Published : 07 Nov 2020 03:14 am

Updated : 07 Nov 2020 10:38 am

 

Published : 07 Nov 2020 03:14 AM
Last Updated : 07 Nov 2020 10:38 AM

தீபாவளி, பள்ளி- திரையரங்கு திறப்பு: கரோனா இரண்டாம் அலைக்கு வித்திடுமா?

school-opening

ஐரோப்பிய நாடுகள், நாவல் கரோனா வைரஸின் இரண்டாம் அலையை எதிர்கொண்டு அல்லாடிவருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, கரோனா வைரஸ் பரவலை முன்பு முற்றிலும் கட்டுப்படுத்தியிருந்த கேரள மாநிலம், இன்றைக்கு அதிக பாதிப்புக்கு உள்ளாகும் மாநிலமாக இருக்கிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில்தான், தீபாவளி வரவிருக்கிறது. பள்ளி, கல்லூரி, திரையரங்குகளைத் திறப்பதற்கு அரசாங்கமும் அனுமதி அளித்துள்ளது.

பொருளாதார மீட்சி


பெருந்தொற்றால் முடங்கியிருக்கும் பொருளாதாரத்துக்குத் தேவைப்படும் ஊக்கத்தைத் தீபாவளி அளிக்கக்கூடும். தீபாவளி விற்பனை என்பது வெறும் புத்தாடைகளுடனும் பட்டாசுகளுடனும் முடிவடைந்து விடுவதில்லை. தீபாவளி காலத்தில் தள்ளுபடி விலையில் பொருள்களை வாங்குவதற்கு மக்கள் பெரும் எண்ணிக்கையில் குவிந்துவருகின்றனர். இந்தப் போக்கு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவலாம். ஆனால், பெருந்தொற்றுக் காலத்தில் அது மக்களின் உடல்நலனுக்கு நல்லதா?

அச்சமின்மையும் அலட்சியமும்

பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் வெகுவாகத் தளர்த்தப்பட்டுவிட்டன. இன்று அது பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. வயிற்றுப்பிழைப்புக்காகவும் பொருளாதார நிர்ப்பந்தத்தாலும் வெளியே செல்லத் தொடங்கிய மக்கள், கரோனா அச்சத்தின் காரணமாகத் தொடக்கத்தில் எச்சரிக்கை உணர்வுடன் இருந்தனர்.

இன்று நிலைமை தலைகீழ் என்பதற்கு சென்னை தி.நகரில் சீல் வைக்கப்பட்ட வணிக நிறுவனமே சான்று. நாவல் கரோனா வைரஸால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் குறைவு என்பதாலோ என்னவோ, முன்பு மக்களிடமிருந்த அச்சம் இப்போது விலகிவிட்டது. முகக் கவசம் என்பது தாடையில் மாட்டப் படும் ஒன்றாகிவிட்டது. சமூக இடைவெளியைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. தீபாவளிப் பொருள்கள் வாங்க வணிக வளாகங்களில் கூடும் கூட்டம் இதை உறுதிசெய்கிறது. இத்தகைய அலட்சியம் பேராபத்தில் முடியக்கூடும்.

அச்சுறுத்தும் இரண்டாம் அலை

கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறதே, இறப்பு விகிதமும் குறைவாகத்தானே உள்ளது என்கிற கேள்வி வரலாம். இந்தக் கேள்விக்கு கேரள மாநிலமே விடை. இந்தியா முழுவதும் கரோனாவின் பிடியில் சிக்கித் தவித்தபோது, புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கையைப் பூஜ்யத்துக்குக் கொண்டுவந்து, கரோனாவை முற்றிலும் கட்டுக்குள்கொண்டுவந்த ஒரே மாநிலம் கேரளா. இன்று புதிதாகப் பாதிப்புக்குள்ளோவோரின் எண்ணிக்கையில் கேரளமே அன்றாடம் முதலிடத்தில் உள்ளது. அதற்குக் காரணம் ஓணம் கொண் டாட்டத்தின்போது கட்டுப்பாடுகள் கட்டுமீறிப் போனதுதான்.

கரோனாவுக்கு நேரடி மருந்தில்லை. தடுப்பூசியும் பரிசோதனை நிலையிலேயே உள்ளது. பரிசோதனை நிலை முடிந்தாலும், பயன்பாட்டுக்கு வருவதற்குக் குறைந்தது ஆறு மாதங்கள் ஆகக்கூடும். இந்த நிலையில் மீண்டும் பரவ ஆரம்பிக்கும் நாவல் கரோனா வைரஸின் இரண்டாம் அலை, முந்தைய அலையைவிட மிகுந்த வீரியத்துடன் அதிக எண்ணிக்கையில் பாதிப்பை / மரணத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம் என மருத்துவ வல்லுநர்களும் அறிவியலாளர்களும் எச்சரித்துவருகின்றனர்.

