Last Updated : 11 Nov, 2020 03:17 AM

 

Published : 11 Nov 2020 03:17 AM
Last Updated : 11 Nov 2020 03:17 AM

மாய உலகம்! - கிருமிகளோடு போராடுவது எப்படி?

ஓவியம்: லலிதா

புதியவர்களைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும், யஷ்வந்த்ராவ் என்றோ டாக்டர் யஷ்வந்த்ராவ் என்றோ அல்ல, யஷ்வந்த்ராவ் புலே என்றே என்னை அறிமுகப்படுத்திக்கொள்வேன். என் பெயரைக் கேட்டு எதிரில் நிற்பவரின் முகம் மலர்கிறதா, சுருங்குகிறதா என்று கவனிப்பேன்.

மலர்ந்தால், ‘அப்பா நீங்கள் ஒரு மகத்தான மனிதர் என்று உள்ளுக்குள் பூரிப்பேன். சுருங்கினால், எனக்குள் அமைதியாக முணுமுணுத்துக்கொள்வேன். அப்பா, இன்னமும் உலகம் மாறவில்லை. இன்னமும் மனிதர்களின் நெஞ்சம் கனியவில்லை. போதுமான அன்பு இந்த உலகில் இன்னமும் சுரக்கவில்லை. உங்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வலுவை எனக்குத் தாருங்கள் அப்பா!’

என்னைப் போலவே என் அம்மாவின் பெயரோடும் வாழ்வோடும் ஒன்று கலந்து நிற்கிறார் புலே. நாங்கள் இருவருமே அவர் கரங்களில் வளர்ந்தவர்கள். அவரிடமிருந்து வந்தவர்கள். அவர் விட்டுச் சென்ற பணிகளை, அவர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து மேற்கொண்டு வருபவர்கள். அவருடைய கனவைப் பற்றிக்கொண்டு, அவருடைய சிந்தனைகளைச் சுவாசித்துக்கொண்டு இயங்குபவர்கள்.

‘இரண்டு கிருமிகளை எதிர்த்து நாம் போராட வேண்டும் யஷ்வந்த். ஒன்று உடலைத் தாக்கும். அதை எப்படிக் கையாள வேண்டும் என்று ஒரு மருத்துவனாக உனக்குத் தெரியும். இரண்டாவது, இதயத்தையும் மூளையையும் தாக்கும் சாதி என்னும் கிருமி. அது எங்கிருந்து தோன்றுகிறது, யாரைத் தாக்குகிறது, ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எப்படிப் பரவுகிறது, தொற்றிக்கொண்ட உடலையும் உள்ளத்தையும் எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கிறது என்பதை எல்லாம் கவனமாக ஆராய வேண்டும்.

உடலைத் தாக்கும் கிருமிக்குத் தடுப்பூசியோ மருந்துகளோ கண்டுபிடித்துவிடலாம். முழுச் சமூகத்தையும் பற்றிக்கொண்டு அதிலுள்ள ஒவ்வொருவரையும் அழித்துக்கொண்டிருக்கும் சாதியை எப்படி, எங்கிருந்து அணுகுவது? ஆம், எனக்குச் சாதி முக்கியம், அதற்கென்ன என்று பெருமிதத்தோடு அறிவிப்பவர்களை எப்படிக் குணப்படுத்துவது? அதற்கு முன்னால், நீங்கள் பெருமிதத்தோடு சுமந்துகொண்டிருப்பது ஓர் ஆபத்தான கிருமியை என்று எப்படி அவர்களுக்குப் புரியவைப்பது?

“ஒரு மருத்துவனாக முதல் கிருமியை அறிவியலைக் கொண்டும் பொறுப்புமிக்க ஒரு மனிதனாக இரண்டாவதைச் சமூக அறிவியலைக் கொண்டும் நீ குணப்படுத்த வேண்டும். இது எளிதல்ல, யஷ்வந்த். உன்னை இகழ்வார்கள். எதிர்ப்பார்கள். ஏசுவார்கள். புறக்கணிப்பார்கள்.

எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்க்கை முழுவதும் போராடினாலும் ஒரு சில கிருமிகளை மட்டுமே உன்னால் அழிக்க முடியும், ஒரு சிலரை மட்டுமே உன்னால் மீட்டெடுக்க முடியும். பரவாயில்லை. எனக்குப் பிறகு அம்மாவும் நீயும் என்பதைப் போல் உங்களுக்குப் பிறகு வேறு சிலர் தோன்றுவார்கள். கிருமிகள் வளர, வளர அவற்றை வீழ்த்துவதற்கான கரங்களும் பெருகிக்கொண்டே போகும். போக வேண்டும்.”

