Published : 20 Nov 2020 03:14 am

Updated : 20 Nov 2020 09:25 am

 

Published : 20 Nov 2020 03:14 AM
Last Updated : 20 Nov 2020 09:25 AM

திரை வெளிச்சம்: தணிக்கை என்பதே ஒடுக்குமுறை ஆகுமா?

screen-light
சேக்ரட் கேம்ஸ்

பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான பிரயாக் அக்பர், தனது ‘லெய்லா’ நாவலை வெளியிட்டபோது அதிர்வுகள் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், அந்த நாவல், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், அதே பெயரில் நெட்ஃபிளிக்ஸில் இணையத் தொடராக திரைவடிவம் பெற்றபோது அமளிதுமளியானது.

தீபா மேத்தா உள்ளிட்டோர் இயக்கிய அந்தத் தொடர், சமகால அரசியல் போக்குகளை அப்பட்டமாகச் சித்தரித்த காரணத்துக்காகவே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், அடுத்த சீஸனுக்கான எதிர்பார்ப்பையும் ‘லெய்லா’ உருவாக்கியது. தற்போது, ஓடிடி தளங்களுக்கும் பிரத்யேக தணிக்கை வரம்புகள் அமலாகும் என்கிற மத்திய அரசின் அதிரடி அறிவிப்பைப் பார்க்கும்போது, ‘லெய்லா’வின் அடுத்த சீஸனுக்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.


கரோனா போல் பரவிய ஓடிடி

’ஓவர் த டாப்’ எனப்படும் ‘ஆன்லைன் ஸ்ட்ரீமிங்’ தளங்கள் இந்தியாவில் அறிமுகமானபோது, பிரமாதமான வரவேற்பு பெறவில்லை. ஆனால், சர்வதேச ஓடிடி தளங்களான நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்றவை இந்தியாவில் முதலீடு செய்து, இந்தியாவுக்கான பிரத்யேகப் படைப்புகளைத் தயாரிப்பதற்கான போட்டியில் குதித்த பிறகு நிலைமை மாறியது. வழக்கமான திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களுக்கு மாற்றாக ஓடிடி தளங்கள் முன்வைத்த பிரத்யேகப் படைப்புகள், இளம் தலைமுறையினரைப் பெருவாரியாக ஈர்க்கத் தொடங்கின.

டிசம்பரில் இந்திய ஓடிடி தளங்களின் சந்தாதாரர் எண்ணிக்கை 17 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா ஊரடங்கு தொடங்கிய 30 நாட்களுக்குப் பின்னர், இந்திய ஓடிடி சந்தையின் வர்த்தக மதிப்பு 500 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது. இது இந்தியத் திரையரங்கச் சந்தையின் வர்த்தக மதிப்பில் பத்தில் ஒரு பகுதி. எதிர்வரும் 2025ல் இந்திய ஓடிடியின் வர்த்தக மதிப்பு ரூபாய் 4000 கோடியாக எகிறும் எனவும் கணிக்கப்பட்டது. ஊரடங்கையொட்டிப் பெருகிய புதிய சந்தாதாரர்களின் எதிர்பார்ப்புகளை ஈடேற்ற, ஓடிடி தளங்கள் புதுப்புது படைப்புகளைத் தயாரிப்பதில் தீவிரம் காட்டிவரும் சூழலில்தான், ‘ஓடிடி-க்கும் இனி தணிக்கை உண்டு’ என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

சகிப்பின்மையின் வெளிப்பாடா?

திரையரங்குகளுக்கான முழுநீளத் திரைப்படங்கள், தொலைக்காட்சிகளின் விதவிதமான தொடர்கள் ஆகியவற்றுக்கு மத்தியில், பார்வையாளர்களைத் தங்கள் பக்கமும் ஈர்ப்பதற்கு ஓடிடி தளங்களின் வித்தியாசமான படைப்புகள் வழி ஏற்படுத்திக்கொடுத்தன. படைப்பின் உள்ளார்ந்த சாரத்தை மட்டுப்படுத்தி பூசி மெழுகாமல், கதை, கதாபாத்திரச் சித்தரிப்பு, காட்சியமைப்பு ஆகியவற்றில் சுதந்திரமான அணுகுமுறையைக் கையாண்டதே ஓடிடி தளங்களுக்கெனப் பிரத்யேகமாக தயாராகும் படைப்புகளின் தனித்துவமாக ஆனது.

