Published : 02 Nov 2020 07:41 AM
Last Updated : 02 Nov 2020 07:41 AM

ஆன்லைன் மூலம் வருமானம் ஈட்டுவது எப்படி?

சொக்கலிங்கம் பழனியப்பன்
CP@prakala.com

இன்றைய உலகத்தில் பலரும் இரண்டாம் வருமானத்தை ஈட்ட விரும்புகின்றனர். வாரன் பஃபெ ட் போன்ற பெரிய முதலீட்டாளரே ‘ஒரு வருமானத்தை நம்பியே வாழாதீர்கள்; ஒன்றிற்கும் மேற்பட்ட வழிகளிலிருந்து வருமானத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று அறிவுறுத்தியுள்ளார். இரண்டாம் வருமானம் என்றதுமே நம்மில் பலருக்கும் ஞாபகம் வருவது – ஒரு வீடு வாங்கி வாடகைக்கு விடலாமே என்பதுதான். அதைத் தாண்டி வருபவர்கள் இன்சூரன்ஸ் பாலிசியில் முதலீடு செய்கின்றனர். தற்பொழுது மியூச்சுல் ஃபண்டுகளில் ரிஸ்க் எடுத்தாலும் வருமானம் அதிகமாகக் கிடைக்கிறது என மாதத்திற்கு ரூ 8,000 கோடி அளவிற்கு இந்தியா முழுவதிலிருந்தும் மக்கள் முதலீடு செய்து வருகிறார்கள். இது ஒருபுறம் இருக்க தற்போது இணையத்தின் வளர்ச்சி இரண்டாம் வருமானத்துக்கு பல்வேறு சாத்தியங்களை திறந்து இருக்கிறது.

ஆன்லைனில் சம்பாதிக்க நுழைவது எளிது என்றாலும், பிற தொழில்களைப்போலவே காய் கனியாவதற்கு சில வருடங்கள் எடுத்துக் கொள்ளும். ஆகவே பொறுமை அவசியம். ஆனால், சரியாகச் செய்தால் வெற்றி நிச்சயம்! தற்போது பரவலாக இருக்கும் ஆன்லைன் மூலமான வருமான வழிகள் சிலவற்றைப் பார்க்கலாம்.

சமையல் வீடியோக்கள்

இல்லத்தரசிகள் பலர் தற்போது யூடியூப் சேனல் ஆரம்பித்து சமையல் வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர். சமையல் வீடியோக்கள் ஆண், பெண் பேதமின்றி அனைவரையும் கவர்ந்து இருக்கின்றன. புதிதாக சமைக்க வரும் பலரும் இத்தகைய சமையல் வீடியோக்களைப் பார்த்தே சமையல் கற்றுக்கொள்கின்றனர்.

சமையல் வீடியோக்கள் மட்டுமல்ல – வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி, பொருட்களை சரியாக அடுக்கி வைத்துக் கொள்வது எப்படி போன்றவை முதல் சேலை கட்டுவது எப்படி என்பது வரை பல வீடியோக்கள் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.

அதிக பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் சேனல்களில் விளம்பரம் செய்ய பலர் முன்வருவார்கள். அத்தகைய விளம்பரம் மூலம் நல்ல வருமானம் ஈட்ட முடியும்.

சமையல் வீடியோக்களைப் பொருத்தவரையில், விளம்பரம் மட்டும் வருமானம் அல்ல. வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் சேனல்கள், சமையல் பொருட்களை விற்பதன் மூலமும் வருமானத்தை ஈட்டுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்ல வெளிநாடு மற்றும் உள்நாட்டு சப்ஸ்கிரைபர்கள், இதுபோன்ற சேனல்களில் விசேஷ நாட்களுக்கு ஆர்டர் செய்து ஆசிரமங்கள் போன்ற இடங்களுக்கு உணவு சப்ளை செய்யச் சொல்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுபோல் பன்முனை வருவாயை இச்சேனல்கள் மூலம் ஈட்டலாம்.

