Published : 03 Oct 2015 11:14 AM
Last Updated : 03 Oct 2015 11:14 AM

மரபு மருத்துவம்: நல்லது செய்யும் ‘ஆவி

தமிழ் சினிமாவில் பேய்கள் ஆட்சி செலுத்தும் காலம் இது. இந்த நிலையில் ஆவி பிடித்தல் என்று சொன்னால், உடனடியாக எந்த ஆவியைப் பிடிக்க வேண்டும்? அது நல்ல ஆவியா, கெட்ட ஆவியா என்பது போன்ற கேள்விகள் எழலாம். மருத்துவரீதியில் ‘ஆவி பிடிப்பது' என்னும் சிகிச்சை முறை, நிச்சயம் உடலுக்கு நல்லதே செய்யும். கிட்டத்தட்ட செலவில்லாத, வீட்டிலேயே எல்லோரும் செய்யக்கூடிய, உடல்நல சிகிச்சை இது.

ஏழைகளின் மருந்து

அதிலும் குறிப்பாக வியர்வையின் சுவை உப்பா, இனிப்பா என்று தெரியாத, உடல் உழைப்பு மிக மிகக் குறைவாக உள்ள மனிதர்களுக்கும், வியர்வையின் வாசனையே அறியாத `ஏ.சி.’ வாசிகளுக்கும் ‘ஆவி பிடித்தல் அல்லது வேது பிடித்தல்' அத்தியாவசியமான சிகிச்சை. முக வீக்கம், நீர்க்கோவை, தலைபாரம் போன்ற உபாதைகளுக்கு ஆவி பிடித்து, அதிகமாகச் சேர்ந்துவிட்ட நீரை, வியர்வையின் மூலம் வெளியேற்றி குணம் பெறலாம். வேது பிடித்து நோய்களை விரட்டும் முறை, இன்றைக்கும் கிராம மக்களிடையே இருக்கிறது.

பொதுவாக நல்ல உடல்நிலையில் இருப்பவர்களும், குளிர்காலத்தில் மாதம் இரண்டு முறை, வெயில் காலத்தில் மாதம் ஒரு முறை சுத்தமான நீரில் வேப்பிலை, நொச்சி இலை ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து ஆவி பிடிப்பது, உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.

“இருமல், தும்மலுக்குப் போய் யாராவது பயப்படுவாங்களா? துளசி இல, ரெண்டு கிராம்பு, கொஞ்சம் தும்பப் பூவ சுடுதண்ணில போட்டு, கம்பளில உடம்பு முழுசாப் போத்தி, ஆவி புடிச்சி பாரு, இருமலும் தும்மலும் தெறிச்சி ஓடிடும்!” என்று இயற்கை மருத்துவக் குறிப்புகளை சட் சட்டென்று அன்றைய தாய்மார்கள் வழங்கிவந்தார்கள். ஆனால் இன்றைக்கு, சாதாரண இருமலுக்கும் தும்மலுக்கும்கூட மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே ‘ஆன்ட்டிபயாடிக்’ மருந்துகளைத் தேடி, பலரும் மருந்தகங்களில் தஞ்சமடைவதைப் பார்க்கிறோம்.

சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள வேது முறைகளை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவர சில எளிய குறிப்புகள்:

கப நோய்களுக்கு

உடலில் கபம் அதிகரித்து சளி, இருமல் தொல்லைப்படுத்தும்போது கற்பூரவள்ளி, துளசி, புதினா இலைகளை நசுக்கி, கொதிக்கும் நீரில் கலந்து ஆவி பிடித்தால் மூச்சுப் பாதையில் இறுகிக்கிடக்கும் கோழை இளகி, சுவாசம் தங்கு தடையின்றி உலா வரும். ஆஸ்துமா, சைனஸ் நோயால் துன்பப்படுபவர்கள், இந்த முறையை தாராளமாகப் பின்பற்றலாம். மேற்குறிப்பிட்ட மூலிகைகளில் காணப்படும் மருத்துவ குணம் கொண்ட ‘வாலடைல் ஆயில்' (Volatile oil), சுவாசப் பாதையில் தஞ்சமடைந்த நோய்க் கிருமிகளை அழித்துக் கோழையை வெளியேற்றும் (Expectorant action) செயலைச் செய்கின்றன.