எந்த விதமான சடங்குகள், வரையறைகள், கட்டுபாடுகளுக்கும் உடன்படாது, ஒரு படைப்பு என்ன கோருகிறதோ அதனை சட்டகத்துக்குள் கொண்டுவரும் சுதந்திரத்தை, படைப்பாளிகளுக்கு ஓடிடி தளங்கள் வழங்கின. இதனால், படைப்பாளி, பார்வையாளர்கள் ஆகிய இரு தரப்பாலும் ஓடிடி ‘மாற்றுத் திரை’யாக மாறிப்போனது. சினிமாவுக்கான சட்டபூர்வ தணிக்கை நடைமுறைகள் எதுவும் ஓடிடி தளங்களுக்கு பொருந்தாது என்பதால், இந்தப் படைப்புச் சுதந்திரம் முற்றிலும் விடுதலை உணர்வுடன் கூடிய படைப்புகள் வெளியாகக் காரணமாகியது.

இந்தக் கட்டுபாடற்ற சுதந்திரம் காரணமாக, பல தொடர்கள் மற்றும் ஓடிடிக்காக தயாராகும் பல திரைப்படங்களில் வசைச்சொற்கள், மிதமிஞ்சிய வன்முறை, திணிக்கப்பட்டப் பாலியல் காட்சிகள், அதிகார பீடத்தை அசைத்துப் பார்க்கும் கருத்துகள், மறைமுக விமர்சனங்கள் ஆகியனவும் இடம்பெறத் தொடங்கின. இதனால், ஒரு கட்டத்தில் தனது வளர்ச்சிக்கு நிகராக எதிர்ப்பையும் சந்திக்கத் தொடங்கியது ஓடிடி. மேம்போக்காக, பாலியல் காட்சிகள், வன்முறை எனக் குற்றம்சாட்டுகள் எழுந்தாலும் ஓடிடியின் பிரத்யேக உள்ளடக்கங்களில் அதிகார பீடங்களைச் சங்கடத்துக்கு உள்ளாக்கும் கருத்துகள் இடம்பெற்றுவிடுவதே அவற்றுக்கு தணிக்கையை நிர்பந்திப்பது தொடர்பான இடத்துக்குத் தள்ளிக்கொண்டு வந்திருக்கிறது என்ற விவாதம் எழுந்திருக்கிறது. ஓடிடி மற்றும் சமூக ஊடகங்களுக்கான தணிக்கை அறிவிப்பைத் தொடர்ந்து, ‘விமர்சனம் நல்லது என்பது குறித்த புரிதல் இல்லாமையும் சகிப்பின்மை மறைந்துவிட்டதையுமே இது காட்டுவதாக’ படைப்பாளிகள் தங்கள் கருத்துகளைப் பதிந்து வருகிறார்கள்.

தணிக்கையும் தனி நபர் சுதந்திரமும்

‘ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை நீட்டிக்கப்பட்டால், பெரும்பான்மைப் பார்வையாளர்கள் தற்போது கொண்டாடி வரும் அவற்றின் தனித்துவம் பலியாகலாம். சுதந்திரமான, சமூக மாற்றம் கோரும் படைப்புகளின்

சாளரம் மூடப்பட்டுவிட்டுவிடலாம். அசலான ‘மாற்றுத் திரை’யாக அறிமுகமாகியிருக்கும் ஓடிடி படைப்புகளின் எல்லை சுருங்கிப்போகலாம்’ என்கிற படைப்பாளிகளின் கருத்துகளை புறந்ததள்ளமுடியாது. அதேநேரம், கருத்துச் சுதந்திரம், படைப்புச் சுதந்திரம் என்ற பெயரால், யாரும், யாரைப் பற்றியும் எதைப்பற்றியும் என்ன வேண்டுமானலும் எந்த எல்லைக்கும் சென்று அவதூறாக விமர்சிக்கமுடியும் என்ற நிலை நீடிப்பதும் ஒரு வளரும் சமூகத்துக்கு ஊறுவிளைவிக்கக் கூடியது. இப்படிச் செய்பவர்களை நெருங்கவே முடியாது என்ற கட்டற்றச் சுதந்திரம், சமூகத்தின் அமைதியைக் குலைத்து, கலகம் செய்ய அவர்களைத் தூண்டிக்கொண்டே இருக்கும் என்பதை உண்மையான படைப்பாளிகள் மறுக்கமாட்டார்கள்.

