Last Updated : 12 Oct, 2015 10:15 AM

 

Published : 12 Oct 2015 10:15 AM
Last Updated : 12 Oct 2015 10:15 AM

இந்தியாவில் மீண்டும் பியூஜியாட்!

பிரான்ஸைச் சேர்ந்த கார் தயாரிப்பில் முன்னணியில் திகழும் பிஎஸ்ஏ பியூஜியாட் சிட்ரோயன் நிறுவனம் இந்தியாவில் மீண்டும் தடம் பதிக்கத் திட்டமிட்டுள்ளது.

இம்முறை டாடா நிறுவனத்துடன் கைகோர்த்து களம் காண முடிவு செய்துள்ளது. இரு நிறுவனங்களி டையிலான பேச்சுவார்த்தை மிகவும் முன்னேறிய நிலையை எட்டியுள்ளது.

இரு நிறுவனங்களும் கார் இன்ஜின் தொழில் நுட்பத்தைப் பகிர்ந்துகொள்ள திட்டமிட்டுள்ளன.

டாடா நிறுவனத்துடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் பட்சத்தில் பியூஜியாட் கார்கள் குஜராத்தில் டாடா நிறுவனத்துக்குச் சொந்தமான ஆலையில் தயாராகும்.

இந்த ஆலையில்தான் நானோ கார்கள் தயாரிக்கப்படுகின்றன.

நானோ கார்கள் விற்பனை சரிந்து வரும் நிலையில் இந்த ஆலையில் பிரான்ஸின் பியூஜியாட் கார்களைத் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இரு நிறுவனங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஒப்பந்தம் உருவானால் இந்தியாவில் பியூஜியாட் 208 ஹாட்ச்பேக், 308 செடான் மற்றும் 2008 கிராஸ் ஓவர் மாடல் கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

ஏற்கெனவே 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியச் சந்தையில் தடம் பதித்த பியூஜியாட் நிறுவனம் பின்னர் இந்தியாவிலிருந்து வெளியேறியது. தற்போது மீண்டும் இந்தியாவில் தடம் பதிக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் மிகவும் பிரபலமாகத் திகழும் பிராண்டுடன் ஒப்பந்தம் செய்ய முடிவு செய்து டாடா நிறுவனத்தைத் தேர்வு செய்ததாகத் தெரிகிறது.

ஒப்பந்தம் தொடர்பாக பியூஜியாட் நிறுவனத்தின் இந்திய பசிபிக் பிராந்திய தலைவர் இமானுவேல் டெலே, டாடா குழுமத்தைச் சேர்ந்த உற்பத்திப் பிரிவு தலைவர்களுடனும், புராடெக்ட் பொறியியல் பிரிவுத் தலைவர் டிம் லோவர்டன் மற்றும் குழுமத்தின் தலைவர் சைரஸ் மிஸ்திரியுடனும் பேச்சு நடத்தியுள்ளார்.

ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் பிராங்பர்டில் ஆட்டோ மொபைல் கண்காட்சியின்போது நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா மோட்டார்ஸ் தவிர மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்துடனும் பியூஜியாட் பேச்சு நடத்தியுள்ளது. பியூஜியாட் நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனத்துடன் மஹிந்திரா ஒப்பந்தம் செய்துள்ளது.

இருப்பினும் கார் தயாரிப்பில் டாடா நிறுவனத்துடன் பியூஜியாட் கைகோர்ப்பதற்கான வாய்ப்புகள் பிரகாச மடைந்துள்ளன. ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனங்களுடனும் பியூஜியாட் நிறுவனம் பேச்சு நடத்தியுள்ளது.

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் அம்பாசிடர் கார் உற்பத்தியை கடந்த ஆண்டு நிறுத்திவிட்டது. இதனால் அந்த ஆலையில் பியூஜியாட் கார்களை தயாரிக்கலாமா என்பது குறித்தும் ஆராயப்படுகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் மாநிலம் சனந்த் நகரில் ஆலை அமைக்க பியூஜியாட் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால் அப்போது ஐரோப்பிய பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்குகள் கடும் சரிவைச் சந்தித்ததால் இந்திய ஆலை தயாரிப்பை அந்நிறுவனம் ஒத்திப் போட்டது.

டாடா நிறுவனத்துடனான ஒப்பந்த மானது, சனந்த் நகரில் உள்ள நானோ தயாரிப்பு ஆலையில் பியூஜியாட் நிறுவன தயாரிப்புகளை ஒப்பந்த அடிப்படையில் தயாரித்து அளிப்பதாக இருக்கும் எனத் தெரிகிறது. அத்துடன் இன்ஜின் தொழில் நுட்பத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பாக இருக்கும் என கருதப்படுகிறது.

இதன் மூலம் குறைந்த முதலீட்டில் இந்தியாவில் தடம் பதிக்க பியூஜியாட் திட்டமிட்டுள்ளது. அதேசமயம் பியூஜியாட் நிறுவனத்தின் இன்ஜின் தொழில்நுட்பம் டாடா நிறுவனத்துக்குக் கிடைக்கும். இதன் மூலம் எதிர்கால டாடா கார்களுக்கு இந்த நுட்பம் பயனுள் ளதாக இருக்கும்.

ஆனால் இதற்கு முன்பு டாடா நிறுவனம் 2007-2008-ம் ஆண்டுகளில் பியட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. ஆனால் அந்த ஒப்பந்தம் சரியாக நிறைவேறவில்லை. விநியோகம் மற்றும் சேவை வழங்குவதில் ஒப்பந்தம் சரியாக நிறைவேற்றப்படாததால் 2012-ம் ஆண்டில் ஒப்பந்தம் முறிந்தது. ஆனால் பியூஜியாட் நிறுவனம் டாடா நிறுவனத்துடன் கைகோர்க்கும்பட் சத்தில் தனது தயாரிப்பை இந்தியச் சந்தையில் மிக எளிதாக விற்பனை செய்ய முடியும்.

புதிதாக ஆலை தொடங்கி அதை விற்பனை செய்வதற்கு டீலர்களை நியமிப்பது உள்ளிட்டவற்றுக்கு குறைந்தது 100 கோடி டாலர் வரை செலவிட வேண்டியிருக்கும். ஆனால் இந்த ஒப்பந்தத்துக்கு அதிக முதலீடு தேவைப்படாது.

மேலும் டாடா நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களுக்குத் தேவைப்படும் 2 லிட்டர் டீசல் இன்ஜின் நுட்பத்தை பியூஜியாட் அளிக்க முன் வரும். இந்தியாவில் தடம் பதிக்க திட்டமிட்டுள்ள பியூஜியாட் தனது செயல்பாடுகளை ஸ்திரமாகவும், நீடித்த தாகவும் இருக்க டாடா நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் என்றே நிபுணர்கள் கருதுகின்றனர். ஆட்டோமொபைல் துறையில் இந்திய நிறுவனங்களுடன் கூட்டு சேரும் வெளிநாட்டு நிறுவனங்கள், ஓரளவு தங்கள் தயாரிப்புக்கு இந்தி யாவில் வரவேற்பு உள்ளது என்பதை அறிந்த பிறகு இந்திய கூட்டாளியை வெட்டிவிட்டுவிட்டு தனியாக ஆலைகளை அமைக்கின்றன.

பியூஜியாட் என்ன செய்யபோகிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

- எம்.ரமேஷ் ,
ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x