1896-ம் ஆண்டு சீனாவிலிருந்து ஒரு புதிய கொள்ளை நோய் கல்கத்தா, பாம்பே வழியாக எங்கள் பூனாவைத் தாக்கியபோது, அப்பாவின் சொற்கள் உயிர் பெற்று என் முன்னால் வந்து நின்றன. கொள்ளை நோயை எப்படிக் கையாள்வது என்று ஒருவருக்கும் தெரியவில்லை. ஆனால், மருத்துவமனைக்குள் யாரை அனுமதிக்க வேண்டும், யாரை அனுமதிக்கக் கூடாது என்பதில் சில மருத்துவர்கள் தெளிவோடு இருந்தார்கள்.

“வா யஷ்வந்த். நம் மக்களுக்கு நாமே சிகிச்சை அளிப்போம்” என்றார் அம்மா. நகருக்கு வெளியில் அவசரமாக ஒரு முகாமை உருவாக்கினோம்.

அம்மா என்னைவிட்டு ஒரு நொடியும் பிரியவில்லை. நோயாளிகளை ஒழுங்குபடுத்தினார். நான் சொல்லும் மாத்திரைகளை எடுத்துக் கொடுத்தார். உடைந்து அழுபவர்களைச் சமாதானம் செய்தார். என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்று வருபவர்களுக்கு எடுத்துச் சொன்னார்.

போர்க்களம் போல் இருந்தது எங்கள் முகாம். ஓய்வில்லை. உறக்கமில்லை. இருந்தாலும் அம்மா அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருந்தார். ஒரு நாள் பத்து வயது குழந்தை ஒன்றைச் சுமந்துகொண்டு மூச்சு வாங்க, வாங்க என் அறைக்குள் ஓடிவந்தார் அம்மா. நான் பதறிப் போனேன். அம்மா, இது ஆபத்தான தொற்று. நோயாளிகளைக் கவனமாகக் கையாள வேண்டும். நீங்கள் நகருங்கள் என்று அவரை அனுப்பிவிட்டு, குழந்தைக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க ஆரம்பித்தேன். குழந்தை பிழைத்துக்கொண்டது.

அம்மாவை என் கரங்களில் இழந்தேன். எல்லாமே முடிவுக்கு வந்துவிட்டதைப் போல் இருந்தது. என் உடலிலிருந்த வலுவெல்லாம் ஒரே கணத்தில் வடிந்துவிட்டதைப் போல் சோர்ந்து விழுந்தேன். இனி என்னால் எழுந்திருக்க முடியாது. இனி என்னால் இயங்க முடியாது. நான் உடைந்துவிட்டேன். போராடும் ஆற்றலை இழந்துவிட்டேன். நான் தோற்றுவிட்டேன்.

முகாமைவிட்டு வெளியில் வந்தபோது ஒரு சிறுமி ஓடிவந்து என்னைக் கட்டிக்கொண்டாள். “நீங்கள், டாக்டர் யஷ்வந்த்ராவ் புலேவா? என் அம்மாவால் காலையிலிருந்து எழுந்திருக்க முடியவில்லை! பக்கத்தில் மகர் காலனியில்தான் இருக்கிறார். தயவு செய்து ஒரு நிமிடம் வந்து பார்க்கிறீர்களா?”

வாய்வரை திரண்டு வந்துவிட்ட சொல்லைக் கண்ணீரோடு விழுங்கினேன். முடியாது என்று அப்பா சொல்வாரா? முடியாது என்று அம்மா சொல்வாரா? நான் மட்டும் ஏன் சொல்ல வேண்டும்? கிருமிகளிடம் எப்படி என் சமூகத்தை நான் விட்டுக்கொடுக்க முடியும்? கிருமிகள் வெல்வதை நான் எப்படி அனுமதிக்க முடியும்? என்ன இருந்தாலும் நான் ஒரு புலே அல்லவா?

(ஜோதிராவ் புலே - சாவித்ரிபாய் புலேயின் மகன் யஷ்வந்த்ராவ் புலே. சாவித்ரிபாய் மறைந்து ஏழு ஆண்டுகளில் அதே தொற்றுநோயால் யஷ்வந்த்ராவ் புலேவும் மறைந்து போனார்).

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x