ஆன்லைன் மியூஸிக் விற்பனை

நீங்கள் இசைப் பிரியரா? அப்படி என்றால் நீங்கள் உருவாக்கும் பின்னணி இசை, டிராக்ஸ் போன்றவற்றை ஆன்லைனில் போட்டு, இரண்டாம் வருமானத்தை தொடர்ந்து ஈட்டிக் கொண்டிருக்கலாம். யூடியூப் வீடியோ செய்பவர்கள், மற்றும் புரோகிராம் செய்பவர்களுக்கு நல்ல டியூன்ஸ் தேவைப்படும் பொழுது அவர்கள் பணம்கொடுத்து அவற்றை பதிவிறக்கம் செய்துகொள்வார்கள். இது சிறு கலைஞர்கள் பலருக்கும் உபயோகமாக இருக்கும்.

ஆன்லைன் விற்பனை

ஆன்லைனில் வியாபாரம் என்பது இன்று பெருகி விட்டது. பலர் இன்று ஆன்லைன் மூலம் வெற்றிகரமாக தங்களது பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். இத்தொழிலை நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தே செய்யலாம் - உங்களுக்கு செலவுகளும் குறையும். ஆன்லைனில் வியாபாரம் செய்வதற்கு ஒரு நல்ல கூரியர் நிறுவனத்துடன் தொடர்பு வைத்துக் கொள்வது அவசியம். ஆரம்ப காலங்களில் அமேஸான், ஃபிளிப்கார்ட் போன்ற இணையதளங்கள் வாயிலாக உங்களது வியாபாரத்தை துவங்கலாம். உங்களது வியாபாரம் பெருகும் போது, நீங்களாகவே உங்களின் சொந்த இணையதளம் மற்றும் செயலி மூலம் விற்பனை செய்யலாம். இந்தியா முழுவதும் உங்களின் விற்பனை பெருகும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆன்லைன் விற்பனை மேலும் பயனுள்ளதாக அமையும். இதற்குத் தேவையான மென்பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன – ஆகவே ஆரம்பிப்பது எளிது!

நாம் மேலே கண்டது போல பல வழிகளில் இன்று வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம். உங்கள் விருப்பம், திறமை போன்றவற்றை பொருத்து நீங்கள் ஆன்லைன் சம்பாத்தியத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! இனி, இதற்குத்தான் பெரிய எதிர்காலம் உள்ளது என்பதை மறக்காதீர்கள்!

ஆன்லைன் மார்க்கெட்டிங்: இதை ‘ரெஃபரல் மார்க்கெட்டிங்’ என்றும் அழைக்கலாம். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு தொழில் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதற்கென்று ஒரு வெப்ஸைட் வைத்திருப்பீர்கள். அந்த வெப்ஸைட்டில் இன்னொரு நிறு
வனத்தை விளம்பரம் செய்ய நீங்கள் அனுமதிக்கலாம். அந்த விளம்பரத்தைக் கிளிக் செய்து, ஒரு பொருளை ஒருவர் வாங்கும் பொழுது, உங்களுக்கான கமிஷன் உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும்! அமேஸான், ஃபிளிப்கார்ட் போன்ற பல ஆன்லைன் நிறுவனங்களுக்கு நீங்கள் மார்க்கெட்டிங் செய்து கொடுக்கலாம். பலர் தங்களுக்கென பிரத்யேகமாக பிளாக் (blog) ஒன்றை வைத்திருப்பார்கள். அது மூலமும் இதுபோன்ற ‘ரெஃபரல் மார்க்கெட்டிங்’ செய்து கொடுக்கலாம்.

