Last Updated : 25 Nov, 2020 03:14 AM

 

Published : 25 Nov 2020 03:14 AM
Last Updated : 25 Nov 2020 03:14 AM

மாய உலகம்! - மாய உலகை உருவாக்குவது எப்படி?

“என்னது குழந்தைகளுக்குக் கதை எழுதப் போகிறாயா? ஹாஹா, இன்று எந்தக் குழந்தை புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டு படிக்கிறது? இது கம்ப்யூட்டர் யுகம் என்பதை அறிவாயா?”

“ஆம், அறிவேன். ஆனால், நான் கதைதான் எழுதப் போகிறேன்” என்றார் ஜே.கே. ரௌலிங்.

“எல்லாவற்றுக்கும் பிடிவாதம்! சரி, எந்தப் பத்திரிகைக்கு அனுப்பப் போகிறாய்? என்ன மாதிரியான கதை?”

“மாயாஜாலக் கதை. பத்திரிகைக்கு அனுப்புவதற்கு அல்ல, புத்தகமாகப் போடுவதற்கு. ஐந்து ஆண்டுகள் இதற்காகத் திட்டமிட்டு வைத்திருக்கிறேன். கடந்த சில மாதங்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.”

“என்னது, குழந்தை கதைக்கு ஐந்து ஆண்டுகள் யோசித்துக்கொண்டிருந்தாயா? மாதக் கணக்கில் எழுதிக்கொண்டிருக்கிறாயா? என்ன இப்படி இருக்கிறாய் ரௌலிங்? படித்த பெண்தானே நீ? உருப்படியாக ஏதாவது வேலைக்குப் போயிருந்தால் இந்நேரம் நாலு காசாவது சம்பாதித்திருக்கலாம். வீட்டில் சின்னக் குழந்தைகளை வைத்துக்கொண்டு இப்படியா கதை, கிதை என்று பொறுப்பில்லாமல் இருப்பது?”

“என்ன செய்வது? நல்ல சம்பளத்துக்கு வேறு வேலை கிடைத்தது. கதை என்னை வேலை செய்ய விட்டால்தானே? உறங்கப் போனால், என் கையைப் பிடித்து இழுத்து, என்னை எழுது, எழுது என்று படுத்துகிறது. பக்கத்தில் காபி குடிக்கப் போனால்கூட கதையைத் தூக்கிக்கொண்டுதான் போகிறேன். குழந்தை அழுகிறது, என்னை விடு என்று கெஞ்சினால்கூட, ஒரு கையால் குழந்தையைத் தட்டிக் கொடுத்துக்கொண்டு இன்னொரு கையால் என்னையும் எழுதேன் என்கிறது கதை. எப்படியோ ஆயிரம் பக்கங்கள் எழுதி முடித்துவிட்டேன். இன்னும் நான்காயிரம் பக்ககங்கள் எழுதிவிட்டால் போதும்” என்றார் ரௌலிங்.

“என்ன விளையாடுகிறாயா நீ? நாலு பக்கம் படி என்றாலே நாற்பது முறை கொட்டாவி விடுகிறார்கள். ஆயிரக்கணக்கான பக்கங்களை ஓரிடத்தில் அமர்ந்து குழந்தைகள் படிப்பார்கள் என்றா நினைக்கிறாய்? நானே என் வாழ்நாளில் அவ்வளவு பக்கங்கள் படித்திருப்பேனா என்பது சந்தேகம்தான்.”

நிச்சயம் படிப்பார்கள் என்றார் ரௌலிங். ஒரே ஒரு குழந்தை போதும். அந்தக் குழந்தை என்னுடைய ஒரே ஒரு புத்தகத்தை வாங்கித் தன் மடியில் வைத்துக்கொண்டு, அட்டையைப் பிரித்து, ஒரே ஒரு பக்கத்தைப் புரட்டினால் போதும். அதிலிருக்கும் ஒரே ஒரு சொல்லை அந்தக் குழந்தை படித்தால் போதும். மிச்சத்தைக் கதை பார்த்துக்கொள்ளும்.

என்னைப் பற்றிக்கொண்டதைப் போல் என் கதை அந்தக் குழந்தையையும் பாய்ந்து சென்று பற்றிக்கொள்ளும். ஒரு குழந்தையிடமிருந்து இன்னொரு குழந்தைக்கு, பிறகு இன்னொன்றுக்கு என்று முயல் போல் குதித்து குதித்து தாவ ஆரம்பித்துவிடும். ஒரு கதையைத் தடுத்து நிறுத்தும் வலு யாருக்கு இருக்கிறது?

