

பட்டமளிப்பு விழாவில் நான் அறிவுரைகளை அள்ளிக் கொட்டப் போவதில்லை. சென்னையின் மூன்று முக்கியமான விஷயங்களைச் சொல்வேன். முதலில் சென்னை நிஜமான நகரம்.அதன் மக்கள் நிஜமானவர்கள். அவர்களின் வறுமையும், வேடிக்கை விளையாட்டுகளுடன் கூடிய சந்தோஷமும் படைப்பாக்கத்திறனும் கூட நிஜம்தான். சென்னை போலியாக நடந்துகொள்ளாது. தனது உண்மையான வாழ்க்கையை தனக்கான உண்மையான வழியில் சென்று தன்னால் முடிந்தவரை அதை நடைமுறை யதார்த்தமாக ஆக்கும் வகையில் கையாள்கிறது. இந்தியாவும் அப்படித்தான் என்று சொல்லலாம். ஆனால், இந்த விஷயத்தில் சென்னையை இந்தியாவின் ஆசிரியர் என்று சொல்லலாம்.
மக்களின் முகங்கள்
மரக்கிளைகளால் ஆன ஒரு கடையில் அரை டஜன் வாழைப்பழங்களையோ கொய்யாப் பழங்களையோ வைத்துக்கொண்டு அதனை ஒரு எக்ஸ்பிரஸ் மால் போன்ற ‘பெருங்கடை’ யின் பெருமிதத்தோடு வேறு எங்கே, யார் நடத்துகிறார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்? ஒரு மரப்பெட்டியையே ஒரு கடையாக மாற்றி அதில் மல்லிகைப்பூச் சரங்களை விற்பனை செய்துகொண்டே ஊசி தேவைப்படாத வகையில் விரல்களால் பூ கட்டிக்கொண்டிருப்பதை வேறு எங்கு பார்க்க முடியும்? அந்தப் பெண் மகளாகவும் தாயாகவும் மனைவியாகவும் இருக்கிற அதேநேரத்தில் சிறுவியாபாரியாகவும் ஒரு கலைஞராகவும் இருக்கிறார். அவளுடைய திறந்தவெளிக் கடைக்கு முன்னால் குளிர்சாதனம் செய்யப்பட்ட மலர்க்கடைகள் எல்லாம் மயானபூமிகள் போல தோன்றுகின்றன.
சென்னை மக்களின் முகங்களைப் பாருங்கள். சந்தோஷமாக இருக்கும்போது இடி இடிப்பது போல சத்தமாகச் சிரிப்பார்கள். கோபப்படும் போது கட்டுக்கடங்காமல் இருக்கும். “போய்யா…” “போ…ய்யா” என்று பலவிதமாக அது வெளிப்படும். நமது பெண்கள் அவர்களது எண்ணங்களை மறைப்பது கிடையாது. அவர்களிடம் யாரும் பிரச்சினை பண்ண முடியாது.
அனைவரும் வருக
இரண்டாவதாக, சென்னைக்கென்று தனி மனம் உண்டு. கொல்கத்தாவைப் போல இதனையும் ஒரு அறிவார்ந்த நகராக வர்ணிக்கலாம். மெட்ரோ எனும் ஆங்கில வார்த்தை மதர் என்பதிலிருந்து வருகிறது. ஒரு பெருநகரம் என்பது தாய்நகரம். அம்மாக்கள் படித்தவர்களோ இல்லையோ அவர்கள் மிகவும் அறிவாளிகள். ஒரு பழைய இந்திப் பட பாடல் “ அம்மா.. உனது இரண்டு வார்த்தைகள் எனக்கு பகவத்கீதையை விட உயர்ந்தது” என்கிறது.
இந்த நகரில் நல்லது கெட்டது என அனைத்துவிதமான இலக்கியமும் விற்கிற கடைகள் உண்டு. தெருக்களில் படிப்பகங்கள் உண்டு. வாடகை நூலகங்கள் உண்டு.
