Last Updated : 11 Nov, 2020 03:17 AM

 

Published : 11 Nov 2020 03:17 AM
Last Updated : 11 Nov 2020 03:17 AM

என்ன வாசிக்கலாம்? - வாசித்து மகிழ சில இதழ்கள்

கரோனா பொதுமுடக்கக் காலத்தில் பல நெருக்கடிகளைத் தாண்டி குழந்தைகளுக்கான இதழ்கள் சில வெளியாகியுள்ளன. குழந்தைகள் வாசிப்பதற்குப் பெரியவர்கள் எழுதியதாக இல்லாமல், குழந்தைகளையே எழுத வைத்து, ஓவியம் வரைய வைத்து சில இதழ்கள் சிறப்பாகக் கொண்டுவரப்பட்டுள்ளன. சமீபத்தில் வெளியான சில இதழ்களைப் பார்ப்போம்:

பஞ்சு மிட்டாய்

இதன் 10-ம் இதழ் பாடல்கள் சிறப்பிதழாக வெளியாகியுள்ளது. மறைந்த சிறார் பாடலாசிரியர்கள் லெமன், ம.இலெ. தங்கப்பா ஆகியோரின் பாடல்கள், வழக்குப் பாடல்-வினாவிடைப் பாடல் போன்றவற்றுடன் பூவரசம் பீப்பி செய்யும் முறை, வெற்றிச்செழியனின் ஊர் குறித்த விடுகதைகள் போன்றவை மறந்துவிட்ட சிறார் உலகை அழகாக நினைவுபடுத்துகின்றன.

11-ம் இதழில் கரோனா வைரஸ் குறித்துக் குழந்தைகள் கேட்ட கேள்விகளும் பதில்களும் இடம்பெற்றுள்ளன. குழந்தைகளிடையே அறிவியல் பார்வையை இந்தப் பகுதி வளர்த்தெடுக்கும். அத்துடன் பாவண்ணன், பெ.தூரன் ஆகியோரின் பாடல்கள், கோட்டான் கோழி விளையாட்டு, நம்மைச் சுற்றியுள்ள பறவைகளை நோக்குதல் என மாறுபட்ட படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

தொடர்புக்கு: 97317 36363

குட்டி ஆகாயம்

சின்னசாமி, நிலா, சஹானா ஆகிய சிறார்கள் 10-ம் இதழுக்கு ஆசிரியர் குழுவாகச் செயல்பட்டிருக்கிறார்கள். ‘காக்கா கதை’, ‘குட்டி நாய்க்குட்டி’ ஆகிய கதைகளில் குழந்தைகள் எந்தக் காலத்திலும் தொலைத்துவிடாத, அனைத்து உயிர்களின் மீதான கரிசன உணர்வு சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. புகழ்பெற்ற கொரியத் திரைப்படமான ‘The Way Home’ தொடர்பான சக்திவேலின் கட்டுரை, அரசுப் பள்ளி ஆசிரியர் சிந்துஜாவின் ‘கதை விளையாட்டு’ போன்றவை அவசியம் படிக்க வேண்டியவை.

தொடர்புக்கு: 98434 72092

சுட்டி யானை

யானை குறித்த கதை, யானைகளின் பரிணாம வளர்ச்சி, யானை குறித்த பாடல், யானை பெயரில் அமைந்த தாவரங்கள், யானை பெயரைத் தாங்கிய மற்ற உயிரினங்கள், வீணாகும் பொருள்களில் யானை பொம்மை உருவாக்குதல், வரலாற்றில் யானைகள், இந்திய – ஆப்பிரிக்க யானைகளுக்கு இடையிலான வேறுபாடுகள், யானைகள் குறித்த நேரடி அனுபவங்கள் என முழுக்க முழுக்க யானைகள் குறித்த சிறப்பிதழ்போல் வெளியாகியுள்ளது ‘சுட்டி யானை’ முதல் இதழ்.

தொடர்புக்கு: 95001 25125

தேன்சிட்டு

குழந்தைகளே பொறுப்பெடுத்து நடத்தக்கூடிய இந்த இதழ், நவம்பர் 14 குழந்தைகள் தினம் அன்று வெளியிடப்பட உள்ளது. ‘யாருக்குத் தைக்கத் தெரியும்?‘ என்ற சிறார் கதை நூலை எழுதிய ஏழாம் வகுப்பு படிக்கும் ரமணி, இதன் ஆசிரியர். இந்த இதழை அச்சிடுவதற்காக ரமணியின் தம்பி ரமணா, தன் உண்டியல் பணத்தைக் கொடுத்திருக்கிறார். இவர்களுடைய அம்மா அனிதா (கதைசொல்லி), எழுத்தாளர் உதயசங்கர் ஆகியோர் இந்த இதழின் ஆலோசகர்கள். தமிழில் சிறார் இதழ்கள் பெருமளவு விற்பனையான காலத்தில் இதுபோல் குழந்தைகளே நடத்திய இதழ்கள் பல வெளியாகியுள்ளன. அந்த மரபின் தொடர்ச்சியாக இந்த இதழ் வெளியாகவுள்ளது.

தொடர்புக்கு: 97515 49992

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x