

உலகின் பண்டைய நாகரிகங்களில் கிரேக்கமும் ஒன்று. மேற்கத்திய நாகரிகத்தின் அடிப்படையாக அமைந்தது கிரேக்கம்தான் என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். கி.மு. 1100 ஆண்டு அளவில், கிரேக்கத்தின் இருண்ட கால முடிவு தொடங்கி கி.மு. 146 வரையிலான காலகட்டம் கிரேக்கப் பண்பாட்டைக் குறிக்கும். கிரேக்கப் பண்பாடு ரோமப் பேரரசின் மீது வலுவான செல்வாக்கைச் செலுத்திவந்தது. அதுவே இதன் பண்பாட்டை ஓரளவு ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் பரப்பியது. மொழி, அரசியல், கல்வி முறை, மெய்யியல், அறிவியல், கலைகள் போன்றவற்றில் கிரேக்கம் செழித்து விளங்கியது. மேற்கு ஐரோப்பாவிலும் 18,19-ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் புதிய மறுமலர்ச்சிகளை உருவாக்கியதற்கும் இதுதான் அடிப்படையாக விளங்கியது.
கிரேக்க நாட்டின் வடக்கே அல்பேனியாவும், மாசிடோனியாவும், பல்கேரியாவும் கிழக்கே துருக்கியும் அமைந்துள்ளன. ஏகியன் கடல் கிழக்கிலும், தெற்கிலும் பரவி உள்ளது. மேற்கே யவனக் கடல் உள்ளது. கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிகளில் பல்வேறு சிறு சிறு கிரேக்கத் தீவுகள் அமைந்துள்ளன.
கிரேக்கர்கள் பொதுவாகப் போர் செய்வதில் வல்லவர்கள். மிகவும் சிறு வயது முதலே குழந்தைகளுக்குக் கடுமையான போர்ப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன. உலகின் பெரும்பகுதியை இவர்கள் ஆண்டனர். போரில் இவர்கள் ‘வெற்றி அல்லது வீர மரணம்’ என்ற கொள்கையைப் பின்பற்றினர்.
மாவீரர் அலெக்சாண்டர்
கிரேக்கம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருபவர் பேரரசர் அலெக்ஸாண்டர். உலக வரலாற்றில் பெரும் வெற்றிகளைப் பெற்ற ராணுவத் தலைவர்களின் ஒருவராக இவர் போற்றப்படுகிறார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இளம் அலெக்ஸாண்டர் சிறந்த போர் அனுபவமும் கல்வி அறிவும் பெற்றிருந்தார். கிரேக்கப் பேரறிஞராகிய அரிஸ்டாட்டில் அலெக்சாந்தருக்குக் கல்வி கற்பித்தார்.
இவரது காலத்தில் கிரேக்க சாம்ராஜ்யம் பரந்து விரிந்து கிடந்ததால் தொலைதூர இடங்களில்கூடக் கிரேக்கக் குடியேற்றங்கள் நடந்தன. அதன் பண்பாட்டுச் செல்வாக்கும் பல நூற்றாண்டுகள் நீடித்தன. இதனால், கிரேக்கப் பண்பாடு, மையக்கிழக்கு, இந்தியா ஆகிய இடங்களின் கலப்புப் பண்பாடாக விளங்கியது.
கிரேக்கம் பல துறைகளிலும் உலகிற்கே வழிகாட்டியாக விளங்கியது. வானவியல், கணிதம், புவியியல் சோதிட இயல், இலக்கியம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருந்தது. அறிஞர்கள், கிரேக்கத்தின் வானவியலாளர், கணிதவியலாளர், புவியியலாளர் மற்றும் சோதிட இயலாளர் என்ற பல துறை வல்லுநராகத் திகழ்ந்தவர் ஹிப்பார்க்கஸ். இவர் கோணவியலின் நிறுவனர் என்று கருதப்பட்டவர். இரண்டாம் நூற்றாண்டிலேயே விண்மீன்களை வெறும் கண்களால் ஆராய்ந்து, அவற்றின் பட்டியல் ஒன்றைத் தயாரித்தவர். அதைக் கொண்டு விண்மீன் கோளம் ஒன்றைத் தயாரித்து, அதிலிருந்து விண்மீன்களின் இருப்பிடத்தைக் குறிப்பிட்டார். இதனால் இவர் கோளரங்கங்களின் முன்னோடி என அழைக்கப்பட்டார்.
எபிகியூரஸ் என்பவர் கி.மு. 341 ஆண்டிலேயே பகுத்தறிவுக் கோட்பாடுகளை வெளியிட்டவர். தான் வாழ்ந்த சமூகத்தின் பொதுவான பழக்கங்களிலிருந்து மாறுபட்டு விளங்கியவர் இவர். பெண்களையும் அடிமைகளையும் தனது பள்ளியில் சேர்த்து அவர்களுக்குக் கல்வியறிவு கொடுத்தார்.
கிரேக்கத்திற்கு மற்றொரு அடையாளமாகத் திகழ்ந்தவர், தர்க்க சாத்திர மேதை சாக்ரடீஸ். கேட்பதையெல்லாம் அப்படியே நம்பிக்கொண்டு காலம் கழித்த மக்கள் கூட்டத்தினரிடையே சாக்ரடீஸ் மாறுபட்டவராக இருந்தார். நீதி, நியாயம், ஆத்மா, கடவுள், சமூகம், அரசு, சம்பிரதாயம் என எல்லாவற்றையும் ஆய்வுக்குட் படுத்தியவர், சாக்ரடீஸ்.
கிரேக்க இலக்கியங்கள்
மிகவும் தொன்மையானவை. கி.மு. 600களில் வாழ்ந்த ஈசாப் ஓர் அடிமை. ஈசாப்பின் நீதிக்கதைகள் இவர் கூறியவைதான். அவை உலகின் ஏராளமான மொழிகளில், மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஓமர், சாஃபக்ளீஸ், ப்ளூட்டார்ச் போன்ற கவிஞர்கள், நாடகாசிரியர்களும் பண்டைய கிரேக்க இலக்கியத்துக்குப் பெருமை சேர்த்தவர்கள்.
ஐரோப்பாவின் செழிமைமிகு கலாச்சாரத்தின் தொடக்கம் கிரேக்க - உரோமை செவ்விய காலம் என்று பொதுவாக ஏற்கப்படுகிறது. பண்டைய கிரேக்க கலாச்சாரம் மேலைநாட்டுக் கலாச்சாரத்துக்கு அடிப்படை ஆயிற்று. ஐரோப்பாவின் மொழி, அரசியல், கல்வி முறைகள், மெய்யியல், அறிவியல், கலைகள் போன்றவை கிமு 700 அளவில் தோன்றிய கிரேக்க செவ்விய இலக்கியமாகிய ‘இலியட்’ என்னும் காப்பியக் காலத்திலிருந்தே தொடங்குகின்றன.