என்னிடம் இருக்கிறது என்றது பதிப்பகம். முன்பின் தெரியாத ஒருவரின் கதையை, அதுவும் இவ்வளவு பெரிய கதையை யாரும் துணிந்து காசு கொடுத்து வாங்க மாட்டார்கள். ஒரு சின்னப் புத்தகத்தை வாங்கிக் கொடுக்கவே பெற்றோர்கள் தயங்குவதை நீங்கள் அறிவீர்களா?

அறிவேன். ஆனால், இது வழக்கமான மற்றொரு கதையல்ல என்றார் ரௌலிங். ஒரு கதையை எழுதுவதற்குச் சில சொற்கள் போதும். ஒரு நீண்ட கதையை எழுதுவதற்கு இன்னும் அதிக சொற்கள் தேவைப்படலாம். நானோ ஒரு மாய உலகை உருவாக்கியிருக்கிறேன். ஒரு குழந்தையின் கற்பனை எந்த அளவுக்கு விரிந்து செல்லுமோ அந்த அளவுக்கு என் கதையும் விரிந்து செல்லும். ஒரு குழந்தையின் கனவில் தோன்றும் அத்தனை வண்ணங்களையும் என் புத்தகம் கொண்டிருக்கும். ஒரு குழந்தை காண விரும்பும் எல்லாக் காட்சிகளும் கேட்கத் துடிக்கும் எல்லாச் சத்தங்களும் நிகழ்த்திப் பார்க்க விரும்பும் எல்லா சாகசங்களும் என் கதையில் இருக்கும். குழந்தைகளின் உலகம் பெரியது என்பதால் என் கதையும் பெரியதாக இருக்கிறது. குழந்தைகளின் கனவு முடிவற்றது என்பதால் என் கதையும் முடிவற்றது.

ஆம், பெற்றோர்கள் தயங்குவார்கள். என் குழந்தை ஏன் இதை வாங்கிக் கொடுக்குமாறு நச்சரிக்கிறது? அப்படி இதில் என்னதான் இருக்கிறது என்று குழப்பத்தோடு என் புத்தகத்தை எடுத்து ஒரு புரட்டு புரட்டுவார்கள். என் புத்தகத்திலிருந்து நீண்டுவரும் மாயக்கரங்கள் பதிலுக்கு அவர்களைப் புரட்டிப் போடும். வயது வேறுபாடின்றி படிக்கும் அனைவரையும் குழந்தைகளாக மாற்றியமைக்கும் என் கதை. அம்மாவும் அப்பாவும் பாட்டியும் தாத்தாவும் குழந்தைகளோடு போட்டிப்போட்டுக்கொண்டு வரிசையில் நின்று என் கதையை வாங்கிச் செல்வார்கள்.

இவ்வளவு பெரிதா என்று மிரண்டவர்கள் எல்லாம் ஏன் இவ்வளவு அவசரப்பட்டு முடித்துவிட்டீர்கள் என்று என்னோடு சண்டைபோட வருவார்கள். ஹாரி பாட்டரும் ஹெர்மியோனும் ஹாக்ரிடும் வோல்டிமோர்ட்டும் என்னைப் போல் அவர்களையும் தவிக்க விடுவார்கள்.

எழுதேன், எழுதேன் என்று என்னைப் பிடித்து இழுத்ததைப் போல், படியேன், படியேன் என்று அவர்களை வேறு வேலை செய்யவிடாமல் பிடித்து இழுக்கும் என் கதை. என்னையும் மேஜிக் பள்ளியில் சேர்த்துவிடேன் என்று குழந்தைகள் கேட்பார்கள். அப்படி ஒன்று இருக்கும் என்றால் சொல், நானும் வந்துவிடுகிறேன் என்பார்கள் பெற்றோர்கள். இரண்டு பேரும் வாருங்கள், என்னைப் பொருத்தவரை நீங்கள் இருவருமே குழந்தைகள்தாம் என்று சொல்லும் என் கதை.

உங்களுக்குச் சிறகுகள் அளிக்க நான் தயார். வானத்தை ஒரு சுற்று சுற்றிவரலாமா?

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு : marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x