Last Updated : 23 Nov, 2020 09:40 AM

 

Published : 23 Nov 2020 09:40 AM
Last Updated : 23 Nov 2020 09:40 AM

சுயசார்பு பாரதம் 3.0 - இலக்கு எட்டப்படுமா?

saravanan.j@hindutamil.co.in

கரோனா பரவல் காரணமாகக் கொண்டுவரப்பட்ட ஊரடங்கினால் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைக்க மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை சலுகைகளை அறிவித்து வருகிறது. பிரதமர் மோடி பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் எதிர்கால இந்தியாவுக்கான திட்டமாகவும் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சுயசார்பு பாரதம் என்ற திட்டத்தை அறிவித்தார். இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை மூன்று கட்டங்களாகப் பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களையும் பல்வேறு சலுகைகளையும் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. உற்பத்தியை அதிகப்படுத்துதல், வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் எளிதில் நிதி கிடைக்க வழி செய்தல் போன்றவற்றை இலக்காகக் கொண்டு அறிவிப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன.

குறிப்பாக உற்பத்தி துறை, வேளாண் துறை மற்றும் கட்டுமானம், உட்கட்டமைப்பு, கிராமப்புற பொருளாதாரம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு திட்டங்கள், சலுகைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்புகளால் பயன் அடையப் போவது யார், எப்படி இந்த அறிவிப்புகள் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்கப் போகின்றன, எப்படி இவற்றின் மூலம் சுயசார்பு பொருளாதாரம் என்ற லட்சிய கனவை இந்தியா எட்டப் போகிறது என்பதுதான் கேள்வி.

வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில் நிறுவனங்களுக்குப் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய பணியாளர்களை நியமித்தால் அவர்களுக்கான பிஎப் தொகையை இரண்டு ஆண்டுகளுக்கு செலுத்துவதாக அரசு கூறியுள்ளது. மேலும் அவசர கடன் உத்தரவாத திட்டம் மூலம் ஆண்டு விற்பனை அடிப்படையில் அடமானம் ஏதுமின்றி கடன் வழங்கப்படும் எனக் கூறியுள்ளது.

எலெக்ட்ரானிக், பார்மா மற்றும் செல்போன் உள்ளிட்ட 10 துறைகளில் நிறுவனங்களுக்கு உற்பத்தி சார் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனக் கூறியுள்ளது. ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியை மீட்கும் வகையில் புதிதாக ரூ.18 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 18 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுமான துறைக்கு முன்வைப்பு தொகை செலுத்துவதில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. டெண்டர்களுக்கான காப்பீடு தொகை 3 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ.2 கோடி வரையிலான வீடுகளுக்கு 20 சதவீதம் வரை வருமான வரி விலக்கு வழங்கப்படும் எனக் கூறியுள்ளது. ஏற்கெனவே வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கு கரோனா காலத்தில் வங்கிகள் வசூலித்துவந்த வட்டிக்கு வட்டி திரும்ப வழங்க வழிசெய்துள்ளது. இது கடன் வாங்கியோருக்கு பெரிய அளவில் ஆறுதல் கொடுத்திருக்கிறது. மேலும் கடன்களுக்கான வட்டி விகிதமும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. வேளாண் துறையில் ரூ.65 ஆயிரம் கோடி அளவில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2.5 கோடி விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை வழங்கப்படும். இப்படி ஒவ்வொரு துறைகள் சார்ந்தும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிவிப்புகள் அனைத்துமே மிக அவசியமானவை. ஆனால் இவை பொருளாதாரத்தை மீட்க போதுமா? சுயசார்பு இலக்கை எட்டிவிட முடியுமா? அரசின் அறிவிப்புகள் துறைகள் சார்ந்தும், தொழில்நிறுவனங்கள் சார்ந்தும் இருந்தாலும் உண்மையில் சந்தையை இயக்குவது என்பது நுகர்வு மட்டுமே. துறைகளுக்கு அரசு எவ்வளவு சலுகைகள் வழங்கினாலும் நுகர்வோருக்கு அவற்றால் பலன் கிடைக்காவிட்டால் அரசின் அறிவிப்புகள் அதன் இலக்கை எட்டுவது கடினம். நுகர்வு அதிகரித்தால்தான் சந்தையில் தேவை உருவாகும். மக்களின் வருவாய் ஈட்டும் திறன் மற்றும் பொருட்களையும் சேவைகளையும் நுகரும் திறன் ஆகியவற்றைப் பொருத்தே நுகர்வு அதிகரித்து சந்தையில் தேவை என்பது உருவாகும்.

வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்து பாஜக அரசிடமிருந்து இதுவரை பல அறிவிப்புகள் வந்துவிட்டன. அவை தெரிவித்த கணக்குகளின் படி பார்த்தால் வேலையின்மை என்பதே முற்றிலும் இல்லாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் கள நிலவரம் எப்படி இருக்கிறது? சமீபத்தில் பிஎஃப் பட்டியலில் இருந்து 30,800 நிறுவனங்கள் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியானது. 18 லட்சம் பேர் பிஎப் உறுப்பினர் பட்டியலில் குறைந்துள்ளனர். எனில் 18 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று அர்த்தம்.

