Last Updated : 06 Oct, 2015 12:31 PM

 

Published : 06 Oct 2015 12:31 PM
Last Updated : 06 Oct 2015 12:31 PM

வரலாற்றைக் கதையாகச் சொல்லும் நூல்

இந்நூல் தமிழில் 1949-ல் முதல் பதிப்பைத் தொடங்கி, 2014 வரை 33 பதிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே இதன் அளவிட முடியாத மதிப்பைப் புரிந்துகொள்ளலாம்.

இந்திய குக்கிராமத்தில் பிறந்து, சோவியத் ஒன்றியத்தின் லெனின்கிராடு சர்வகலாசாலையில் பேராசிரியராக உயர்ந்தவர் ராகுல்ஜி எனப்படும் ராகுல சாங்கிருத்தியாயன். இவரது புத்தகங்களில் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூல் உலகின் கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு விரிவாக வாசிக்கப்பட்டுவரும் நூல். 1946-ல் இந்தியில் எழுதப்பட்ட இந்நூல் 1949 ஆகஸ்டில் தமிழில் வெளியிடப்பட்டது.

இதனைத் தமிழில் மொழிபெயர்த்துத் தனது தமிழ்ப் புத்தகாலயம் மூலம் கண.முத்தையா வெளியிட்டார். மூல நூலாசிரியரும் மொழிபெயர்ப்பாளரும் சிறையிலிருந்து எழுதிய நூல் இதுவாகத்தான் இருக்க முடியும்.

கி.மு.6000-ம் ஆண்டு முதல் 20-ம் நூற்றாண்டு வரை மனித சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் பற்றி தத்துவரீதியாக விளக்கும் மகத்தான நூல் இது. வாசகர்கள் எழுதில் புரிந்து கொள்ளும் வகையில், முதலில் தான் எழுதிய 'மனித சமூகம்' என்ற நூலை, 20 கதைகளாக ராகுல்ஜி சொல்லியிருக்கிறார்.

சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவ்வுலகில் மனித குலம் (ஹோமோசாப்பியான்கள்) தோன்றியதிலிருந்து கி.மு. 2500-ம் ஆண்டுக்கு பிந்தைய வரலாறுதான் நம்மிடம் உள்ளது. 2500க்கும், 6000-க்கும் இடைப்பட்ட வரலாற்றை வேதங்கள் தொடங்கி பல்வேறு இலக்கிய நூல்களை ஆதாரமாகக் கொண்டு ராகுல்ஜி இந்நூலை வரைந்துள்ளார். அதில் ஓரளவு கற்பனையும் கலக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்ட இந்நூல், மதப் பழமைவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியது. ஆனால், இந்நூல் ஏற்படுத்திய மிகப் பெரிய தாக்கம் எதிர்ப்பாளர்களின் வாய்களுக்குப் பூட்டுப் போட்டுவிட்டது. இந்நூல் வெளியானவுடன் அதனைப் படித்த அறிஞர் அண்ணா, “ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்கவேண்டிய நூல் இது” என்று பாராட்டினார். அன்றைய சென்னை மாகாணத்தில், பிரகாசம் தலைமையிலான சட்டமன்றத்தில் அன்றைய கல்வி அமைச்சர் சுப்பராயன் “இது வெறும் கட்சிப் பிரச்சார நூல் அல்ல. நல்ல தத்துவ விளக்க நூல். எனவே இதனைத் தடை செய்யக் கூடாது” என்று பேசினார்.

மனித குலம் எங்கே முதலில் தோன்றியது, எப்படி உலகின் பல பகுதிகளுக்குப் பரவியது, அப்போது மனித குலம் சந்தித்த சவால்கள், போராட்டங்கள், இழப்புகள், வளர்ச்சி ஆகிய அனைத்தையும் இந்நூல் பதிவு செய்கிறது.

அடிமைச் சமுதாயம் உருவானது எப்படி?

