Published : 07 Nov 2020 03:14 am

Updated : 07 Nov 2020 07:44 am

 

Published : 07 Nov 2020 03:14 AM
Last Updated : 07 Nov 2020 07:44 AM

தீபாவளியை மிரட்டும் கோவிட்-19!

diwali-covid-19

இந்த வருடம் உலகம் முழுவதையும் இயல்பு வாழ்க்கையிலிருந்து தடம்மாற வைத்திருக்கும் கோவிட்-19, தீபாவளிக் கொண்டாட்டத்தையும், பட்டாசு வெடிப்பையும் மட்டும் விட்டுவிடுமா என்ன?

பொதுவாகவே வாண வேடிக் கைகள், வெடிகள் எனப் பட்டாசுகள் அனைத்துக்கும் ‘fuse/base' எனப்படும் அடித்தளமாக இருப்பது களிமண், கரி. என்றாலும், வெடிகளுக்கும் வண்ணங்களை வாரி இறைக்கும் மத்தாப்பு, பூச்சட்டி, பாராசூட் போன்ற வற்றிலும் சேர்க்கப்படும் பொருள்கள் வேறுபடு கின்றன. வெடிகளில் நிரம்பி இருப்பது அலுமினியம், இரும்புத் துகள்கள், கந்தகம், பேரியம் நைட்ரேட் அல்லது பொட்டாசியம் நைட்ரேட் போன்ற உப்புகள். மத்தாப்பு - வாண வெடிகளில் நம்மைப் பிரமிக்க வைக்கும் பலவிதமான வண்ணங்கள் தோன்ற தாமிரம் (நீல நிறம்), பேரியம் (பச்சை நிறம்), சோடியம் (மஞ்சள் நிறம்), ஸ்ட்ரான்ட்சியம் (சிவப்பு நிறம்), கால்சியம் (ஆரஞ்சு நிறம்), மக்னீசியம் (வெள்ளை நிறம்) போன்ற உலோக உப்பு வகைகளே காரணம். இவற்றைப் பற்றவைக்க உதவும் திரியில் கந்தகம், பொட்டாசியம் நைட்ரேட் அல்லது பொட்டாசியம் பெர்கலேட் உப்புகள் சேர்க்கப்படுகின்றன.


இயல்பாகவே பட்டாசுகளால் ஏற்படும் மாசைக் கட்டுப்படுத்த பட்டாசுகளில் பேரியம் நைட்ரேட், ஆன்டிமனி, ஆர்சனிக், ஈயம், லித்தியம், பாதரசம் ஆகியவற்றைப் பயன்படுத்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதையும் மீறி நாம் கவலைகொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அதுதான் காற்று மாசு.

ஏன் அஞ்ச வேண்டும்?

பொதுவாகவே வெடிச் சத்தத்தால் ஏற்படும் ஒலி மாசால் (noise pollution) பறவைகள், உயிரினங்கள் பாதிக்கப்படும் என்றாலும், பட்டாசு - வாண வேடிக்கைகளில் உள்ள வேதிப்பொருள்களால் ஏற்படும் காற்று மாசால் (air pollution) வெடிக்கு அருகில் உள்ள மனிதர்களுக்கு மூச்சுத்திணறல், ஆஸ்துமா, கண்களில் எரிச்சல், தோல் அழற்சி போன்றவை ஏற்படு வதுடன், அவற்றின் அதீத சத்தத்தால் காதுகேளாமை, மாசுப்புகையால் (smog) விபத்துகள் எனப் பல்வேறு வகைகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

இதில் பட்டாசுப் புகையால் ஏற்படும் மூச்சுத்திணறல், ஆஸ்துமா, கண் எரிச்சல் போன்றவை கோவிட்-19க்கு உதவும். அத்துடன் நுரையீரலின் அமைப்பையும், நம் உடலின் எதிர்ப்புச் செயல்பாடுகளில் ஒன்றான தும்மல்/இருமல் ஆகியவை எப்படி உருவாகின்றன என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

இருமலும் தும்மலும்

இயல்பாக நமது உடல் உயிர்ப்புடன் இருக்க உதவும் ரத்தத்துக்குத் தேவையான ஆக்சிஜனை வெளிக் காற்றிலிருந்து பிரித்துக்கொடுத்து, நமது உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களுக்கு உயிரளித்து நம்மை உயிர்ப்புடன் வைத்திருப்பது நுரை யீரல். அதனால், உடல் உறுப்புகளில் நுரையீரல் சிறப்பு மிகுந்தது. அதனுடைய பாதுகாப்பு அமைப்புகள் சிக்கல் மிகுந்தவை.

