Published : 26 Nov 2020 03:17 AM
Last Updated : 26 Nov 2020 03:17 AM

ஜென் துளிகள்: பயிற்சிக்குத் துயரம் அவசியம்

சமூக நீதிக்காகவும் வன்முறையற்ற அமைதியான சமூகத்தை உருவாக்குவதற்காகவும் பணியாற்றிவரும் வியட்நாமிய பௌத்த குருவான திக் நியட் ஹான், தனது 94-வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். சமூக நீதி, அக அமைதி இரண்டையும் அடிப்படையாகக் கொண்டவை இவரது போதனைகள். 1960-களில் வியட்நாமில் அமெரிக்கா நடத்திய யுத்தத்தால் சேதமுற்ற பள்ளிகளைக் கட்டியதோடு அமெரிக்காவுக்குச் சென்று அகிம்சை இயக்கத்தையும் மேற்கொண்டவர். 1967-ம் ஆண்டில் மார்டின் லூதர் கிங் ஜூனியர், இவருக்கு நோபல் பரிசைப் பரிந்துரைத்தார். பிரான்ஸ் நாட்டில் 1982-ம் ஆண்டு ப்ளம் வில்லேஜ் என்ற மடாலயத்தை உருவாக்கினார். 2014-ம் ஆண்டில் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் வியட்நாமுக்குத் திரும்பினார். மலைகள் சூழ்ந்த பகுதியில் வாழ்ந்துவரும் திக் நியட் ஹான் தனது பிறந்தநாளை முன்னிட்டு கொடுத்த நேர்காணலிலிருந்து சில துளிகள்…

* * *

சமூக மாற்றத்துக்கான பணியும் ஆன்மிக வளர்ச்சிக்கான காரியமும் வேறு வேறல்ல. ஒருவன் சாதகத்தில் ஈடுபடும்போது உள்ளே உள்ள துயர், சுற்றியுள்ள துயர் இரண்டையுமேதான் எதிர்கொண்டாக வேண்டும். மலைக்குச் சென்று தனியாகப் பயிற்சி மேற்கொள்ளும்போது உள்ளே உள்ள கோபம், பொறாமை, விரக்தி ஆகியவற்றை அறியவே முடியாது. அப்படியான மனநிலை நம்மிடம் உருவெடுப்பதைப் பார்ப்பதற்கு நாம் மக்களுடன் பழகவேண்டியது அவசியம். அதனால்தான் ஆன்மிகப் பயிற்சிக்கு துயரம் என்பது மிக அவசியமாக உள்ளது.

* * *

கோபத்தை அரவணைப்பதற்கு புத்தரால் பல பயிற்சிகள் பரிந்து ரைக்கப்பட்டுள்ளன. கோபத்தை வெளியிடுவது அறிவார்த்தமானது அல்ல. ஏனெனில், கோபத்தின் அடிப்படையும் கோபத்தின் விதையும் நம்முள் உள்ளவை என்கிற உண்மையை அது புறக்கணிக்கிறது. அந்தக் கோபத்தின் விதை பெற்றோர் களாலோ மூதாதையோர்களோ நம்மிடம் கடத்தப்பட்டிருக்கலாம். அதை சமூகமும் தொடர்ந்து வளர்த்துவந்திருக்கிறது. கோபத்தை வெளிப்படுத்தும்போது நமது அமைப்பிலிருந்து வெளிக்கொண்டு வருவதாக நினைக்கி றோம். வார்த்தைகளாலோ உடல் அசைவுகள் வழி யாகவோ கோபத்தை வெளிப்படுத்தும் போது, கோபம் வலுப்படவே செய்கிறது. அதனால் அது அபாய கரமான வழிமுறையாகும்.

கோபத்தின் விதையை அங்கீகரிப் பதும், புரிதல் - பரிவின் ஆற்றலால் அதை மட்டுப்படுத்துவதுமே கோபத்தைக் குறைப்பதற்கான ஒரே வழி. கோபத்தின் விதை நம்மிடம்தான் உள்ளது. அது உருவமெடுக்காத நிலையில் நாம் சிரிப்பதற்கும் நிறைவாக இருப்பதற்குமான திறனைக் கொண்டவர்கள்தான். அதனாலேயே கோபத்தின் விதை நம்மிடம் இல்லை என்பது அர்த்தமில்லை. யாராவது எதையாவது சொல்லும்போதோ செய்யும்போதோ அந்த விதைக்குத் தண்ணீர்விடுகிறார். அப்போது அது சிலிர்த்தெழுந்துவிடுகிறது. கோபத்தின் விதை எப்போது உருவமெடுக்கிறது என்பதைக் கவனித்து, அதைக் கவனிக்கக் கற்றுக்கொள்வது அவசியமானது.

* * *

உணவில்லாமல் எதுவும் உயிர்த்தி ருக்காது என்று புத்தர் கூறினார். மெய்யறிவு, நிறைவு, கவலை, அல்லல் எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். மெய்யறிவு என்றால் வேறொன்றும் அல்ல. நீங்கள் ஒரு தேநீரைப் பருகும்போது, தேநீரைப் பருகுகிறோம் என்கிற விழிப்புணர்வு மட்டுமே. அந்த மனம்நிறை கவனம், அந்த விழிப்புணர்வுதான் மெய்யறிவு. நீங்கள் ஏற்கெனவே பல முறை தேநீர் அருந்தியிருக்கிறீர்கள். ஆனால், அதைப் பருகுவதைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கவே யில்லை. எதிர்காலம், இறந்த காலம் தொடர்பிலான கவலைகளில் நீங்கள் ஆழ்ந்து இருந்திருக்கிறீர்கள். தேநீர் குடிக்கும் செயலில் உங்கள் மனத்தைக் குவித்தால் கொஞ்சம் தேநீரைப் பருகும்போதும் ஆனந்தம் தானாகவே வரும்.

* * *

புத்தர் ஏற்கெனவே இங்கிருக் கிறார். நீங்கள் மனம்நிறை கவனத்துடன் இருந்தால் எதிலும் புத்தரைக் காணமுடியும், குறிப்பாக சமூகத்திலும். இருபதாம் நூற்றாண்டு என்பது தனிமனித வாதத்துக்கானது. ஆனால், இனியும் அது அவசியமில்லை. மனிதர்கள் - உயிர்கள் சேர்ந்த சமூகமாகவே வாழ முயல வேண்டும். ஒரு துளி நீராக அல்ல, நதியாகப் பொழிய விரும்புவோம். அப்படியாகத்தான் இங்கே, இப்போதே புத்தரின் இருப்பை நம்மால் உணர்வது சாத்தியமாகிறது. ஒவ்வொரு எட்டிலும், ஒவ்வொரு மூச்சிலும், பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும், செய்யும் ஒவ்வொரு செயலிலும் புத்தர் உருவமெடுக்கிறார். புத்தரை வேறெங்கும் தேடவேண்டாம். தினசரி வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் மனம்நிறை கவனத்துடன் வாழும் கலை அது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x