Last Updated : 01 Dec, 2020 03:15 AM

 

Published : 01 Dec 2020 03:15 AM
Last Updated : 01 Dec 2020 03:15 AM

ஆங்கிலப் புலமையை வளர்த்துக்கொள்வது எப்படி?

ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு ஆங்கிலப் புலமை ஒரு பொருட்டல்ல. கல்விக்கும் தொழிலுக்கும் தாய்மொழியே அவர்களுக்குப் போதுமானதாக உள்ளது. இந்திய நிலைமை அப்படியல்ல. இங்கே ஆங்கிலம் தவிர்க்க முடியாத மொழி. பல மொழி பேசும் மக்களைக்கொண்ட நாடாக இந்தியா இருப்பதால், ஆங்கிலமே வெவ்வேறு மொழி பேசும் மக்களை இணைக்கிறது.

அத்துடன், இந்தியாவிலிருந்து படிப்புக்காகவோ வேலைக்காகவோ வெளிநாடுகளுக்குச் செல்லும் போக்கு அதிகம் உள்ளது. அதற்குக் கல்வி அறிவும் தொழில் அறிவும் மட்டும் போதாது. ஆங்கில மொழிப் புலமையை நிரூபிக்கும்வண்ணம் IELTS போன்ற தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம். அதனால்தான், ஓராண்டுக்குச் சுமார் 30 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதுகிறார்கள்.

ஐ.இ.எல்.டி.எஸ் (IELTS) என்பது என்ன?

சர்வதேச அளவில் ஒருவரின் ஆங்கில மொழிப் புலமையைப் பரிசோதித்து மதிப்பீடு செய்யும் அமைப்பே இந்த ஐ.இ.எல்.டி.எஸ். இந்த மதிப்பீடின்றி மேலை நாட்டுக் கல்லூரிகளில் நுழையவே முடியாது. இந்தத் தேர்வை எழுதுவதற்கு சுமார் ரூ. 11,000 கட்டணம் செலுத்த வேண்டும்.

கேட்டல், வாசித்தல், எழுதுதல், பேசுதல் என்று இந்தத் தேர்வு நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். பேசுதல் தவிர்த்த மற்ற மூன்று பகுதிகளுக்கான தேர்வுகள் ஒரே நாளில் நடைபெறும்.

கேட்கும் பகுதி

கேட்கும் பகுதிக்கு 30 நிமிடங்கள் தரப்படும். அந்தப் பகுதியில் நான்கு ஒலிப்பதிவுகள் ஒலிபரப்பப்படும். அந்த ஒலிப்பதிவுகளில் நடைபெறும் உரையாடல்களைச் சார்ந்து கேள்விகள் கேட்கப்படும். அதற்கான பதிலை நீங்கள் புரிந்துகொண்டு தேர்வுசெய்யும் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும். ஆங்கில மொழிப் படங்களை சப்-டைட்டில் இல்லாமல் பார்த்துப் பழகினால் இதை எதிர்கொள்வது எளிதாக இருக்கும்.

வாசிப்புப் பகுதி

இந்தப் பகுதிக்கு 60 நிமிடங்கள் தரப்படும். நீண்ட கட்டுரையும் குறுகிய கட்டுரையும் வாசிப்பதற்குக் கொடுக்கப்படும். பின்பு அதிலிருந்து 40 கேள்விகள் கேட்கப்படும். உங்கள் கிரகிக்கும் திறனையும் வாசிக்கும் தன்மையையும் அந்தக் கட்டுரையில் பொதிந்திருக்கும் கருத்துகளை நீங்கள் புரிந்துகொள்ளும் பாங்கையும் பரிசோதிக்கும்வண்ணம் அந்தக் கேள்விகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆங்கிலப் புத்தக வாசிப்பைப் பழக்கமாக்கிக்கொள்வதன்மூலம் இதை எளிதாக எதிர்கொள்ளலாம்.

எழுத்துப் பகுதி

எழுதுதல் பகுதியில் உங்கள் இலக்கணத் திறனும் நீங்கள் பயன்படுத்தும் சொற்களின் செறிவும் மதிப்பீடு செய்யப்படும். இந்தப் பகுதிக்கு 60 நிமிடங்கள் தரப்படும்.

இது இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் உங்களுக்கு வரைபடமோ, கிராஃபோ, சார்ட்டோ, அட்டவணையோ தரப்படும். அதில் இருக்கும் தரவுகளைப் புரிந்துகொண்டு அவற்றைப் பற்றி விளக்கம் அளிக்கவோ விவரிக்கவோ வேண்டும்.

