Last Updated : 30 Oct, 2015 10:42 AM

 

Published : 30 Oct 2015 10:42 AM
Last Updated : 30 Oct 2015 10:42 AM

‘அதுன்னா அண்டர்வேர்தானே...?

‘‘சார்... நாங்கெல்லாம் ஸ்கூல் படிக்கும்போது, ஆணுறைன்னா அண்டர்வேர்னுதான் நினைச்சிட்டிருந்தோம்!" - இது ஒரு கல்லூரி மாணவரின் வாக்குமூலம்.

"ஆணும் பெண்ணும் எல்லை மீறி ஜாலியா இருந்துக்குறாங்க. ஆனா, குழந்தைன்னு வரும்போது, எதிர்காலத்தை நினைச்சு கவலைப்படறாங்க. பல வெளிநாடுகள்ல இருக்குற மாதிரி கருக்கலைப்பு உரிமை இங்க வேணும் சார்!" - இப்படிச் சொன்னது ஒரு சட்டக் கல்லூரி மாணவி.

"அதெப்படி.. கருக்கலைப்புன்னு வரும்போது, பெண்ணோட சம்மதத்தை மட்டும் கேட்கிறாங்க. அதுல ஆண்களும் தங்களுக்கான உரிமைகளை முன்வைக்கணும் பாஸ்...!" - ஒரு ஐ.டி. இளைஞரின் கருத்து இது.

பாலியல் ஆரோக்கியம்

இப்படி திருமணத்துக்கு முன் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா, குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமை, கருக்கலைப்பு உரிமை, பாலியல் சுதந்திரம், பாலியல் கல்வி, உடைக் கலாசாரம் எனப் பல வகையான விஷயங்களைப் பற்றி அன்றைய தினம் இளைஞர்கள் கலந்துரையாடினார்கள்.

‘பாலியல் கல்வி மற்றும் பெற்றோர் பருவத்துக்கான சர்வதேச கவுன்சில்' சென்னையில் கடந்த வாரம் ஏற்பாடு செய்திருந்த ‘இளைஞர்களுக்கான பாலியல் ஆரோக்கியம்' என்ற நிகழ்ச்சியில்தான் இந்த கருத்துப் பரிமாறல்கள் நடைபெற்றன.

பிரபல பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 40 இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

இதுவும் மனித உரிமைதான்

இது குறித்து நாராயண ரெட்டியிடம் பேசியபோது, “ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 24-ம் தேதி ‘உலக பாலியல் ஆரோக்கிய நாளாக' கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தேதியில் கொண்டாடுவதற்கு குறிப்பாக எந்தக் காரணமும் இல்லை.

ஒவ்வொரு வருடமும் பாலியல் ஆரோக்கியம் தொடர்பான விழிப் புணர்வு நிகழ்ச்சியை பெரியவர்கள் மத்தியில் நடத்திவந்தோம். இந்த வருடம் இளைஞர்களை மையப்படுத்தி நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டோம். அதுதொடர்பான அறிவிப்பை ஃபேஸ்புக்கில் வெளியிட்டோம்.

கூச்சம், பயம், குழப்பம், தயக்கம் இல்லாமல் பல இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வமாக முன்வந்து கலந்துகொண்டது எங்களுக்கே ஆச்சரியமாக இருந்தது.

இன்று எந்த ஒரு மாநிலத்திலும் ‘இந்தியக் கலாச்சாரம்' என்ற ஒன்று கிடையாது. அப்படியிருக்கும்போது, பாலியல் கல்வி, பாலின சமத்துவம் போன்ற விஷயங்கள் தொடர்பாக ஒரே இரவில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுவிடாது.

இன்றைய இளைஞர்கள்தான் நாளைய பெற்றோர்களாகப் போகிறார்கள். ஆகவே, பாலியல் குறித்து அவர்கள் கொண்டிருக்கும் கருத்துகளையும் நாம் கொஞ்சம் காதுகொடுத்துத்தான் கேட்போமே. ஆஃப்டர் ஆல், பாலியல் உரிமைகளும் அடிப்படை மனித உரிமைகள்தானே!" என்றார்.

கூச்சம் தவிர்

விவாதங்களுக்கு மத்தியில் பாலியல் தொடர்பான ஒவ்வொரு தலைப்புக்கும் ஏற்றவாறு இளைஞர்கள் ‘ஆன் தி ஸ்பாட்' நாடகம் போட்டது, நிகழ்ச்சியின் ஹைலைட்!

நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலரிடம் பேசியபோது, "நாட்டின் மற்ற பகுதிகளில் இதுபோன்ற விவாதங்களுக்கு பலத்த எதிர்ப்புகள் இருக்கின்றன. ஆனால், சென்னை போன்ற நகரத்தில் இப்படியான நிகழ்ச்சிகள் நடப்பது வரவேற்புக்குரியது. செக்ஸ் என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். இன்னும் எவ்வளவு காலம் அனைத்தையும் பொத்திப் பொத்தி வைக்கப் போகிறோம்? இந்த விஷயங்கள் குறித்து நாம் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது!" என்கிறார் அர்ணாப் ராவ் எனும் வழக்கறிஞர்.

"முதலில் இப்படிப்பட்ட விஷயங்களை எல்லாம் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்தான் முன்னெடுக்க வேண்டும். அவை பாலியல் கல்வியை முறையாக நடைமுறைப்படுத்தினாலே, நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் வெகுவாகக் குறையும்" என்கிறார் மனித வள ஆலோசகராகப் பணியாற்றும் ஹேமா.

அப்புறமென்ன மச்சி... கூச்சம் விடு. கருத்து சொல்லு!

படங்கள்: ந.வினோத்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x