Published : 30 Oct 2015 08:58 AM
Last Updated : 30 Oct 2015 08:58 AM

திரை வெளிச்சம்: எனது தாத்தாவின் கதை

எனது தாத்தாவின் கதை

தென் கொரியாவின் பூசன் - 2015 சர்வதேசத் திரைப்பட விழாவில் இருபதாயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசை அள்ளிக்கொண்டு திரும்பியிருக் கிறது ‘ரேடியோ பெட்டி’ என்ற தமிழ்த் திரைப்படம். புத்தம் புதிய படைப்புக்கான பிரிவில் பார்வையாளர்கள் விருதைத் தட்டிச்சென்றதால் இந்தப் பரிசுப் பணம்.

ஹரி விஸ்வநாத் சிவில் பொறியாளர். இவரது அப்பா நவரங் தியேட்டர்ஸ் என்ற நாடகக் குழுவை நடத்திவரும் மூத்த நாடகக்கலைஞரான விஸ்வநாதன். “பள்ளி, கல்லூரி நாட்களில் அப்பாவின் நாடகங்களைப் பார்த்துப் பார்த்து சினிமாவின் மீது ஆர்வம் வந்துவிட்டது” என்று கூறும் ஹரி குறும்படங்களை இயக்கிய அனுபவத்தில் ரேடியோ பெட்டிக்கு ஜீவனைக் கொடுத்திருக்கிறார்.

83 நிமிடங்கள் ஓடும் படம் ‘ரேடியோ பெட்டி’. “எனது தாத்தா ரேடியோ பெட்டியின் காதலர். அது அவருக்கு நம்பகமான ஊடகம். கண்ணும் கருத்துமாக அவர் பாதுகாத்துவந்த ரேடியோ பெட்டிக்கும் அவருக்கும் இடையிலான நேசத்தை நானறிவேன். எலெக்ட்ரானிக் சாதனம் ஒன்று ரத்தமும் சதையுமான ஒரு மனிதரோடு நெருக்கம் பாராட்ட முடியுமா என்ற கேள்விக்கான பதிலை உணர்வுபூர்வமான திரைக்கதையாக மாற்றப் போராடினேன். அதற்கு வெற்றி கிடைத்துவிட்டது” என்று சொல்லும் ஹரி விஸ்வநாத் தன் தாத்தாவின் கதாபாத்திரத்தில் லட்சுமணன் என்ற 75 வயதான மூத்த நாடக நடிகரை நடிக்க வைத்திருக்கிறாராம். அவரும் ‘அருணாச்சலம்’ என்ற கதாபாத்திரமாக வாழ்ந்து காட்டியிருக்கிறாராம்.

ரேடியோ பெட்டியும் அருணாசலம் தாத்தாவும் முக்கியக் கதாபாத்திரங்கள் என்றாலும் படத்தில் பத்துக்கும் அதிகமான நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். “ரேடியோ பெட்டியைத் தமிழ் ரசிகர்கள் வாஞ்சையுடன் அணைத்துக்கொள்வார்கள்” என்ற நம்பிக்கை இருக்கிறது என்கிறார் இந்த இளம் படைப்பாளி.

இசையும் நடிக்க வேண்டும்

கடந்த ஐந்தாண்டுகளில் அறிமுகமான இளம் இசையமைப்பாளர்களில் சத்யா, ஜிப்ரான், அனிருத், சந்தோஷ் நாராயணன் ஆகியோர் ரசிகர்களைக் கவர்ந்துவருகிறார்கள். இந்த வரிசையில் இணைவார் என ஒரு அறிமுக இசையமைப்பாளர் பற்றி கோலிவுட்டில் பேச்சு கிளம்பியிருக்கிறது. அவர் ‘மெல்லிசை’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் சாம் சி.எஸ். விஜய் சேதுபதி காயத்திரி நடித்திருக்கும் இந்தப் படத்தின் இசை கடந்த 14 -ம் தேதி வெளியானது. ஐந்து பாடல்கள், ஒரு ஆங்கிலப் பாடல், ஒரு தீம் இசை ஆகியவை இடம்பெற்றிருக்கும் படத்தின் ஆல்பம் கோலிவுட்டிலும் ரசிகர்கள் மத்தியிலும் சிலாகிக்கப்பட்டுவருகிறது.

“ ஒரு அறிமுக இசையமைப் பாளருக்கு எளிதில் கிடைத்திடாத வாய்ப்பு இது. இசையைக் கதைக் களமாகக் கொண்ட ஒரு த்ரில்லர் கதைக்கு, அதிலும் மெல்லிசை எனப் பெயரிடப்பட்ட படத்தில் அறிமுகமானது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று புன்னகைக்கும் இவரது பின்னணி ?