மற்றொரு பக்கம், நாகரீகமடைந்த சமூகத்தில், வயதுவந்த ஒரு குடிமகனுக்கு, இணையப் பெருவெளியில் எதனைத் தேடிக் காண வேண்டும், எதனைத் தவிர்க்க வேண்டும் என்கிற சுதந்திரம் அடிப்படையானது. முதிர்ந்த பார்வையாளனின் உரிமையில் மூக்கை நுழைப்பதும் அசலான படைப்புகளின் சுதந்திரத்தை துண்டாடுவதும் நாகரிகமான சமூகத்துக்கு ஆரோக்கியமல்ல என்பதே பல படைப்பாளிகளின் கருத்தாக இருக்கிறது. அதை ஏற்கும் அதேசமயம், பெரியவர்களுக்கானப் படைப்புகளைச் சிறார்கள் அணுகமுடியாதவாறு தவிர்ப்பதற்கான பொறிமுறையை ஓடிடியில் அமைப்பதும், அதை எளிதாக்குவதும் சமூக வலைதளங்களை சிறார்கள் பயன்படுத்துவதை முற்றாகக் கட்டுப்படுத்துவது கண்காணிப்பு இங்கே என்ன தரவுகள் உள்ள என்பது குறித்த விவாதங்களுக்கும் கூட நாம் முன்னேற வேண்டிய தருணம் இது.

எப்படிப்பட்ட தணிக்கை தேவை?

திரைப்படங்களைத் தணிக்கை செய்ய ‘சினிமா சான்றளிக்கும் மத்தியக் குழு’ எனப்படும் சென்சார் போர்டினை நாமறிவோம்.

திரைப்படக் கலை, தணிக்கை விதிகளுக்கு ஏற்ப, தனது படைப்புச் சிறகை அதிக உயரத்துக்கு விரிப்பதில்லை. ஆனால், அச்சு ஊடகங்களுக்கு, ‘இந்திய பிரஸ் கவுன்சில்’, செய்தி சேனல்களுக்கு, ‘நியூஸ் பிராட்காஸ்டர்ஸ் அசோசியேஷன்’ போன்றவை, சுய தணிக்கை அடிப்படையிலான கட்டுப்பாடுகளை கண்காணித்து வரும் அமைப்புகள். இந்த வரிசையில் விளம்பரங்களுக்கு என ‘இந்திய விளம்பரத் தர கவுன்சில்’ உண்டு. திரைப்படம் தவிர்த்த இந்த சுதந்திரமான ஊடகங்கள் ‘எல்லை மீறும்போது கண்டிக்கவும் எச்சரிக்கவும்’ சிறப்பான முறையில் இந்த அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு சுதந்திரமாக

இயங்கவேண்டிய ஊடகத் துறைகளின் வரிசையிலேயே ‘மாற்றுத் திரை’யான ஓடிடிக்கும் பார்வையாளர்கள் இடமளித்துள்ளனர்.

மக்களிடம் பொதுக்கருத்தை உருவாக்கும் மரபார்ந்த இந்த ஊடகங்கள் தவிர்த்து, ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள், புற்றீசலாய் பெருகிவரும் ஆன்லைன் செய்தி ஊடகங்கள், ஓடிடி தளங்கள் ஆகியவை சுதந்திரமாய் செயல்பட்டு வருகின்றன. அதேநேரம் ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்கள் இந்தத் தளங்களில் தென்பட்டால் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரவும் இதரச் சட்ட நடவடிக்கைகளை பாய்ச்சவும் முடியும்.

