் கட்டிடங்கள் எழுப்பப்படுகின்றன. இப்போது நகர மக்கள் தொகைப் பெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க அதற்குத் தகுந்தாற்போல் சாலைகளாஇ விரிவுபடுத்த வயதான பெருமரங்கள் வெட்டப்படுவதைப் பத்திரிகைச் செய்தி வாயிலாகக் கடந்து செல்கிறோம்.

சென்னை இன்றைக்கு இவ்வளவு பெரிய நகரமாகியதற்குப் பின்னால் மிகப் பெரிய இயற்கைப் படுகொலைகளும் நடந்துள்ளது. உதாரணமாக சமீப காலத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக அண்ணாநகர் அண்ணா வளைவு அருகில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதைச் சொல்லலாம். அவை சென்னை நகரவாசிகளுக்கு நிழல் தந்த அரு மரங்கள். வளைவுகளைக் காப்பாற்ற நடந்த முயற்சியில் சிறு அளவுகூட மரங்களுக்காகச் செய்யப்படவில்லை. மரங்கள் தயவுதாட்சண்யமில்லாமல் வெட்டப்படுவது நாமே நம் அழிவுக்குப் பாதை போடுவதற்குச் சமம். வீடுகள் கட்டப்படுவதற்கு இணையாக மரங்களும் வளர்க்கப்பட வேண்டும்.

இந்த விஷயத்தில் நாம் மேலை நாடுகளின் வழிமுறைகளைக் கடை பிடிக்கலாம். அங்கு வளர்ந்த ஒரு பெரும் மரத்தை வெட்டுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. நம் அண்டை மாநிலமான கேரளத்தில்கூட இந்த நடைமுறை இருக்கிறது. அங்கு மரம் வெட்டப்படுவதற்கு எதிர்ப்பு இருக்கிறது. அரசு நினைத்தாலும் மரங்களை அவ்வளவு எளிதாக வெட்ட முடியாது. இதற்காகத்தான் மரம் பிடுங்கும் எதிரங்கள் அங்குப் பெருமளவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

கான்கிரீட் ரெடி மிக்ஸர் போல் இருக்கும் ஒரு வண்டியின் பின் பக்கத்தில் பொருத்தப்பட்டிருக்கும் எந்திரம் மரத்தை சட்டெனப் பிடுங்கி வேறு இடத்தில் நட்டுவிடுகின்றன. ட்ரீ ஸ்பேட் என அழைக்கப்படும் இந்த எந்திரங்கள் வெளிநாடுகளில் பெருமளவு பயன்படத் தொடங்கியிருக்கின்றன. பக்க வேர்களைக் கத்தரித்து ஆணிவேருடன் இந்த எந்திரம் பிடுங்கிவிடுகிறது.

எந்திரம் ட்ரக்குடன் இணைக்கப்பட்டுள்ளது, பிடுங்கப்பட்ட மரத்தை வெகுதூரம் வரை எடுத்துச் செல்லலாம். இந்த எந்திரம் இப்போது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளாது. இந்த எந்திரம் கொண்டு குஜராத்தில் சில மரங்களைப் பிடுங்கி வேறு இடங்களில் நட்டுள்ளார்கள். இதன் பயன்பாடு அதிகமானால் பல மரங்கள் காக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x