Published : 02 Dec 2020 03:15 AM
Last Updated : 02 Dec 2020 03:15 AM

டிங்குவிடம் கேளுங்கள்: ஒரே மாதிரி 7 பேர்!

ஒரே மாதிரி 7 பேர் உலகத்தில் இருப்பார்கள் என்று கூறுவது உண்மையா, டிங்கு?

- தா. லோகேஸ்வரி, 10-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம்.

ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள், உடன்பிறந்தவர்கள், உறவினர்களில் ஒருவரின் சாயலில் இன்னொருவர் இருக்கலாம். ஆனால், ஒருவரைப்போல் அச்சு அசலாக இன்னொருவர் உலகின் வேறு பல பகுதிகளில் இருக்க வாய்ப்பில்லை. ஒருவரின் கை ரேகைபோல் இன்னொருவரின் கை ரேகைகூட இருப்பதில்லை. பிறகு எப்படி ஒரே மாதிரி ஏழு பேர் இருக்க முடியும்? உங்களைப் போல் இன்னும் 6 பேர் உலகில் இருக்க வாய்ப்பில்லை, லோகேஸ்வரி.

ரயில் போக்குவரத்து இல்லாத நாடுகளும் உண்டா? எதனால் அந்த நாடுகளில் ரயில் போக்குவரத்து இல்லை, டிங்கு?

- ஜி. இனியா, 4-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி.

ரயில் சேவை இல்லாத நாடுகளும் இருக்கின்றன. அன்டோரா, பூடான், சைப்ரஸ், ஐஸ்லாந்து, குவைத், மால்டா, சோமாலியா, ருவாண்டா, பப்புவா நியூ கினியா உட்பட 27 நாடுகளில் ரயில் சேவை இல்லை. அதற்கு முக்கியமான காரணம், ரயில் போக்குவரத்துக்குப் போதிய நிதி இல்லாமை. ஐஸ்லாந்து போன்ற நாடுகளில் மோசமான பருவநிலை காரணமாக ரயில் சேவை இல்லை. குவைத் போன்ற எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் சாலைப் போக்குவரத்து அதிகம் இருப்பதால், ரயிலுக்கான தேவை அதிகம் இல்லை. ஆனால், சாலைகளில் வாகன நெரிசலைக் குறைக்கும் விதத்தில் தற்போது சில நாடுகளில் ரயில் சேவை ஆரம்பிக்கும் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது, இனியா.

ஜோ பைடன் வெற்றி பெற்றி பெற்றும் ஏன் பதவி ஏற்கவில்லை, டிங்கு?

- ஆர், பாலகிருஷ்ணன், 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, மன்னார்குடி.

அமெரிக்கத் தேர்தல் முடிந்து வரக்கூடிய ஜனவரி மாதம் 20-ம் தேதி நண்பகல் நேரத்திலிருந்துதான் புதிய அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் தொடங்குகிறது என்று அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. அதனால்தான் ஜோ பைடன் வெற்றி பெற்றாலும் உடனடியாகப் பதவி ஏற்க முடியவில்லை. ஜனவரி 20 வரை தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பே பதவியில் இருப்பார், பாலகிருஷ்ணன்.

புயலுக்கு நிவர் என்று பெயர் வைத்த நாடு எது டிங்கு?

- என். லோகேஷ், 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், கத்தார், பாகிஸ்தான், செளதி அரேபியா, இலங்கை, யேமன், ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம், தாய்லாந்து ஆகிய 13 நாடுகளுக்கான சூறாவளி, புயல் உருவாக்கம் குறித்த எச்சரிக்கைகளை வழங்கும் மையமாக இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை விளங்குகிறது.

2004-ம் ஆண்டு முதல் அரபிக் கடல், வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு இந்த 13 நாடுகள்தாம் பெயர்களைச் சூட்டுகின்றன. அரசியல், கலாச்சாரம், மதநம்பிக்கை போன்ற எந்த அடையாளமும் இல்லாமல் பெயர்களை வைக்க வேண்டும். சிறிய பெயராக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. ஒவ்வொரு நாடும் 13 பெயர்களைப் பரிந்துரைக்கும். இது சுழற்சி முறையில் வைக்கப்படும். நிவர் புயலுக்குப் பெயர் வைத்த நாடு ஈரான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x