பள்ளிகளைத் திறப்பது முறையா?

இத்தகைய சூழலில் பள்ளி களையும் கல்லூரிகளையும் திரையரங்குகளையும் திறப்பது இரண்டாம் அலையை இங்கே விரைந்து ஏற்படுத்தக்கூடும். சிறுவர்களுக்கு கரோனா பாதிப்பின் தாக்கம் குறைவாகவே இருக்கும். ஆனால், அவர்கள் நோயைப் பிறருக்குப் பரப்பும் கடத்துநராக மாறும் சாத்தியம் இருப்பதை மறுக்க முடியாது. ஏற்கெனவே அச்சமின்றி மிகுந்த அலட்சியத்துடன் மக்கள் வெளியே சுற்றிவரும் நிலையில் திரையரங்குகளைத் திறப்பது எத்தகைய ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து அரசு எண்ணிப் பார்க்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவதற்கு வாய்ப்பளிக்கும் திரையரங்குகளைத் திறப்பது, கரோனாவைக் கட்டுப்படுத்த கடந்த பத்து மாதங்களாக எடுக்கப்பட்ட முயற்சிகளை நீர்த்துப்போக வைத்துவிடும்.

எச்சரிக்கை அவசியம்

கூட்டம் நிறைந்த பொது இடங்களைவிட, அரசு நிர்ணயித்த எண்ணிக்கையைவிட அதிகமானோர் சுப - துக்க நிகழ்வுகளில் கூடிப்பிரிவதும் கரோனா பரவலுக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. குடும்ப நிகழ்வு என்பதால், தனிமனித இடைவெளிக்கும் முகக் கவசத்துக்கும் அரசு வழிகாட்டல்களுக்கும் அங்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை. அந்நியோன்னியம் காரண மாக ஏற்படும் அலட்சியத்தால், பல உயிர்களை நாம் இழந்துள்ளோம் என்பதைத் தரவுகள் உணர்த்துகின்றன. இது தீபாவளியை மிகுந்த எச்சரிக்கை யுடன் கொண்டாட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

உயிரே முக்கியம்

இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியில் பள்ளிகளையும் கல்லூரி களையும் திறந்து, மாணவர்களை ஆபத்தின் முன் நிறுத்துவது சரியான அணுகுமுறையா? திரையரங்குகளைத் திறந்து, கரோனா பரவலுக்கு அரசே வழிவகுக்கலாமா? உலகை மீண்டும் தனது பிடிக்குள் கொண்டுவரும் நாவல் கரோனா வைரஸின் இரண்டாம் அலை விடுக்கும் எச்சரிக்கையைப் புறந்தள்ளுவது தற்கொலைக்குச் சமம். பண்டிகையைவிட, கல்வியைவிட, பொழுதுபோக்கைவிட மக்களின் உயிரே முக்கியம். இதை ஆள்வோரும் மக்களும் உணர வேண்டும். நிலைமை மோசமடைந்த பிறகு, பழைய நிலைக்குத் திரும்புவது சாத்தியமில்லை.

எப்படிக் கொண்டாட வேண்டும்?

அலட்சியம் துளியுமின்றி, முகக் கவசம், தனி மனித இடைவெளி, சானிடைசர் போன்ற பாதுகாப்பு முறைகளைச் சிறிதும் தளர்த்தாமல், தீபாவளியைக் கொண்டாடலாம்.

தீபாவளி ஷாப்பிங்கை முடிந்தவரை இணையவழி விற்பனைத் தளங்களில் முடித்துக்கொள்வது நல்லது. கடைக்குப் போய் வாங்க வேண்டும் என்று முடிவெடுத்தால், முடிந்தவரை பிரபலமான கடைகளைத் தவிர்த்து, வீட்டுக்கு அருகிலிருக்கும் கூட்டம் குறைவான கடைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

குழந்தைகளையும் முதியவர்களையும் கடைகளுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும், பேசுவதற்குச் சிரமமாக இருந்தாலும், முகக் கவசத்தைக் கண்டிப்பாகத் தளர்த்தக் கூடாது.

கடைகளுக்குள் செல்லும்போதும், கடையினுள் இருக்கும்போதும், கடையைவிட்டு வெளியே வரும்போதும் கைகளை சானிடைசரால் சுத்தப்படுத்த மறக்கக் கூடாது.

பண்டிகை நாள் அன்று, விருந்தினர் வீட்டுக்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.

மீறி விருந்தினர்கள் வந்தால், வீட்டிலிருக்கும் பெரியவர்களைப் போதிய பாதுகாப்புடன் தனியறையில் இருக்கச் செய்வது அவசியம்

தொடர்புக்கு: Mohammed.hushain@hindutamil.co.in


School openingபள்ளி- திரையரங்கு திறப்புகரோனா இரண்டாம் அலை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x