இப்படிப்பட்டக் கட்டுப்பாடுகள் ஏற்கெனவே இருந்தாலும் தற்போது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மேற்பார்வையிலிருந்து, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுபாட்டுக்கு அவை மாறுகின்றன. இங்கே சமூக ஊடகங்கள், ஆன்லைன் செய்தி தளங்கள், ஓடிடி தளங்களுக்கான பிரத்யேக ஒழுங்குமுறைகள், வீரியமான கட்டுப்பாடுகள் வகுக்கப்படுமென்பதை மத்திய அரசின் அறிவிப்பு உறுதி செய்கிறது.

அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகள், திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் ஆகியவற்றுக்கு காலங் காலமாகச் சுய கட்டுப்பாடும், அதைத் தாண்டிய தணிக்கைத் துறையின் சான்றளிப்பும், நீதித்துறையின் கண்காணிப்பும் நடைமுறையில் இருந்து வருகின்றன. இந்த ஊடகங்களில் பணி சார்ந்தும் படைப்பு சார்ந்தும் இயங்குவோர், இந்தக் கட்டுபாடுகள், சமூக நலனுக்கும் அமைதிக்கும் மிகவும் அவசியமானவை என்பதை உணர்ந்தே, நடைமுறையில் உள்ள விதிகளை மதித்து, சுய கட்டுப்பாட்டுடன் நடந்து வருகிறார்கள். இந்தக் குறைந்தபட்சக் கட்டுபாடுகள், ஓடிடி தளங்கள் உருவாக்கும் படைப்புகளுக்கும் சமூக ஊடகங்களில் பதியப்படும் கருத்துகள் மற்றும் படைப்புகளுக்கும் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், இப்படி உருவாக்கப்படும் கட்டுப்பாடுகளே ஒடுக்குமுறையாக மாறும்போதுதான் அதுகுறித்த கேள்விகளை எழுப்ப வேண்டிய கட்டாயத்தை உருவாக்குகிறது.

இதைப் புரிந்து கொண்டால், ஓடிடி படைப்புரிமையின் நியாயமும் அதற்குத் தேவையான கட்டுபாடுகளும் பற்றி ஓரளவேனும் புரியத் தொடங்கும். மற்றபடி ஓடிடி தளங்களுக்கு ஒழுங்குமுறைகள், தணிக்கை முறைகள் அவசியமா எனில் அவசியமே. ஆனால் நடைமுறையில் இருக்கும் சுய தணிக்கை முறைகளின் நீட்சியாக அவை இருப்பதே நல்லது. அதுவே பார்வையாளர்களின் சுதந்திரத்தை மதிப்பதன் அடையாளமாகவும் இருக்கமுடியும்.

எங்கும் உண்டு எதிர்ப்பு!

‘சேக்ரட் கேம்ஸ்’ வலைத்தொடரின் முதல் சீசன் வெளியானபோது அதன் குறிப்பிட்ட காட்சிகள் முன்னாள் பிரதமர் அமரர் ராஜிவ் காந்தியின் புகழுக்கு இழுக்கு சேர்ப்பதாகக் கூறி, பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்தியாவில் மட்டுமல்ல, கட்டுத்தளைகளை விரும்பாத மேலை நாடுகளிலும்கூட ஓடிடி படைப்புகளுக்கு எதிரான புகார்கள் உண்டு.

அண்மையில் பதின்மச் சிறுமிகள் சித்தரிக்கப்பட்ட விதத்துக்கு எதிராக, ‘க்யூட்டிஸ்’ என்ற பிரெஞ்சு திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் தளத்திலிருந்து நீக்கும்படி செனட்டர்கள் பலர் குரல் கொடுக்கும் அளவுக்கு அமெரிக்கர்கள் மத்தியில் கடும் ஆட்சேபனை கிளம்பியது.

ஆனால், இந்த எதிர்ப்புகளுக்கெல்லாம் முன்னதாகவே, வளைகுடா நாடுகள், இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கானப் படைப்புகளை மிகவும் கவனத்துடன் ஓடிடி நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன. மேற்கத்திய நாடுகளுக்கான அனைத்துப் படைப்புகளும் இந்த பிராந்தியங்களில் காணக் கிடைப்பதில்லை.

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com


திரை வெளிச்சம்Screen lightதணிக்கைSensorகரோனாஓடிடிOttதிரையரங்குகள்தனி நபர் சுதந்திரம்சினிமாமாற்றுத் திரை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x