Last Updated : 06 Oct, 2015 12:47 PM

 

Published : 06 Oct 2015 12:47 PM
Last Updated : 06 Oct 2015 12:47 PM

அந்த நாள்: சிந்து சமவெளி 3- கைவினைக் கலைகளில் சிறந்த சிந்து

சிந்து சமவெளி மக்கள் பல வகைகளில் மேம்பட்ட வளர்ச்சியை அடைந்திருந்தனர். அதற்கு அவர்களுடைய ஆடை, அணிகலன்களும் கலைத் திறமையும் முக்கியச் சான்றுகள். செங்கல் கட்டிடங்களைப் போலவே பானை வனையவும் ஊசியால் தைக்கவும் அவர்கள் அறிந்திருந்தனர். அவற்றைப் பற்றி பார்ப்போம்:

ஆடையும் அணிகலன்களும்

l மொகஞ்சதாரோவில் கிடைத்த சாயமேற்றப்பட்ட சிறிய பருத்தி துணி, உலகில் கிடைத்த பழமையான துணிகள் இரண்டில் ஒன்று. மற்றொரு பழமையான துணி ஜோர்டானில் கண்டறியப்பட்டது.

l மொகஞ்சதாரோவில் கிடைத்த பூசாரி-அரசர் சிற்பம் ஒரு மேற்துணியை போர்த்தி இருக்கிறது. இந்த மேற்துணியில் உள்ள மூன்று இலைகள் சின்னம், மெசபடோமிய நாகரிகத்திலும் காணப்படுகிறது. இது போன்ற சில அம்சங்கள் மெசபடோமிய நாகரிகத்துக்கும் மொகஞ்சதாரோவுக்கும் இடையே உள்ள தொடர்பைச் சொல்கின்றன. சீட்டுக்கட்டில் உள்ள சின்னமான மூன்று இலைகளும்கூட, இந்தச் சின்னம்தான்.

l விலங்குகளின் எலும்பில் இருந்து சிந்து சமவெளி மக்கள் ஊசிகளை உருவாக்கியுள்ளனர். அதனால் அவர்களுக்குத் தைக்கத் தெரிந்திருக்கும் என்ற முடிவுக்கு வரலாம்.

l மஞ்சிட்டி என்ற நீர்ப்பூண்டு வகையைப் பயன்படுத்திச் சிந்து சமவெளி மக்கள், துணிகளுக்குச் சிவப்பு நிறத்தை ஏற்றியிருக்கிறார்கள்.

l சிந்து சமவெளி மக்களுக்கு விருப்பமான நிறங்களுள் சிவப்பும் ஒன்று.

l பணக்காரர்களின் வீடுகளில் தாமிரக் கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அலங்காரம் செய்துகொள்ளவும், கூந்தலை அழகுபடுத்திக் கொள்ளவும் இதைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

l பணக்காரப் பெண்கள் கூந்தல் வளர்த்தும், ஆபரணங்கள் அணிந்தும் வாழ்ந்தனர். தங்கமும், விலை மதிப்பில்லா கற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கிளிஞ்சல் அணிகலன்களும் அணியப்பட்டுள்ளன.

l இங்குக் கிடைத்த சில கைச்சங்கிலிகள் சாம்பல் அல்லது கறுப்பு நிறத்தில் உளுந்து வடையைப் போல ஓட்டையுடன் இருந்தன.

கலைத் திறமை

l தாமிரத்தால் ஆன கருவிகளைச் செய்வதற்குக் களிமண், மெழுகு வார்ப்பு அச்சுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வார்ப்பு அச்சில் உருக்கப்பட்ட தாமிரம் ஊற்றப்பட்டு, இறுகும் வரை குளிரச் செய்யப்பட்டு, கருவிகள் வடிக்கப்பட்டுள்ளன.

l சிந்து சமவெளி நாகரிகத்தில் மண்பாண்டம் செய்பவர்கள், குடம் செய்வதற்காகச் சக்கரத்தைக் காலால் சுற்றிக்கொண்டு கையால் பானையை வனைந்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.

l குழந்தைகள் விளையாடச் சக்கரம் கொண்ட பொம்மைகள், குட்டி வண்டியில் பொருத்தப்பட்ட பொம்மைகள் கிடைத்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x