Last Updated : 25 Nov, 2020 03:14 AM

 

Published : 25 Nov 2020 03:14 AM
Last Updated : 25 Nov 2020 03:14 AM

எட்டுத் திக்கும் சிறகடிக்கும் கதைகள் - கோவா: நரிக்கும் நரிக்கும் கல்யாணமாம்!

காட்டில் கோளோ என்ற ஆண் நரி இருந்தது. அது மிகவும் கெட்டிக்கார நரி. எப்போதும் சிங்கராஜாவுடன்தான் இருக்கும்.

அங்கேயே அறிவு நிறைந்த போளோ என்ற பெண் நரியும் இருந்தது. மற்ற பிராணிகளுக்கு உதவி செய்வது அதற்கு மிகவும் பிடிக்கும். கோளோவுக்கும் போளோவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

ஒருநாள் சிங்கராஜா கோளோவிடம் சொன்னது: “நீ எனக்கு முப்பது குடம் தேன் கொண்டு வந்து தந்தால்தான் உன் திருமணத்துக்கு அனுமதி கொடுப்பேன்!”

இதைக் கேட்டு கோளோ திடுக்கிட்டுவிட்டது. அதற்கு மரம் ஏறவும் தெரியாது. பிறகு எப்படித் தேன் எடுப்பது? அது துயரத்துடன் தன் வீட்டுக்குத் திரும்பியது. வழியில் சந்தித்த போளோவிடம் நடந்ததை எல்லாம் சொன்னது.

“நீங்கள் கவலைப்படாதீர்கள். நாம் இதற்கு ஒரு வழி கண்டுபிடிப்போம்” என்று தைரியம் சொன்னது போளோ.

பிறகு போளோ, தன் நண்பனான குருவியிடம் சென்று கேட்டது: “முப்பது குடம் தேன் கொடுத்தால்தான் ராஜா எங்கள் திருமணத்துக்கு அனுமதி கொடுப்பார். இவ்வளவு தேன் இருக்கும் இடம் உனக்குத் தெரியுமா?”

“நான் உனக்கு உதவி செய்கிறேன்” என்ற குருவி ஆகாயத்தில் உயரப் பறந்து கீழே பார்த்தது. ஓர் இடத்தில் நிறையத் தேனீக்கள் வட்டமிட்டுப் பறப்பது தெரிந்தது. அது தேனீக்களிடம் சென்றது. குருவியைப் பார்த்ததும் தேனீக்கள் கேட்டன:

“எங்கள் ராணியைக் காணவில்லை. எங்காவது பார்த்தீர்களா?”

“இல்லை. ராணியைக் கண்டுபிடிக்க நான் உங்களுக்கு உதவி செய்கிறேன்” என்ற குருவி, போளோவிடம் சென்று விவரம் சொன்னது.

போளோ, குருவியிடம், “நீ எல்லா மரங்களிலும் ராணித் தேனீயைத் தேடிப்பார். நான் நிலத்தில் உள்ள செடிகளில் தேடுகிறேன்” என்றது.

அவை இரண்டும் ராணித் தேனீயைத் தேடத் தொடங்கின. நீண்ட நேரம் தேடிய பிறகு, ஒரு மரத்தில் இருந்தது ராணித் தேனீ!

குருவி சொன்னது: “வணக்கம், ராணி! உங்களைக் காணமல் உங்கள் மக்கள் எல்லோரும் கவலைப்படுகிறார்கள். சீக்கிரம் வாருங்கள்.”

அப்போது ராணித் தேனீ துயரத்துடன் சொன்னது: “ஐயோ, என்னால் அசையக்கூட முடிவில்லை. நான் இந்த மரப் பிசினில் ஒட்டிக்கொண்டேன்.”

உடனே போளோ, சில மூலிகை இலைகளைப் பறித்து சாறு எடுத்து குருவியிடம் கொடுத்தது. குருவி அதை ராணித் தேனீ சிக்கியிருந்த பிசினில் ஊற்றவும், பிசின் கரைந்து ராணித் தேனீ விடுபட்டது.

“நீங்கள் இருவரும் என் உயிரையே காப்பாற்றியிருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு பரிசு தருகிறேன். வாருங்கள்!” என்று ராணித் தேனீ பறந்தது.

போளோவும் குருவியும் ராணித் தேனீயைப் பின்தொடர்ந்தன.

ராணித் தேனீ பறந்து ஒரு குகைக்குச் சென்றது. அங்கே நிறைய தேன் குடங்கள் இருந்தன!

“உங்களுக்குத் தேவையான தேனை எடுத்துக்கொள்ளுங்கள்!” என்றது ராணித் தேனீ.

போளோ, ஒவ்வொரு குடமாகத் தேன் எடுத்துச் சென்று முப்பது குடம் தேனை கோளோவிடம் கொடுத்தது. கோளோ அதை சிங்கராஜாவிடம் கொடுத்தது.

பிறகு, கோளோவுக்கும் போளோவுக்கும் நடந்த கல்யாணத்தில் எல்லாப் பிராணிகளும் கலந்துகொண்டு வாழ்த்தின!

திருமண விருந்தில் எல்லோருக்கும் பிடித்த முக்கிய உணவு என்ன தெரியுமா? தேன் பணியாரம்தான்! சிங்கராஜாதான் அதை ஏற்பாடு செய்திருந்தது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x