ஆரம்பத்தில் மனித இனக் குழுக்கள் புராதன கம்யூனிஸ சமுதாயமாக இருந்தன. பெண்ணின் தலைமையில் இயங்கின. பின்னர் கால்நடைச் சொத்துக்கள் உருவான பிறகு, இனக் குழுக்களிடையே கடும் மோதல்கள் உருவாகின. அப்போர்களில் தலைமை தாங்கி வெற்றிபெற்ற ஆண் அந்த இனக் குழுவின் தலைவனானான். இவ்வாறு தலைமைப் பதவி ஆண்களிடம் வந்தது. பெண்கள் ஒரு குழுவின் சொத்துக்களாகச் சுருக்கப்பட்டு அடிமைகளானார்கள். இனக்குழுக்களுக்கிடையே நடந்த போர்களில் கால்நடைகளுடன் பெண்களும் கவர்ந்துவரப்பட்டனர். தோல்வியுற்ற குழுக்களிடம் கைப்பற்றப்பட்டவர்கள் அடிமைகளாக்கப்பட்டனர். இவ்வாறு அடிமைச் சமுதாயம் உருவானது.

ஆரியர்கள் என்று சொல்லப்படும் பிரிவினர் இந்திய எல்லைக்குள் நுழைந்தபோது, அங்கு நாகரிகத்தில் வளர்ச்சி அடைந்திருந்த திராவிடர்களுடன் அவர்கள் இடையறாது போரிட வேண்டியிருந்தது.

மனித வரலாறு முழுக்க மாற்றச் சக்கரம் ஓயாது சுழன்று கொண்டேயிருந்தது. இது ஆயுதங்களில், ஆடைகளில், உணவு உற்பத்தியில் மாற்றங்களைக் கொண்டுவந்தது.

அடுத்து இஸ்லாம் வரலாறு கூறப்படுகிறது. மதம் தோன்றிய விதம், அது பரவிய விதம், முகலாயர்கள் எப்படி இந்தியாவைக் கைப்பற்றினர் என்பதெல்லாம் விரிவாகக் கூறப்படுகின்றன. முகலாயர்களின் ஆட்சி மத சகிப்புத் தன்மையுடன் சுரண்டலற்ற ஆட்சியாக எவ்வாறு இருந்தது என்பதும் பின்னர் வந்த ஆங்கிலேயர்கள் இந்திய மக்களின் நலன் குறித்து எந்தக் கவலையும் இல்லாது, செல்வத்தைச் சுருட்டுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருந்ததையும் இந்த நூல் சொல்கிறது. ஆங்கிலேயர்கள் ஜமீன்தாரி முறையைத் திணித்து, இந்திய விவசாயிகளை எவ்வாறு கொடூரமாகச் சுரண்டினர் என்பதும், தங்கள் நாட்டுப் பொருட்களை இந்தியச் சந்தையில் குவித்து இந்திய உற்பத்தியாளர்களை எப்படிச் சாகடித்தார்கள் என்பதும் இந்நூலில் விவரிக்கப்படுகிறது.

அந்நிய ஆட்சிக்கெதிரான போராட்டத்தில் காந்திஜி எப்படி மக்களின் பங்களிப்புக்கு வழிவகுத்தார் என்பதை நடுநிலை நேர்க்கோடு பார்க்கிறார்.

மனித குல வரலாறு குறித்து நமக்கு இதுவரை இருந்துவந்த பார்வையை இந்நூல் முற்றிலுமாக மாற்றிவிடுகிறது. தற்போதைய சமூகத்தைப் புதிய பார்வை, புதிய அணுகுமுறையுடன் தெளிவாகப் புரிந்துகொள்ள இந்நூல் பெரிதும் உதவும்.

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: veeveekalai@gmail.com

நூல் விவரம்:

வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல சாங்கிருத்தியாயன்

தமிழ்ப் புத்தகாலயம், தொலைபேசி 28340495,

மின்னஞ்சல் - tamilputhakalayam@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x