இரண்டாம் பகுதியில் கொடுக்கப்படும் தலைப்புக்கு ஏற்ப நீங்கள் கட்டுரை எழுத வேண்டும். வாசிக்கும் பழக்கமும் ஆங்கிலத்தில் வலைப்பூ எழுதும் பழக்கமும் உள்ளவர்களுக்கு இந்தப் பகுதி மிகவும் எளிதாக இருக்கும்.

பேச்சுப் பகுதி

இந்தப் பகுதிக்கு அதிகபட்சம் 15 நிமிடங்கள் தரப்படும். இந்தத் தேர்வில் மட்டும்தான் நீங்கள் தேர்வாளரை எதிர்கொள்வீர்கள். அவரும் ஒரு நண்பரைப் போலத்தான் இருப்பார். இது மொத்தம் மூன்று பகுதிகளைக் கொண்டது.

முதல் பகுதி அறிமுகப் படலம். அப்போது உங்களைப் பற்றி சுமார் ஐந்து நிமிடங்கள் பேச வேண்டும். இரண்டாம் பகுதியில் உங்களிடம் ஒரு சீட்டு தரப்படும். ஒரு நிமிட அவகாசத்தில் அதைப் படித்துத் தயார்செய்துகொள்ள வேண்டும். பின்பு அதைப் பற்றி இரண்டு நிமிடங்களுக்கு நீங்கள் பேச வேண்டும். மூன்றாம் பகுதியில் நீங்கள் பேசியதன் அடிப்படையில் தேர்வாளருடனான உரையாடலாக இருக்கும்.

ஆங்கிலத்தில் பேசுவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், பேசும் கருத்திலும் அதை உணர்ச்சிகரமாக ஏற்றஇறக்கத்துடன் பேசுவதிலும் கவனம் செலுத்துவது நல்ல மதிப்பெண்களைப் பெற்றுத் தரும்.

மதிப்பெண்கள் எவ்வளவு தேவை

இதற்கு மதிப்பெண்கள் பூஜ்யம் முதல் ஒன்பதுவரை இருக்கும். நான்கு பகுதிகளுக்கும் தனித்தனியாக மதிப்பெண்கள் வழங்கப்படும். அந்த நான்கு பகுதிகளில் நீங்கள் பெற்ற மதிப்பெண்களின் சராசரியே உங்கள் ஒட்டுமொத்த மதிப்பெண். அந்தச் சராசரி ஏழுக்கு மேல் இருந்தால்தான், நல்ல பல்கலைக்கழகத்தில் உங்களால் சேர முடியும்.

எங்குப் படிக்கலாம்?

தேர்வுக் கட்டணம் செலுத்தியவுடன் உங்களுக்கு அளிக்கப்படும் புத்தகமும் சிடியும் பயிற்சிக்குப் போதுமான ஒன்றுதான். கூடுதல் பயிற்சிக்குக் கீழே உள்ள இணைய வகுப்புகளைப் பயன்படுத்தலாம்.

https://www.britishcouncil.in/exam/ielts

http://learn.edx.org/ielts/

https://www.britishcouncil.it/en/exam/ielts/courses-resources/road-to-ielts

https://www.udemy.com/understanding-ielts-exam-the-basics/

https://www.futurelearn.com/courses/understanding-ielts

https://www.idp.com/cambodia/ielts/ielts-tips/free-ielts-preparation

ஆங்கில மொழியில் நல்ல ஆளுமை கொண்டவர்கள்கூடத் தேர்வு பயத்தில் நிறையச் செலவுசெய்து பயிற்சி வகுப்புகளுக்குச் செல்கிறார்கள். ஆனால், செலவின்றி நல்ல மதிப்பெண்களை எளிதாகப் பெறுவதற்கு மேற்கண்ட இணைய வகுப்புகளும் செயலிகளும் உதவும்.

கூச்சம் வேண்டாம்

ஆங்கிலத்தில் பேசும்போது, சொல்லவரும் கருத்தில்தான் நமது கவனம் இருக்க வேண்டும். தொடக்கத்தில் மொழியின் இலக்கணத்திலோ உச்சரிப்பிலோ கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஆங்கிலத்தில் பேசும்போது எழும் கூச்சத்தை / அச்சத்தைக் கடப்பதற்கு இதை முயன்றாலே போதும். மொழி என்பது வெறும் ஊடகமே. அறிவுக்கும் மொழியின் புலமைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. இந்த அடிப்படை புரிதல் இருக்குமேயானால், ஆங்கிலப் புலமை நமக்கு எளிதில் கைகூடிவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x