என்.எல்.சி-யில் அப்ரண்டீஸ் பயிற்சி பெற அரிய வாய்ப்பு

என்.எல்.சி-யில் அப்ரண்டீஸ் பயிற்சி பெற அரிய வாய்ப்பு
Updated on
1 min read

மத்திய அரசின் ‘நவரத்னா’ அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்.எல்.சி.) அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தொழில் பழகுநர் பயிற்சிக்கு 180 பொறியியல் பட்டதாரிகளையும், 200 டிப்ளமா படித்தவர்களையும் தேர்வு செய்ய இருக்கிறது. சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கெமிக்கல், மைனிங், இன்ஸ்ட்ருமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பல்வேறு விதமான பாடப்பிரிவுகளில் இந்த காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டெக்னீசியன் அப்ரண்டீஸ் பயிற்சி பெற விரும்புவோர் சம்பந்தப்பட்ட பொறியியல் பாடத்தில் டிப்ளமாவும், அதேபோல், பட்டதாரி அப்ரண்டீஸ் பயிற்சிக்கு பொறியியல் பட்டமும் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் அவசியம். எஸ்.சி, எஸ்.டி வகுப்பினர் என்றால் 50 சதவீத மதிப்பெண்களே போதுமானவை.

யார் விண்ணப்பிக்கலாம்?

அப்ரண்டீஸ் பயிற்சிக் காலம் ஓராண்டு காலம் ஆகும். பயிற்சியின்போது பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,984-ம், டிப்ளமா முடித்தவர்களுக்கு ரூ.3,541-ம் உதவித்தொகையாக (Stipend) கிடைக்கும். 2013-ம் ஆண்டும் அதற்கு பின்னரும் படித்து முடித்தவர்கள் மட்டுமே பயிற்சிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடைவர்கள். டிப்ளமா அல்லது பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

அப்ரண்டீஸ் பயிற்சி பெற விரும்புவோர் அக்டோபர் 10-ந் தேதிக்குள் ஆன்லைனில் (www.nlcindia.com ) விண்ணப்பிக்க வேண்டும். பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தைத் தேவையானச் சான்றுகளுடன் அக்டோபர் 15-ந் தேதிக்குள் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். அப்ரண்டீஸ் பயிற்சி பெற்றவர்கள் அதை வைத்துக்கொண்டு தற்காலிக அல்லது நிரந்தர வேலைக்கு உரிமை கோர முடியாது என்ற போதிலும் பின்னாளில் என்.எல்.சி.யில் நிரந்தரப் பணிக்கு முயற்சிக்கும்போது அப்ரண்டீஸ் பயிற்சி பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

முக்கியமான தேதிகள்

தகுதியான நபர்களை தேர்வுசெய்யும் வகையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவோரின் பட்டியல் அக்டோபர் 23-ந் தேதி அன்று என்.எல்.சி. இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வுசெய்யப்பட்டவர்களின் பட்டியல் நவம்பர் 7-ந் தேதி வெளியாகும். அப்ரண்டீஸ் பயிற்சி நவம்பர் 16-ந் தேதி முதல் தொடங்கும் என்று என்.எல்.சி. நிறுவனம் அறிவித்திருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in