Last Updated : 05 Nov, 2020 03:12 AM

 

Published : 05 Nov 2020 03:12 AM
Last Updated : 05 Nov 2020 03:12 AM

சித்திரப் பேச்சு: சூலாயுத அர்த்தநாரீஸ்வரர்

ராஐராஐன் கட்டிய பெரிய கோயிலில் பெருவுடையாரை தரிசனம் செய்துவிட்டு சுற்றிவரும்போது வடக்குப் பிரகாரத்தில் திரும்பியதும், வலப் பக்கத்தில் தலைக்கு மேலே ஆறடி உயரத்தில் வடக்குத் திசையை நோக்கியபடி இருக்கிறார் இந்த அர்த்தநாரீஸ்வரர்.

சற்று வித்தியாசமான ரூபத்தில் ஜடாமுடி அலங்காரத்துடன் காட்சியளிக்கிறார். வலப்புறம் பிறை நிலவு சூடியுள்ளார். ரிஷபத்தின் மேல், வலது கரத்தை ஊன்றியபடி, சற்றே சாய்ந்த நிலையில் காணப்படுகிறார். வலது மேல்கரத்தில் மழுவாயுதத்துக்குப் பதிலாக, மாறுபட்டு சூலாயுதத்தைத் தாங்கியபடி உள்ளார்.

வலது காதில் மகர குண்டலம், உமையொரு பாகமான பக்கக் காதில் குழையும் அணிந்துள்ளார். அம்மை, மார்பில் கச்சை அணிந்துள்ளார். கையிலே தாமரை மலரைத் தாங்கியுள்ளார். வாயைத் திறந்துள்ள நிலையில் காட்சி தரும் ரிஷபத்தைப் பாருங்கள். ரிஷபத்தின் பற்கள்கூடச் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளன.

தஞ்சை பெரிய கோயிலை வடிவமைத்த சிற்பிகள் குழுவினர்தான், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலையும் உருவாக்கியதாக செவிவழிச் செய்தி கூறுகிறது. ஆனால், இரண்டு கோயில்களையும் தனித்துவமாக ஆக்கியுள்ளனர். எடுத்துக்காட்டாக சங்கரநாராயணர் சிற்பத்தில், நாராயணர் கரத்தில் சங்குக்குப் பதிலாக பிரயோகச் சக்கரத்தைத் தாங்கியுள்ளார். அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் மழுவுக்குப் பதிலாகச் சூலாயுதம் தாங்கியபடி உள்ளார். அம்மையின் கரத்தில் இங்கு தாமரை மலரும், அங்கு கருங்குவளை மலரும் அதைக் கொத்தும் கிளியுமாக வடித்து வேறுபடுத்திக் காட்டியுள்ளனர் சிற்பிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x