இதன் அடிப்படையில் பார்க்கும்போது நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வர முடியாமல் முடங்கி போயிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தச் சூழலில் தொடர்ச்சியாக வேலை வாய்ப்பு உருவாக்கம் பற்றி அறிவிப்புகள் மட்டும் வந்துகொண்டிருக்கின்றன. நாட்டில் 35 வயதுக்கு கீழ் இருப்போரின் சதவீதம் தொடர்ந்து உயர்ந்துவருகிறது.

இதனால் வேலையின்மை என்பது எப்போது வேண்டுமானாலும் பூதாகரமாக வெடிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். சரி வேலையில் இருப்பவர்களின் வருமானமாவது உயர்கிறதா என்றால் அதுவும் இல்லை. கரோனா காலத்துக்குப் பிறகு வருமானம் மேலும் குறைந்துள்ளது. உழைப்பவன் ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும், விதைப்பவன் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று பல காலமாகப் பேசிவருகிறோம் ஆனால் கிடைப்பதையாவது காப்பாற்றிக்கொள்வோம் என்பதுதான் இன்றைய சந்தைப்
பொருளாதாரம் கற்பிக்கிறது. இதனால் பொருளாதார ஏற்றத்தாழ்வு தொடர்ந்து அதிகரிக்கிறது. இந்தச் சூழலில் நுகர்வு எப்படி உயரும்?

வேளாண் துறைக்கு ஒவ்வொரு வருடமும் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. விவசாயிகள் என்ற சொல் மட்டும் அவற்றில் இடம்பெறுகின்றன. ஆனால், அறிவிக்கப்படும் திட்டங்கள் யாருக்கு பலனளிக்கிறது என்பதற்கான தெளிவு இருப்பதில்லை. வேளாண் துறையை பொருத்தவரை ஊக்குவிப்பு திட்டங்கள் சலுகைகள் அனைத்துமே யாரை சென்று சேர்கிறது என்று இலக்கு வைத்து செயல்படுத்தப்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

விளைவிக்கும் விவசாயிகளா, வியாபாரிகளா, பெரு நிறுவனங்களா, விவசாயக் கூலிகளை யாருக்கு வேளாண் துறை சலுகைகள் பலனை அளிக்கப்போகிறது என்பது யாருக்கேனும் தெரியுமா? விவசாயக் கடனோ, உர மானியமோ நலிந்த ஏழை விவசாயிகளுக்குப் பயன் அளித்திருக்கிறதா என்றால் இல்லை. ஆனால் மொத்தமாக வேளாண் துறை எனும்போது விவசாயிகளுக்கு என்ன இத்தனை ஆயிரம் கோடி ஒதுக்கியிருக்கிறது அரசு என்ற பொதுவான மேலோட்டமான பார்வைதான் பரவலாக இருக்கிறது.

தொழில் நிறுவனங்களுக்கு அரசு அறிவித்துள்ள ஊக்கத்தொகை திட்டங்களும் சலுகைகளும் மக்களைச் சென்றடைய வேண்டும். அதாவது அரசு வழங்கும் சலுகைகளின் பலனை நிறுவனங்களும் தொழில் அதிபர்களும் மக்களுக்கு கடத்த வேண்டியது மிக முக்கிய கடமையாகும். நிறுவனங்கள் சலுகைகள் மூலம் லாபத்தை அதிகரிக்க மட்டுமே எண்ணாமல், அதை தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் வேலை வாய்ப்பு உருவாக்கத்திலும், முதலீடு செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். தொழிலாளர் சட்டங்கள் நிறுவனங்களுக்குச் சாதகமான அம்சங்களுடன் மாற்றப்பட்டுள்ளதைத் தவறாக பயன்படுத்திக்கொள்ள கூடாது.

அதற்கு முதலில் முதலாளிகளின் மனநிலை மாற வேண்டியிருக்கிறது. இன்றைய பொருளாதார கட்டமைப்பில் முதலாளிகள் கையில்தான் எல்லாமே என்ற நிலைதான் இருக்கிறது. தொழில் செழிக்க வேண்டிய அதேசமயம் தொழிலாளிகளின் வளர்ச்சியையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சந்தையின் தேவையை அதிகரிக்க நுகர்வை அதிகரிக்க வேண்டும். நுகர்வு அதிகரிக்க வேண்டுமெனில் மக்களின் வாங்கும் திறன் முன்னேற்றமடைய வேண்டும். அதன் அடிப்படை வேலை வாய்ப்பும் வருமானமும். அதே சமயம் பொருட்களின் விலை என்பது மிக முக்கிய காரணியாக விளங்குகிறது.

பணவீக்கம் என்பது கண்ணுக்குத் தெரியாத பூதம் மாதிரி வளர்ந்துகொண்டே இருக்கிறது. சந்தை தேவை, உள்நாட்டு உற்பத்தி, வரி போன்றவற்றை ஒழுங்குபடுத்தாமல் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது. உற்பத்தி துறை ஊக்குவிப்பதற்கு முன் சந்தையை முறைப்படுத்த வேண்டும். இறக்குமதியைக் கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும். அடிப்படை விஷயங்களைச் சரி செய்யாமல் எவ்வளவு திட்டங்கள் சலுகைகள் வழங்கினாலும் உண்மையான நோக்கத்தை எட்ட முடியாது என்பதை திட்டங்களை வகுப்பவர்களும் திட்டங்களைச் செயல்படுத்துபவர்களும் உணர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x