Published : 08 Dec 2020 03:13 AM
Last Updated : 08 Dec 2020 03:13 AM

எப்படி வருகிறார்கள் அம்பயர்கள்?

கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக ஆடுபவர்களுக்கு மாவட்ட அணி, மாநில அணி, தேசிய அணி, ஐ.பி.எல். போன்றவற்றில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அம்பயர்கள் எப்படி வருகிறார்கள்?

அம்பயர்களில் மாநில அளவு, தேசிய அளவு என்று இரண்டு பிரிவுகள் உண்டு. இதற்கு நுழைவுத் தேர்வும் உண்டு. பள்ளி இறுதி வகுப்பை முடித்த யார் வேண்டுமானாலும் அம்பயர் பணிக்கான நுழைவுத் தேர்வை எழுதலாம்.

தேர்வுகள்

இந்தத் தேர்வில் கிரிக்கெட் விதிகளைப் பற்றி கேள்விகள் கேட்கப்படும். கிரிக்கெட் விளையாட்டு விதிகளுக்கென்று தனிப் புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை ஆழமாகப் படித்தால் மட்டுமே இந்தத் தேர்வை எழுத முடியும். சின்னச்சின்ன தவறுகள்கூட உங்கள் தேர்வு வெற்றியைப் பதம் பார்த்துவிடும். காரணம், அம்பயர் பணிக்கு இருக்கும் கடும் போட்டி. இந்தத் தேர்வில் மிக மிக அதிகமான மதிப்பெண் பெற்றவர்களைத்தான் அடுத்த கட்டத்துக்கு அனுமதிப்பார்கள்.

அடுத்து செயல்முறைத் தேர்வு. இதற்காக ஒரு ஒத்திகை கிரிக்கெட் போட்டி (mock match) நடத்தப்பட்டு, அதற்கு அம்பயரிங் செய்ய வேண்டும். போட்டியின்போது விளையாட்டுவீரர்கள், ஏற்கெனவே திட்டமிட்ட சில தவறுகளைச் செய்வார்கள். அவற்றை ‘அம்பயர்’ எந்த அளவு உன்னிப்பாகக் கவனித்து தீர்ப்பை சரியாக அறிவிக்கிறார் என்பதற்கேற்ப மதிப்பெண் வழங்கப்படும்.

சலுகைகள்

அதற்கு அடுத்து நேர்முகத் தேர்வு. அதிலும் தேர்ச்சி பெற வேண்டும். அம்பயராக இருக்க வேண்டுமென்றால், கிரிக்கெட் போட்டிகளில் அதற்கு முன்னால் விளையாடியிருக்க வேண்டுமென்கிற கட்டாயமெல்லாம் இல்லை. அது ஒரு கூடுதல் தகுதி, அவ்வளவுதான்.

என்றாலும், தேசிய அளவில் அம்பயர்களைத் தேர்ந்தெடுக்கும்போது ஏற்கெனவே கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர்களுக்குச் சில சலுகைகள் உண்டு. முப்பது ரஞ்சிக் கோப்பை பந்தயங்களிலோ, ஏதாவது ஒரு

டெஸ்ட் பந்தயத்திலோ (அதில் பதினோரு பேரில் ஒருவராக இருந்திருக்க வேண்டும்) விளையாடி இருந்தால் அம்பயராக அனுமதிக்கப்படுவார்.

எதற்காக இந்தச் சலுகை? விளையாட்டு வீரராக இருந்தால், அவருக்கு ஆட்டத்தைப் பற்றி கூடுதலாகத் தெரிந்திருக்கும். ஆட்டக்காரர்களின் பலமும் பலவீனமும் அனுபவபூர்வமாகவே உணர்ந்திருப்பதால் முடிவெடுப்பதில் மேலும் துல்லியம் இருக்கக்கூடும். தவிர, ஏற்கெனவே பிரபலமானவராக இருப்பதால், விளையாட்டு வீரர்களுக்கிடையே அவருக்கு அங்கீகாரமும் ஏற்றுக்கொள்ளப்படும் தன்மையும் அதிகம் இருக்கும்.

தேசிய அளவில் அம்பயராக 55 வயதுவரை மட்டுமே இருக்கலாம். மாநில அளவில் 60 வயது வரை. முறையான மருத்துவச் சான்றிதழ் பெற்றால், அதற்கு மேலும்கூட அம்பயராகத் தொடரலாம்.

பகுதி நேரம்

ஒவ்வொரு பந்தயத்தின் முடிவிலும் அணிகளின் கேப்டன்கள், அணிகளின் மேனேஜர்கள் அம்பயர் குறித்த அறிக்கையை கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்புவார்கள். இதைக் கொண்டு அவர்களின் தரம் நிர்ணயிக்கப்படும். அம்பயர்களில் ஏ, பி என்று இரண்டு பிரிவு உண்டு. ஏ கிரேடு அம்பயர், நடுவராகப் பணிபுரியும் ஒரு நாளைக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறுகிறார்.

அம்பயராக விரும்புபவர்கள் இதை முழுநேரத் தொழிலாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. வேறு வேலைகளில் இருந்துகொண்டே அம்பயர் பணியைச் செய்யலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x