அரசியலையும் சித்தாந்தங்களையும் தாங்கிய சுவர்கள், காந்தியிலிருந்து அம்பேத்கர் வரை,பெரியார் முதல் ஜி.கிருஷ்ணமூர்த்தி வரை, மார்க்ஸ் முதல் ஐன்ஸ்டீன் வரை விவாதிக்கிற வாசகர் வட்டங்கள் தினமும் நடப்பதை நாளிதழ்களில் பார்க்கலாம்.
மூன்றாவதாக, சென்னைக்கு அசாதாரணமான பண்பாட்டு ஆதாரவளங்கள் உள்ளன. கூட்டங்களுக்கான அரங்கங்களை விட இரண்டு மடங்கு அதிகமாக இசையரங்குகளைக் கொண்ட நகரம் உலகில் வேறு எங்கும் கிடையாது. அவற்றிலெல்லாம் கச்சேரிகள் நடக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஜெர்மனியிலும் பிரான்சிலும் உயர்ந்த கலைகள் எனச் சொல்லப்படுவதற்கு இணையானவை. ‘அனைவரும் வருக’ என்பது சென்னையின் வரவேற்பு வாசகம். இசையரங்குகளுக்கு அப்பால் சென்னையின் தூசி, வெப்பம் மற்றும் மணத்துக்கு இடையில் ‘நாட்டுப்புறக்கலை’யும் இருக்கிறது. சென்னைவாசி என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.
நமது ரட்சகர்கள்!
நேர்மையோடு பார்க்கவில்லை என்றால் அதே பெருமிதம் தன்னைத் தானே ஒருவர் அளவுக்குமீறி புகழ்ந்துகொள்வதாக ஆகிவிடும். அதனால் நம்மிடம் உள்ள தவறான மூன்று விஷயங்களையும் சொல்லுவேன்.
முதலாவதாக சுத்தம் பற்றிய நமது சமூகரீதியான அக்கறை. ஒவ்வொரு மூலையிலும் சென்னையின் ஆண் சிறுநீர் கழிக்கிறார். நம்மைச் சுற்றிலும் நாற்றம் அடிக்கும்போது பட்டையும் கொட்டையும் குங்குமமும் சந்தனமும் அணிவதில் என்ன பயன்? தினமும் 24 மணிநேரமும் நமது சுற்றுப்புறங்களை அசுத்தப்படுத்தும் நாம், மாநகர நிர்வாகத்தைக் குறைசொல்வது தவறானது. நாம் குவிக்கிற குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி சொல்வது மட்டுமல்ல, அவர்களுக்கு நாம் உதவாததால் மன்னிப்பும் கோர வேண்டும். அவர்கள் நமது ரட்சகர்கள்!
ஆனால், நாற்றத்தோடு போகும் குப்பை லாரிகளை நாம் திட்டுகிறோம். அடிக்கடி நமது சாலைகளை மறிக்கும் கோயில் தேர்களையும் பெரும் கார்களை விட அதிகமான முறையில் அவை மதிக்கத்தக்கவை.
எண்ணற்ற சாக்கடைப் பெருச்சாளிகளும் கொசுக்களும் பெயர் தெரியாத பல நோய்களை பரப்புகின்றன. அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால் மட்டுமல்ல, நமது பார்வை குறுகியதாகவும் பொறுப்பற்றதாகவும் இருப்பதும் காரணம். காக்கையைத் தவிர மற்ற பறவைகள் நமது நகரிலிருந்து போய்விட்டதைப் பார்த்தீர்களா? தெருநாய்கள் அபாயகரமான எண்ணிக்கையில் பெருகிவிட்டதைப் பாருங்கள். மாநகர நிர்வாகம் அல்ல, நாம்தான் இத்தகைய சூழலுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.
