Last Updated : 05 Oct, 2015 11:06 AM

 

Published : 05 Oct 2015 11:06 AM
Last Updated : 05 Oct 2015 11:06 AM

ஸ்கூட்டரிலிருந்து ஆட்டோவுக்கு...

1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றபோது மகிழ்ச்சியில் திளைக்காத இந்தியர்கள் இருக்க முடியாது. கிரிக்கெட் விளையாட்டு பிரபலமானதே இதற்குப் பிறகுதான் என்பதை யாரும் மறக்க முடியாது.

ஸ்கூட்டரிலிருந்து ஆட்டோவுக்கு என தலைப்பிட்ட செய்தி வாகன உலகம் பகுதியில் இடம்பெறுகிறது. ஏதாவது உருப்படியான தகவல் இருக்கும் என படிக்கப் போனால் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பற்றி எழுதினால் என்னாவது என்று முதல் பாராவை படித்தவர்கள் சலித்துக் கொள்வது புரிகிறது. ஆனால் சுவாரஸ்யத்துக்காக மட்டுமல்ல, வெற்றி பெற்ற வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஸ்கூட்டர் நிறுவனத்தின் கதையும் சுவாரஸ்யமானதுதான். அதற் காகத்தான் இந்த முன்னுரை.

கோப்பை வென்ற கிரிக்கெட் அணி வீரர்களைக் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு விஜய் சூப்பர் ஸ்கூட்டர் பரிசாக அளிக்கப்பட்டது.

இந்திய சாலைகளில் சீறிப் பாய்ந்த விஜய் சூப்பர் ஸ்கூட்டர்கள், கோப்பை வென்ற கிரிக்கெட் வீரர்களின் வீடுகளையும் அலங்கரித்தது. ஆனால் இன்று விஜய் ஸ்கூட்டர் அரிதான, வின்டேஜ் மோட்டார் பேரணியில் பங்கேற்கும் அளவுக்கு புராதனமாகிவிட்டது.

ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த இந்த ஸ்கூட்டரை தயாரித்தது ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம். மத்திய அரசின் பெருமளவு பங்களிப்போடு இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. இத்தாலியின் இன்னோசென்டி நிறுவனத்தின் வடிவமைப்பு, இயந்திரங்கள் மூலம் 1972-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இந்த ஆலை அமைக்கப்பட்டு 1975-ம் ஆண்டில் உற்பத்தி தொடங்கப்பட்டது.

இந்தியச் சந்தைக்கு இந்நிறுவனம் தயாரித்தது விஜய் சூப்பர் ஸ்கூட்டர்கள். ஏற்றுமதிக்காக லாம்பிரெட்டா ஸ்கூட்டரை தயாரித்தது. பிறகு உள்நாட்டிலும் லாம்பிரெட்டா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டன.

1980-களின் பிற்பாதியில் இந்திய நிறுவனங்கள் பலவும் மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் இறங்கின. பஜாஜின் சேடக் ஸ்கூட்டரின் ஆதிக்கம் விஜய் சூப்பரை பின்னுக்குத் தள்ளியது. போதாக் குறைக்கு பெரும்பாலான நிறுவனங்கள் ஜப்பானிய நிறுவனங்களுடன் கூட்டு வாகனங்களைத் தயாரித்துத் தள்ளின.

கைனடிக் நிறுவனம் ஹோண்டா நிறுவனத்துடன் இணைந்து ஸ்கூட்டர்களை தயாரித்தது. மோட்டார் சைக்கிள் தயாரிப்புக்கு ஹோண்டா நிறுவனத்துடன் கைகோர்த்தது ஹீரோ மோட்டோகார்ப். சுஸுகியுடன் கைகோர்த்து வலம்வந்தது தென்னாட்டின் டிவிஎஸ் மோட்டார்ஸ். பஜாஜ் குழுமமும் தன் பங்குக்கு கவாசகி நிறுவனத்துடன் இணைந்தது. எஸ்கார்ட்ஸ் நிறுவனம் யமஹாவுடன் இணைந்தது.

ஜப்பானிய கூட்டணியோடு உள்ளூர் தயாரிப்பாளர்கள் தயாரித்த மோட்டார் சைக்கிள்களும், ஸ்கூட்டர்களும் விஜய் சூப்பர் ஸ்கூட்டரை புறந்தள்ளின. கால ஓட்டத்தில் இவற்றுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பின்தங்கியது விஜய் ஸ்கூட்டர்.

நவீன தொழில்நுட்பத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பின்தங்கியதால் நசிந்துபோனது. இதனால் நிறுவனத்தை மூட வேண்டிய நிலை உருவானது.

1996-ம் ஆண்டு மூடுவிழா கண்ட இந்நிறுவனத்தின், 1,100 தொழிலாளர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியானது.

மத்திய அரசு இந்நிறுவனத்தில் தனக்கிருந்த 95 சதவீத பங்குகளையும் விலக்கிக் கொள்ள முன்வந்தது. ஆனால் அதற்கு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே அந்த முயற்சி நின்று போனது. இதையடுத்து இந்நிறுவனத்தை சீரமைக்க மத்திய அமைச்சரவை ரூ.202 கோடியை ஒதுக்கி இந்நிறுவனத்தை மீண்டும் செயல்பட வைத்துள்ளது.

மீண்டும் இரு சக்கர வாகனம் அதாவது ஸ்கூட்டர் தயாரித்தால் காணாமல் போய்விடுவோம் என்ற சிந்தனை இந்நிறுவனத்துக்கு ஏற்பட்டது.

இதையடுத்து காலத்துக்கேற்ப ஆட்டோ தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. விக்ரம் என்ற பெயரில் ஆட்டோக்களை ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் தயாரிக்கிறது.

தொடர்ந்து நஷ்டத்தில் செயல்பட்ட இந்நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் (2014-15) ரூ. 6.67 கோடியை செயல்பாட்டு லாபமாக ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டில் 11,409 ஆட்டோக்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

இந்நிறுவனத் தயாரிப்புகள் ஜெர்மனி, இத்தாலி, சூடான், நைஜீரியா, நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

வட மாநிலங்களில் மட்டுமே பிரபலமாக உள்ள விக்ரம் ஆட்டோக்களை தென் மாநிலங்களிலும் பிரபலப்படுத்தினால் இந்நிறுவனம் விரைவில் நிகர லாபமீட்டும்.

இந்நிறுவனத்தை வாங்க ராஜ்கோட்டை சேர்ந்த அதுல் ஆட்டோ நிறுவனம் ஆர்வமாக உள்ளது.

நலிவிலிருந்து லாபப் பாதையை நோக்கி முன்னேறும் அரசு நிறுவனத்துக்கு வளமான எதிர்காலம் உள்ளது. வெறு மனே ஸ்கூட்டரை மட்டுமே தயாரிப்போம் என்று இருக்காமல் சற்று மாற்றி யோசித்ததில் இந்நிறுவனம் இன்று வெற்றியை நோக்கி முன்னேறியுள்ளது.

மாற்றி யோசி என்பது விளம்பர வாசகம் மட்டுமல்ல. ஒரு தொழிலை நலிவிலிருந்து காக்க உதவிய திருவாசகமே.

ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x