Published : 27 Oct 2015 11:02 AM
Last Updated : 27 Oct 2015 11:02 AM

கடந்த வாரம்: ஜெர்மனியில் மேயராக ஒரு இந்தியர்

ஜெர்மனி நகர மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் தரன் (49) பதவியேற்றுக்கொண்டார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனி பிளவுபட்டது. அதன்படி மேற்கு ஜெர்மனியின் தலைநகராகப் பான், கிழக்கு ஜெர்மனியின் தலைநகராகப் பெர்லின் விளங்கின. 45 ஆண்டுகளுக்குப் பிறகு 1990-ல் கிழக்கு, மேற்கு ஜெர்மனி நாடுகள் ஒன்றாக இணைந்தன.

இதில் பான் நகர மேயர் தேர்தல் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற்றது. இதில் தற்போதைய பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் கிறிஸ்டியன் டெமா கரடி யூனியன்-சி.டி.யு. கட்சியைச் சேர்ந்த அசோக் தரன் 50.06 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார். பான் நகரில் அக்டோபர் 21 அன்று நடைபெற்ற விழாவில் அவர் அதிகாரபூர்வ மேயராகப் பதவியேற்றுக்கொண்டார். அவர் ஐந்து ஆண்டுகள் பதவியில் நீடிப்பார்.

இந்தியத் தந்தைக்கும் ஜெர்மனி தாய்க்கும் பிறந்த அவர் ஜெர்மனியின் முதல் இந்திய வம்சாவளி மேயர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.

பலகையில் பறந்து கின்னஸ் சாதனை

கனடா நாட்டின் ஏரியின் மீது 5 மீட்டர் உயரத்தில் பறந்து ஒரு உலகச் சாதனையைப் பறக்கும் பலகை என்ற ஹோவர்போர்டைப் பயன்படுத்திக் கனடாவைச் சேர்ந்த இளைஞர் செய்துள்ளார்.

பறந்து செல்லும் வகையில் புதிய ஹோவர்போர்டை கனடாவின் கியூபெக் நகரைச் சேர்ந்த கேட்டலின் அலெக்சாண்ட்ரூ டுரூ (30) உருவாக்கியுள்ளார். அவரது ஹோவர்போட்டின் அடியில் 4 புரொபல்லர்கள் பொருத்தப்பட்டுள்ளன. கால்களின் மூலமாகவே இந்த ஹோவர்போர்டைக் கட்டுப்படுத்தலாம்.

அவர் தனது ஹோவர்போட்டில் 275.9 மீட்டர் தொலைவுவரை பயணித்துப் புதிய உலகச் சாதனை படைத்துள்ளார்.

புதிய தலைநகருக்கு மோடி அடிக்கல்

ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதிக்குப் பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 22 அன்று அடிக்கல் நாட்டினார். அனைத்துப் புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் உள்ளடக்கிய ஒரு நவீன மகா நகரமாக அமராவதி உருவாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுக் கடந்த ஆண்டு ஜூனில் தெலங்கானா தனி மாநிலமாக உதயமானது. தற்போதைக்கு இரு மாநிலங்களுக்கும் பொதுவானத் தலைநகராக ஹைதராபாத் இருக்கும் என்றும், ஆந்திராவுக்குத் தனித் தலைநகர் உருவாக்கப்படும் என்றும் அப்போது அறிவிக்கப் பட்டது.

இதையடுத்து, ஆந்திராவுக்கான புதிய தலைநகரைத் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்தது. குண்டூர் மாவட்டத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு, புதிய நகருக்கு அமராவதி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மகளிர் ஆணையத்துக்கு ஆண் உறுப்பினர்

தேசிய மகளிர் ஆணையத்தின் (என்சிடபிள்யூ) உறுப்பினராக அலோக் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆணையத்தில் ஒரு ஆண் உறுப்பினராவது இதுவே முதன் முறை.

முன்னாள் கேபினட் செயலரான அலோக் ராவத், 5 உறுப்பினர்களை கொண்ட தேசிய மகளிர் ஆணையத்தில் 4-வது உறுப்பினராக ராவத் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்தியப் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தில் முறையே இயக்குநராகவும், இணைச் செயலராகவும் பணியாற்றியுள்ள அலோக் ராவத், மேலும் பல துறைகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவசரச் சட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்

தொழில் மற்றும் வர்த்தகத் தகராறுகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில், இரண்டு அவசரச் சட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை அக்டோபர் 21 அன்று ஒப்புதல் அளித்தது.

தொழில் மற்றும் வர்த்தகத் தகராறுகளைத் தீர்க்கத் தற்போது, ‘மத்தியஸ்தம் மற்றும் சமரசச் சட்டம் - 1996’ அமலில் உள்ளது. இந்தச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கான அவசரச் சட்டத்துக்குக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

வர்த்தகத் தகராறுகளை விரைந்து முடித்து வைக்கக் காலக் கெடுவை நிர்ணயிக்கும் வகையில் சட்டத் திருத்த மசோதாவுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் அமைச்சரவை ஒப்புக் கொண்டது. ஆனால், நாடாளுமன்றத்தில் அந்த மசோதாவைத் தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் அக்டோபர் 21-ல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது, இது தொடர்பான இரண்டு அவசரச் சட்டங்களைப் பிறப்பிக்க முடிவு எடுக்கப்பட்டது. இவற்றின் மூலம் வர்த்தகத் தகராறுகளை 18 மாதங்களுக்குள் முடித்து வைக்க வழி ஏற்படும்.

- தொகுப்பு பிரம்மி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x