அவசரத்தின் பிரதிநிதி
இரண்டாவது, சாலையில் போவது பற்றிய நமது அக்கறை. சாலையில் தவறு செய்பவர்களில் முக்கியமான குற்றவாளி பைக் ஓட்டுபவர். பெரும்பாலான மாணவர்கள் பைக் ஓட்டுவதால் நான் உங்களையே சொல்கிறேன். அவரோடு பின்னால் உட்கார்ந்திருக்கிற பெண்ணையோ குழந்தையையோ அவர் நடத்துகிறவிதத்தில் அவரது பொறுப்பற்ற தன்மை உள்ளது. அவரால் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் நடந்து செல்பவர்கள்தான். தலையைச் சாய்த்து செல்போன் பேசிக்கொண்டு வேறு உலகில் இருந்துகொண்டே பைக் ஓட்டுகிற அவர் போக்குவரத்துக்கு ஒரு தீங்கு. அவர் அவசரத்தின் பிரதிநிதி.
கட்டிடங்களை சில மணிநேரங்களில் இடிக்கும் புல்டோசர்களும், சாலைகள் தோண்டிக்கிடப்பதும், தண்ணீர் தேங்கிக் கிடப்பதுமாக சென்னை ஒரு அவசர நகரமாக இருக்கிறது. எங்கே போக இவ்வளவு அவசரம்?
மூன்றாவதாக, எது சரி, எது தவறு என்பது பற்றிய நமது அக்கறை.பணக்காரர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்குமான இடைவெளி. கார்களும் பைக்குகளும் அதிகரித்துக் கொண்டே போகிறபோதே வீடற்ற மனிதர்களும் அதிகரித்துகொண்டே போகிறார்கள்.
வானுயுரக் கட்டிடங்கள் உயர்வதும் நிலத்தடிநீரை அவை உறிஞ்சுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் அடிபம்புகளில் தண்ணீரை அடித்து ஓய்வதும் தவறான உதாரணங்கள். ஊதிப்பெருக்கிற மனிதரைப் போல நகரத்தின் வேண்டாத விரிவாக்கத்தை அரசு வைத்திருக்கிறது.
தமிழ்நாட்டின் வெற்றி
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதிலும் நமக்குப் பெருமைகள் உண்டு. சாதிப் பாகுபாடுக்கு எதிரான போராட்டம் இன்னும் முடியவில்லை ஆனாலும் பெரிய அளவிலான வெற்றி கிடைத்துள்ளது. இந்தியாவுக்கு இது எடுத்துக்காட்டு. பெரியாருக்கும் சுயமரியாதை இயக்கத் துக்கும்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். சுதந்திரத்துக்கு முன்னால் தீண்டாமைக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தையும் மறந்துவிடக் கூடாது. இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்களை எதிர்கொள்ள தமிழ்நாட்டின் அனுபவம் இந்தியாவுக்கு உதவும்.
இரண்டாவது பெருமை மதரீதியான பாரம்பரியம். நாட்டில் மதநல்லிணக் கத்துக்கு எதிரான விவகாரங்கள் அலைஅலையாக வருகின்றன. தேர்தல் ஆதாயத்துக்காக மதரீதியான பெரும்பான்மைவாதத்தை அறிமுகப்படுத்த செய்யும் தொடர்முயற்சிகளை தமிழ்நாடு நிராகரிக்கும்.
மூன்றாவதாக பெண் முன்னேற்றம். திருமண வயதா, ஆரோக்கியமா, கல்வியா எதுவாக இருக்கட்டும் தமிழக பெண்களின் நிலை உயர்ந்துள்ளது. வரதட்சிணை எனும் சாபமும் இன்னமும் இருக்கிறது. சில பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன என்றாலும் சில பத்தாண்டுகளுக்கு முன்னால் இருந்ததைப்போல இனியும் தமிழக பெண்கள் சத்துக்குறைந்தவர்களாக, கல்வியற்றவர்களாகவோ இல்லை.டிஜிட்டல் யுகம் ஏற்படுத்தியிருக்கிற புதிய வகையான பாலின வித்தியாசங்களை எதிர்கொள்ள புதியதான கொள்கைகள் தேவை. சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களாகிய நீங்கள் சென்னையின் பெருமைகளையோ பிரச்சினைகளையோ தேர்வு செய்ய லாம். சரியானதைத் தேர்வு செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
- அசோகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் மே.வங்க முன்னாள் ஆளுநரும் காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி சென்னை பல்கலைக்கழக மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய உரை.
சுருக்கமாகத் தமிழில்: நீதிராஜன்