நாம் சுவாசிக்கும்போது காற்றிலுள்ள தூசி, துகள்களை எப்படி நாசித் துவாரங்களிலுள்ள சிறு ரோமங்கள் வடிகட்டுகின்றனவோ அதேபோல், மூக்கு - மூச்சுக்குழாய்களில் உள்ள சீலியா என்கிற பிசிர் முனைகள் கண்ணுக்குத் தெரியாத மாசை வடிகட்டுகின்றன. இயற்கையாக உற்பத்தியாகும் mucus என்கிற சளி, கோந்து போல் அழுக்குகளை இழுத்து வடிகட்டி, நுரையீரலுக்குள் செல்லாமல் தடுப்பதுடன், தும்மலாக வெளியேற்றியும்விடுகிறது. ஆனால், ரோமங்கள், சீலியா, மியூகஸ் என இவ்வளவு பாதுகாப்பையும் ஏய்த்து, உள்ளே நுழையும் சில நுண் எதிரிகளை, நுரையீரலில் உள்ள வெள்ளை அணுக்கள் அழித்து, இருமலின்போது சளி, கபமாக வெளியேற்றுகின்றன.

பரவும் முறை

இருமல், தும்மல் ஆகிய இரண்டு நடவடிக்கைகளுமே நுரையீரலுக்குள் நுழைந்த எதிரிகளைச் சளியாக வெளி யேற்றும் வேலைதான். என்றாலும், இந்த இருமலும் தும்மலும் வெளியேற்றும் சளி, கண்ணுக்குத் தெரியும் நீர்த்திவலை (droplets), கண்ணுக்குத் தெரியாத நுண் திவலைகள் (aerosols) என இரு விதங்களில் வெளியேறுகிறது. எடையின் காரணமாக, நீர்த்திவலை வெளியேறிய சில நிமிடங்களில் ஏதாவது ஒரு பொருள் மீது படிந்துவிட, கண்ணுக்குத் தெரியாத நுண் திவலைகள் மட்டும் எடைகுறைவின் காரணமாகச் சட்டென்று படியாமல் காற்றிலேயே சிறிது நேரம் மிதப்பதுதான் கரோனா நோய்த்தொற்று காலப் பிரச்சினை.

பொதுவாகப் பேசும்போது நூற்றுக்கணக்கிலும், இருமும்போது ஆயிரக்கணக்கிலும், சளி - எச்சில் வழியாக வெளிவரும் நுண்கிருமிகள், தும்மும்போதுதான் மிக அதிகமாக, கோடிக்கணக்கில் வெளியேறுகின்றன. ஒரு பாடி ஸ்பிரே பாட்டிலிலிருந்து வெளி யேறும் ஸ்பிரேபோல் வெளியேறும் இந்த நுண்கிருமிகள், தும்மலின் வேகத்தைப் பொறுத்து அதிக தூரம் காற்றில் பரவியிருக்கும்.

இரண்டாம் அலை?

இப்படித் தும்மலின்போது சாதாரணமாகக் காற்றில் மிதக்கும் நீர்த்திவலைகள், நுண் திவலைகள் தீபாவளிப் புகையில் கூடுதல் நேரம் காற்றில் மிதக்கக்கூடும்.

இதுவரை கரோனா வைரஸ் நீர்த்திவலை மூலமாக மட்டுமே பரவுகிறது என்றிருந்த புரிதல் மாறி, நுண் திவலைகள் மூலமாகவும் கரோனா வைரஸ் பரவுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நாவல் கரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் ஒருவருக்குத் தெரியத் தொடங்குவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்னரே, அவரிடமிருந்து மற்றவர் களுக்குப் பரவத் தொடங்கிவிடும்.

தீபாவளிப் பட்டாசு, மத்தாப்பு, வாணவேடிக்கைகளில் உள்ள வேதிப்பொருள்களின் புகை - தூசு, அறிகுறியே இல்லாத கோவிட் நோயாளியின் மூச்சுக்குழாய் செல்களைச் சீண்டும்போது, அவரது தும்மல், இருமல் அதிகரிக்கும். அருகில் இருப்பவர்களுக்கு வேகமாகப் பரவச் செய்யும். இதனால், கோவிட் நோயின் இரண்டாம் அலை இந்தியாவில் நவம்பரில் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் கணித்திருக்கிறார்கள்.

தவிர்க்கும் வழி

ஏற்கெனவே தசரா கொண்டாட் டங்களின்போது வட மாநிலங்களில், குறிப்பாக மேற்கு வங்கம், ராஜஸ்தான், டெல்லி, மத்தியப் பிரதேசத்தில் அதிகரித்த கரோனா தொற்று நமக்கு ஓர் எச்சரிக்கை மணி.

பசுமைப் பட்டாசு என அழைக்கப்படும் புகை குறைந்த, மாற்று வேதிப்பொருள்கள் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகளைப் பயன்படுத்த வேண்டும்.

முறையாகக் கைகளைக் கழுவி, முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியுடன் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

கடைசியாகக் கடைக்குக் கும்ப லாகச் செல்வதையும் கூட்டத்தையும் தவிர்க்க வேண்டும்.

அனைத்துக்கும் மேலாக, அனை வரின் உடல்நலன் கருதி, இயன்றவரை பட்டாசுகளைக் குறைத்து, விளக் கொளியுடன் தீபாவளியைக் கொண் டாடுவது அனைவரது உடல்நலனுக்கும் சாலச் சிறந்தது.

கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்

தொடர்புக்கு: savidhasasi@gmail.com


தீபாவளியை மிரட்டும் கோவிட்-19

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x