ஆப் டெவலப்மெண்ட்: இன்று பல தொழில்களுக்கு செயலிகள்(Apps)தேவையாக உள்ளது. உங்கள் வீட்டின் அருகாமையில் இருக்
கும் டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்குக்கூட, அவர்களது வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்வதற்கு ஒரு செயலிதேவைப்படும். ஏற்கனவே பல செயலிகள் இருந்தாலும், இன்னும் லட்சக்கணக்கான செயலிகளுக்கு தேவை இருந்து கொண்டுதான் இருக்கிறது. நீங்களும் ஒரு செயலியை உருவாக்கி, ஆப் ஸ்டோர்களில் ஏற்றி விற்பனை செய்யலாம். வெற்றிகரமான செயலிகள் உங்களுக்கு தொடர்ந்து வரு
மானத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும். அவ்வப்பொழுது, சிறிய அளவில் பராமரிப்பு செய்துகொண்டிருந்தால் போதும்.

ஆன்லைன் ரிவியூ: செல்ஃபோன், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆட்டோமொபைல் போன்ற பல பொருட்களை யூடியூபில் ரிவியூ செய்வதன் மூலமும் பணம்சம்பாதிக்கலாம். இவை தவிரதிரைப்படங்களுக்கு ரிவியூ செய்பவர்களும்ஆன்லைனில் நன்றாக பணம் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் விருப்பம் அல்லதுதிறமைக்கு ஏற்ப நீங்கள் ஒரு களத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டு ரிவியூவில் இறங்கலாம். அத்துடன் உங்களுக்கென்று ஒரு இணைய தளத்தையும் உருவாக்கிக் கொள்ளலாம். விளம்பரம் மூலம் உங்களுக்கு வருமானம் கிடைக்கும். ஸ்பான்ஸர்ஷிப் மூலமும் வருமானம் கிடைக்கும்.

ஆன்லைன் டியூஷன்: வீட்டிலிருக்கும் பல பெண்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு டியூஷன் எடுப்பது என்பது காலங்காலமாக நம்
நாட்டில் நடந்துவரும் ஒன்று. தற்போது அதற்கென்று இணையதளங்கள் வந்துவிட்டன. வேதாந்து (vedantu), கியூமேத் (cuemath) அவற்றில் குறிப்பிட்டத்தக்கவை. டியூஷன் எடுக்க விரும்புவோர் இதுபோன்ற இணையதளங்களில் தங்களை பதிவு செய்து கொண்டு, டியூஷன் எடுக்க ஆரம்பிக்கலாம். அந்த நிறுவனங்களே டியூஷன் எடுப்பதற்கான பயிற்சியையும் கொடுக்கின்றன; மேலும் மாணவர் சேர்க்கை, கோர்ஸ் மெட்டீரியல் போன்றவற்றையும் அந்நிறுவனங்களே பார்த்துக் கொள்கின்றன. ஆகவே பாதி பிரச்சனை உங்களுக்கு இல்லை.

பகுதிநேர வேலை செய்ய நினைப்பவர்களுக்கு இது போன்ற ஆன்லை டியூஷன் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.ஆன்லைன் கல்வி: பல்கலைக் கழகங்கள்,கல்லூரிகள், பள்ளிகளெல்லாம் எதிர்காலத்தில் இருக்குமா என்ற அளவிற்கு மக்களிடையே இன்று சந்தேகம் கிளம்பிவிட்டது – ஆன்லைன் கல்வியால்! ஆன்லைனில் கல்வி கற்றுக் கொள்வதற்கு மக்கள்பணம் கொடுக்க தயாராக உள்ளார்கள். ஆன்லைன் கோச்சிங் செய்யும் பைஜூ போன்ற இந்திய நிறுவனங்கள் இன்று கோடிக்கணகளில் வருமானம் ஈட்டுகின்றன. அதுபோல் இன்று பல நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களும் ஆன்லைன் கோச்சிங்கில் இறங்கியுள்ளன. சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது. நீங்கள் ஒரு துறையில் நிபுணர் என்றால், ஒரு கோர்ஸை தயாரித்து யூடெமி (Udemy), ஸ்கில்ஷேர் (Skillshare), டீச்சபிள் (Teachable) போன்ற பல இணையதளங்கள் மூலம் விற்பனை செய்யலாம். அவ்வாறு ஏற்படுத்தப்படும் வருமானம் உங்களின் வாழ்க்கை முழுவதும் உங்களுக்கு ஈட்டிக் கொடுக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x