Last Updated : 09 Dec, 2020 03:14 AM

 

Published : 09 Dec 2020 03:14 AM
Last Updated : 09 Dec 2020 03:14 AM

எட்டுத் திக்கும் சிறகடிக்கும் கதைகள் - இந்தியா: கிணற்றில் அகப்பட்ட திருடன்

விவசாயி சோமன் புத்திசாலி. அவர் திருவிழாவுக்குச் சென்று திரும்பும்போது இரவு மிகவும் தாமதமாகிவிட்டது. அவரது வீட்டின் சமையலறைக் கதவு திறந்துகிடந்தது. அதிர்ச்சியடைந்துவிட்டார்.

ஜன்னல் வழியே உள்ளே பார்த்தார். ஒரு திருடன்.

‘இப்போது வீட்டுக்குள் போகக் கூடாது. திருடனிடம் ஆயுதம் இருக்கலாம். அவனைத் தந்திரமாகத்தான் பிடிக்க வேண்டும்’ என்று நினைத்தார் சோமன்.

அவர் ஓசை எழுப்பாமல் வீட்டின் மேற்கூரை மீது ஏறினார். ஓட்டைப் பிரித்து உள்ளே தலை நீட்டித் திருடனை அழைத்தார்: “ஓ, நண்பனே!”

திடுக்கிட்டு மேலே பார்த்தான் திருடன். சோமன் சொன்னார்: “பயப்படாதே, நானும் திருடன்தான். இந்த வீட்டின் உரிமையாளர் பயணம் சென்றிருக்கிறார். நமக்கு இது நல்ல வாய்ப்புதான்!”

திருடனுக்குக் கோபம் வந்தது.

“நான் இந்த வீட்டை நீண்ட நாட்களாகப் பார்த்து வைத்து இப்போதுதான் திருட வருகிறேன். நீ என்னுடன் போட்டிக்கு வந்துவிட்டாயா? போ, வேறு எங்காவது போய்த் திருடு.”

“நான் போகிறேன். ஆனால், இந்த வீட்டுக்காரர் எங்கே தங்கம் புதைத்து வைத்திருக்கிறார் என்று எனக்குத் தெரியும்!”

திருடன் பதற்றத்துடன் சொன்னான்: “போகாதே, நண்பனே. அந்தத் தங்கத்தில் எனக்கும் பங்கு தந்தால், நானே தோண்டி எடுத்துக் கொடுக்கிறேன்!”

“அப்படி என்றால் வெளியே வா. வீட்டுக்காரர் தங்கத்தை எல்லாம் இரும்புப் பெட்டியில் போட்டு, வீட்டின் பின்பக்கம் இருக்கும் தோட்டத்தில்தான் புதைத்திருக்கிறார்!”

இருவரும் தோட்டத்துக்குச் சென்றார்கள். ஒரு மண்வெட்டியை எடுத்து திருடனிடம் கொடுத்த சோமன், ஓர் இடத்தைக் காட்டிச் சொன்னார்:

“இந்த இடத்தில்தான் அந்தப் பெட்டி புதைக்கப்பட்டிருக்கிறது!”

திருடன் நிலத்தைத் தோண்டத் தொடங்கினான்.

வெகுநேரம் தோண்டித் தோண்டி, அந்த இடம் மிகவும் ஆழமான குழியாகப் போய்விட்டது. வெட்டிய மண்ணை எல்லாம் கயிறு கட்டிய வாளியில் போடச் செய்து, இழுத்து மேலே குவித்தார் சோமன்.

பெட்டி ஒன்றும் காணாமல் திருடன் எரிச்சலடைந்தான். அப்போது சோமன் சொன்னார்: “வீட்டுக்காரர் இன்னும் ஆழத்தில் பெட்டியைப் புதைத்திருக்கிறார். அது இந்த இடத்தில்தான் இருக்கிறது என்று எனக்கு நன்றாகத் தெரியும். நீ மேலும் ஆழமாகத் தோண்ட வேண்டும்!”

அவரை நம்பிய திருடன் உற்சாகத்துடன் மேலும் ஆழமாகத் தோண்டினான். இடைவிடாமல் தோண்டிக்கொண்டே இருந்தான். பொழுது விடிய ஆரம்பித்துவிட்டது.

முற்றிலும் களைத்துத் துவண்டுபோன திருடன் குழிக்குள் இருந்து சொன்னான்: “ஐயோ... இனிமேலும் என்னால் தோண்ட முடியாது! தோண்டித் தோண்டி குழியில் தண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது. நீங்கள் சொன்ன பெட்டி எங்கே?”

அதைக் கேட்டு சத்தமாகச் சிரித்தார் சோமன். திருடன் திகைத்து நின்றான்.

“இந்த இடத்தில் ஒரு கிணறு தோண்ட வேண்டும் என்று நான் விரும்பினேன். அது இன்று நடந்துவிட்டது! இந்த வீட்டுக்கும் நிலத்துக்கும் உரிமையாளன் நான்தான்!”

உடனடியாக அங்கிருந்து தப்பிக்க முயன்றான் திருடன். ஆனால், அவன் பெரிய குழிக்குள் அல்லவா இருக்கிறான். மற்றொருவர் உதவி இல்லாமல் மேலே வர முடியாதே!

சோமன் ஊர்க்காரர்களின் உதவியுடன் திருடனைக் குழிக்குள் இருந்து மீட்டார். பிறகு அவன் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x