Published : 20 Nov 2020 03:14 AM
Last Updated : 20 Nov 2020 03:14 AM

வசூல் களம்: எதிர்பார்த்தது நடந்தது!

கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதியன்று கடைசியாக தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகியிருந்தன. பின்னர் மார்ச் 23-ம் தேதி முதல் கரோனா பரவல் காரணமாகத் தமிழ்நாட்டில் உள்ள 997 திரையரங்குகளும் இழுத்து மூடப்பட்டன. கரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்ததையடுத்து, 7 மாதங்களுக்குப் பின்னர், நவம்பர் 10-ம் தேதி 300-க்கும் அதிகமானத் திரையரங்குகள் முதல் கட்டமாகத் திறக்கப்பட்டன.

10 சதவீதப் பார்வையாளர்கள் கூட வரவில்லை. இதனால் பல திரையரங்குகள் காட்சிகளைத் தொடர்ந்து ரத்து செய்து வந்தன. ஆனால், தீபாவளியை முன்னிட்டு ‘பண்டிகைக்கான கொண்டாட்ட மனநிலை’யுடன் பார்வையாளர்கள் நிச்சயம் வருவார்கள் என திரையரங்கினரும் திரையுலகினரும் நம்பினார்கள். அவர்களது நம்பிக்கை வீண் போகவில்லை. தீபாவளி தினத்தன்று 75 சதவீதத் திரையரங்குகள் உற்சாகத்துடன் திறக்கப்பட்டன. பெரிய நட்சத்திரங்களின் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், 7 சிறிய படங்களின் வெளியீடு அறிவிக்கப்பட்டது. இறுதியில், விளம்பரச் செலவு உள்ளிட்ட நெருக்கடிகள் காரணமாக 3 படங்கள் பின்வாங்கின.

இறுதியாக‘பிஸ்கோத்’, ‘மரிஜூவானா’, ‘தட்றோம் தூக்குறோம்’ உள்ளிட்ட 4 படங்கள் ரிலீஸாகின. பெரும்பாலான ஊர்களில் அரசு அனுமதித்த 50% பார்வையாளர்களால் திரையரங்குகள் நிரம்பி வருவதை பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. தமிழகம் முழுவதும் கடந்த 14-ம் தேதி தொடங்கி முதல் மூன்று நாள் முடிவில், வெளியான நான்கு புதிய படங்களின் டிக்கெட் விற்பனை முலம், 6.5 கோடி ரூபாய் வசூல் கிடைத்திருப்பதாகவும் கேண்டீன் விற்பனைக்கும் குறைவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இதே நிலை இரண்டாவது வாரமும் நீடிக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

கட்டணத் தள்ளுபடி

உண்மையில் பெரிய கதாநாயகர்களின் படங்கள் தீபாவளிக்கு வெளியாகியிருந்தால், தற்போது வெளியான சிறிய படங்களுக்கு திரையரங்குகளில் இடம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால், வெளியீட்டுக்குத் தயாராக இருந்த இந்தச் சிறிய படங்களுக்கு ‘வெர்சுவல் பிரிண்ட் பீஸ்’ எனப்படும் விபிஎஃப் (VPF) கட்டணத்தை, இரண்டு வாரங்களுக்கு டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் தள்ளுபடி செய்தன., இதனால், தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படங்களுக்கு வெளியீட்டுச் செலவில் பெரும் சுமை குறைந்தது. ‘இந்த வி.பி.எஃப் கட்டணத்தை நாங்கள் இனி கட்டமாட்டோம்’ என நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர்’ உறுதியாகக் கூறிவருகின்றனர். இந்நிலையில், ‘சிறிய பட்ஜெட் படங்களுக்கான வி.பி.எஃப் கட்டணத்தை, திரையில் காட்டப்படும் விளம்பரம் உள்ளிட்ட வேறு வழியில் ஈட்டிக்கொள்ள டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் முன்வரவேண்டும். அப்படிச் செய்தால் தேங்கிக் கிடக்கும் சிறிய படங்களைத் திரையரங்கில் வெளியிட அதன் தயாரிப்பாளர்கள் முன்வருவார்கள்’ என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