தலையில் நீர்க்கோத்துக்கொண்டு தலை பாரத்தையும், வலியையும் கொடுக்கும் நீர்க்கோவை நோயைப் போக்க எலுமிச்சை விதையையும், மஞ்சள் பொடியையும் நீரில் கலந்து, கொதிக்க வைத்து ஆவி பிடிக்க, தலை பாரம் நீங்கும்.

சித்தர்களின் சூத்திரம்

‘யமக வெண்பாவில்' வேது பிடிக்கும் முறை பற்றி சித்தர் தேரையர் குறிப்பிட்டுள்ளார். ‘அரிசனை நொச்சிவெடி யட்டறல் செங்கல்லே’ என்ற வரி வேது பிடிக்க, மஞ்சள், நொச்சி, சாம்பிராணி, செங்கல் போன்றவற்றை பயன்படுத்தலாம் என்பதை உறுதிப்படுத்துகிறது. மஞ்சள் மற்றும் சாம்பிராணிக்கு ‘கிருமிநாசினி’ (anti-microbial) பண்பும், வீக்கமுறுக்கி (anti-inflammatory) தன்மையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. வேது பிடிக்கும் நீரில் செங்கல் சேர்த்துப் பயன்படுத்துவதால், நீரின் சூடு நீண்ட நேரம் நிலைத்திருப்பது மட்டுமன்றி, பல வகையான நீர்ப் பிணிகள் நீங்கும்.

தைல மர வேது

தைல மர இலைகளைச் சேர்த்துச் செய்யப்படும் வேது முறையால், நுரையீரல் பாதையில் உள்ள கிருமிகள் அழியும். தைல மர இலைகளுக்கு, தசை இறுக்கத்தைக் குறைக்கும் தன்மை இருப்பதால் (Anti-spasmodic action), சுவாசப் பாதையில் உண்டான இறுக்கம் தளர்வடையும். இதில் உள்ள ‘சினியோல்' (Cineole) எனும் வேதிப்பொருளுக்குக் கோழையை அகற்றும் தன்மை உண்டு.

வாத நோய்களை விரட்ட

உடல் வலி, தொல்லை தரும் வாயு நீங்க, அலமாரி டப்பாக்களில் குவிந்து கிடக்கும் வலி நிவாரணி மருந்துகளை `படக்’ என்று எடுத்து விழுங்காமல், சூடேற்றிய நீரை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி, நிறைய உப்பு சேர்த்து, அதிலிருந்து வரும் ஆவியை உடலில் படுமாறு செய்யலாம். வாத நோய்கள் நீங்க ஓமம், உப்பு, சுண்ணாம்பு, பெருங்காயம், திப்பிலி ஆகியவற்றை சிறிதளவு எடுத்து அரைத்து, நீரில் கலந்து கொதிக்க வைத்து, அந்த ஆவியை முகரலாம்.

உடல் முழுவதும் வியர்வை பிடிக்கும்போது, உடலின் வெப்பநிலை அதிகரிப்பதால், ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, உடல் முழுவதும் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி சீராகும்.

சருமம் மிளிர

ஆவி பிடிப்பதன் மூலம், தோலில் உள்ள அடைபட்ட துவாரங்கள் திறக்கப்பட்டு, கழிவு வெளியேறி உடலின் வெப்பநிலை சீரடையும். கழிவு நீக்கப்படுவதால், உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். மிதமான வெந்நீரில் ரோஜா இதழ்களையும், சந்தன பொடியையும் கலந்து வேது பிடித்துவர முகப்பருவின் தீவிரம் படிப்படியாகக் குறைந்து, முகம் பொலிவடையும். தலை, முகம் மட்டுமன்றி, உடல் முழுவதும் வியர்வை பிடிப்பதால், சருமத்தின் மேற்பரப்பில் உள்ள அசுத்தம் அகன்று, தேகம் புத்துயிர்ப் பெறும்.

வேது பிடிக்கக்கூடாதவர்கள்

வறண்ட தேகம் கொண்டவர்கள், சொரியாஸிஸ், கரப்பான், படை போன்ற தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்த மிகைஅழுத்தம் கொண்டவர்கள், இதய நோயாளிகள், காமாலை நோய்க்கு ஆட்பட்டவர்கள் வேது பிடிக்கக்கூடாது. பெண்கள் கர்ப்ப காலத்திலும், மாதவிடாய் காலங்களிலும் வேது பிடிப்பதை தவிர்ப்பது நல்லது.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: teddyvik@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x