“சொந்த ஊர் மூணாறு. சிறு வயது முதலே இசையார்வம். அம்மா, அப்பா விருப்பத்துக்காக சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும்வரை மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றினேன்” என்று கூறும் சாமின் விளம்பர ஜிங்கிள்கள், தனி ஆல்பங்கள் கவனிக்க வைத்ததால் ‘அம்புலி 3டி’ படத்துக்கு இணை இசையை வழங்கியிருக்கிறார். இதற்கிடையில் ‘கற்றது தமிழ்’ இயக்குநர் ராமின் உதவியாளர் ரஞ்சித் ஜெயக்கொடி தனது ‘மெல்லிசை’ படத்துக்காகப் புதிய திறமையாளரைத் தேடிக்கொண்டிருந்தபோது சாமின் தனி ஆல்பங்களைக் கேட்டு அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

“இசை ஞானியும் இசைப்புயலும் சேர்ந்த கலவைதான் சாம்” என்று ரஞ்சித் ஜெயக்கொடி பேட்டிகளில் குறிப்பிட்டுவருகிறார். ஆனால் சாமோ “நடிகர்களுக்கு இணையாகக் கதாபாத்திரத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இசையைத் தர வேண்டும் என்பதில் மட்டுமே என் கவனம் இருக்கும். இதற்காக லைவ் கருவிகளைப் பயன்படுத்தத் தயங்க மாட்டேன்” என்கிறார் சாம். தற்போது ஒரு மலையாளப் படம் உட்பட ஐந்து திரைப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறாராம்.

முதல் விருது!

முன்னணிப் படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள், நட்சத்திரங்களைச் சிறப்பு விருந்தினர்களாக அழைத்துத் திரைப்பட ஆர்வலர்களுடன் ஒன்றிணைந்து வருகிறது சினிமா ராண்டேவூ அறக்கட்டளை. ஒரு திரைப்பட மன்றமாகக் கடந்த 2012-ம் ஆண்டுமுதல் செயல்பட்டுவரும் இந்த அமைப்பு, திரையிடல், கலந்துரையாடல் ஆகியவற்றுடன் சுருங்கிவிடாமல, வல்லுநர்களைக் கொண்டு நுணுக்கமான நடிப்புப் பயிற்சி வழங்குதல், தரமான குறும்படங்களையும் அவற்றை உருவாக்கும் இளம் படைப்பாளிகளையும் அடையாளம் கண்டு ஆதரித்தல், திரைப்பட விமர்சனப் பயிற்சியளித்தல் என்று தனது செயல்பாடுகளைப் பல தளங்களில் விரித்துவருகிறது.

இந்நிலையில் ஆவணப்பட இயக்குநரும், தொலைக்காட்சி ஊடகவியலாளருமான பால கைலாசம் நினைவைப் போற்றும் வகையில், ஊடகத்தைச் சமூக முன்னேற்றத்துக்காக பயன்படுத்தியவர்களுக்கான விருதினை நடப்பாண்டில் நிறுவியது சினிமா ராண்டேவூ. தகுதியுரைச் சான்றிதழ் மற்றும் பணமுடிப்பு ஆகியவற்றுடன் கூடிய முதல்விருதை இளம் ஆவணப்பட இயக்குநர் ஹோபம் பபன் குமாருக்கு சென்னையில் வழங்கிச் சிறப்பித்தது. அவர் இயக்கிய ‘ஃபம் ஷாங்’ (தத்தளிக்கும் வாழ்க்கை) என்ற ஆவணப்படத்திற்காக விருதைப் பெற்றுக்கொண்டார்.

இந்த 52 நிமிட ஆவணப்படம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள லோக்தக் ஏரியை வாழ்வாதாரமாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவ சமுதாய மக்களின் தத்தளிக்கும் வாழ்க்கையை ஈர மனதுடன் துப்பறிந்து சொல்கிறது.

இந்த ஏரியைச் சுற்றி வாழும் மக்கள் அதனை மாசுபடுத்துவதாகவும் ஏரியைத் தூர்வாரப்போவதாகவும் சொல்லிக்கொண்டு மணிப்பூர் அரசு 2011 -ம் ஆண்டு, இவர்களின் நூற்றுக் கணக்கான குடிசைகளை எரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வீடில்லாதவர்களாகவும் வாழ்வாதாரம் இல்லாதவர்களாகவும் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டதாகத் தெரிகிறது. வேறு போக்கிடம் இல்லாத மண்ணின் மைந்தர்களான அந்த மீனவர்கள் அரசு இயந்திரங்களுக்கு எதிராகப் போராடிவருவதையும் பதிவு செய்திருக்கும் இந்த ஆவணப்படம் விருது விழாவில் திரையிடப்பட்டது.

சிறந்த ஆவணப் படத்துக்கான தேசிய விருதைக் கடந்த ஆண்டு பெற்ற இந்தப் படத்தை இயக்கிய ஹோபம் பபன் குமார் கொல்கத்தாவில் உள்ள சத்யஜித் ராய் திரைப்படக் கல்லூரியில் இயக்கம் பயின்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x