புரிதல் தேவை

அதேபோல், ‘தற்போது சிறிய படங்களுக்குத் தந்த ஆதரவை, பெரிய படங்கள் வெளியாகும் நேரத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்ட திரைகளைக் கொண்ட திரையரங்கினர் தொடர்ந்து தரவேண்டும்’ எனத் தயாரிப்பாளர்கள் தரப்பில் கேட்டிருக்கிறார்கள். இதற்கு பதில் கூறும் விதமாக, ‘ஒரே வாரத்தில் ஐந்து, ஆறு சிறு படங்களை கும்பலாக ரிலீஸ் செய்யதுவிட்டு, திரையரங்கினர் ‘ஷோ’ தரவில்லை என தயாரிப்பாளர்கள் குற்றம்சாட்டுவதில் நியாயம் இல்லை. எனவே சிறிய படங்களின் எண்ணிக்கையைக் குறைத்து ரிலீஸ் செய்தால், அதற்கும் பார்வையாளர்கள் நிச்சயம் வருவார்கள். இரண்டுக்கும் மேற்பட்ட சிறிய படங்கள் ஒரேநேரத்தில் வெளியாகும்போது ‘சாய்ஸ்’ என்ற அடிப்படையில் பார்வையாளர்கள் தேர்ந்தெடுக்கத் தொடங்கிவிடுவார்கள். இதனால் எல்லா படத்துக்கும் தீபாவளி சமயம்போல் வசூல் கிடைக்காது. இந்த நடைமுறை உண்மையைப் புரிந்துகொண்டு தயாரிப்பாளர்கள் செயல்பட வேண்டும்’ எனத் திரையரங்கத் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

ஓடிடி கொண்டாட்டம்

இதுவொருபுறம் இருக்க, ஓடிடி தளங்களில் பல படங்கள் தீபாவளி வெளியீடு கண்டன. சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘சூரரைப் போற்று’ படத்துக்கு விமர்சன ரீதியாகப் பாராட்டுகள் குவிந்தன. எதிர் விமர்சனங்களையும் அதிகமாகக் காணமுடிந்தது. அதேபோல், படம் வெளியான நாளில் ‘பைரசி’ பிரதியும் இணையத்தில் வெளியானது என்று கூறப்பட்டது. அதையெல்லாம் மீறி, எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு லாபத்தை ஓடிடி நிறுவனம் ஈட்டியிருப்பதாகவும் தென்னிந்தியாவில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான புதிய சந்தாதாரர்களை இந்தப் படத்தின் மூலம் ஈட்டியிருப்பதாகவும் ஓடிடி ஊடகப் பிரதிநிதிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

நயன்தாரா நடிப்பில் ஓடிடியில் வெளியான மற்றொரு படமான ‘மூக்குத்தி அம்மன்’ படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. என்றாலும் எதிர்பார்த்ததைவிட அந்தப் படத்துக்கும் அதிக வசூல் கிடைத்திருப்பதாகத் தெரிகிறது. இந்த இரு பெரிய படங்களுக்கு நடுவே, ஓடிடியில் இரண்டு சிறிய பட்ஜெட் படங்களும் வெளிவந்தன. அவற்றில் ‘பச்சை விளக்கு’ படம், ‘மூவி இன்’என்கிற புதிய ஓடிடி தளத்தில் 50 ரூபாய் செலுத்தி பார்க்கும் வண்ணம் வெளியாகியிருக்கிறது. பல சர்ச்சைகளைச் சந்தித்த ‘நுங்கம்பாக்கம்’ படம் ‘சினி பிளிக்ஸ்’ என்கிற ஓடிடி தளத்தில் வெளியானது. இன்னொரு அதிசயமும் நடந்தது! பிரசன்னா நடித்திருந்த ‘நாங்க ரொம்ப பிஸி’ என்கிற புதிய படத்தை, தீபாவளி அன்று காலை 11 மணிக்கு சன் டிவி நேரடியாக ஒளிபரப்பு செய்தது. மறுநாளிலிருந்து அத்தொலைக்காட்சியின் ஓடிடி தளமான ‘சன் நெக்ஸ்’டில் அந்தப் படம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கரோனாவுக்கு முன்புவரை பண்டிகை நாட்களின் கொண்டாட்டத்தைத் திரையரங்குகளில் மட்டும்தான் காணமுடியும் என்ற நிலையை ஓடிடி தளங்கள் இம்முறை மாற்றியிருக்கின்றன. அதேநேரம், திரையரங்குகளுக்கு மக்கள் வரமாட்டார்கள் என்ற கற்பனையை, தீபாவளிக்குத் திரையரங்குகளில் வெளியான சிறிய படங்கள் சுக்கல் நூறாக உடைத்துவிட்டன. எனவே சிறிய படங்கள் மீதான ஒவ்வாமையை திரையரங்கினர் முற்றாகக் கைவிட வேண்டும் என்பதை இந்தக் கரோனா தீபாவளி சொல்லாமல் சொல்லியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x