Last Updated : 05 May, 2014 02:29 PM

 

Published : 05 May 2014 02:29 PM
Last Updated : 05 May 2014 02:29 PM

விவசாயம் செய்யும் எந்திரன்

சரியாக 7 மாதங்களுக்கு முன்னால் ‘ரோபோ விவசாயி’ என்ற பெயரில் ஒரு செய்தி நம் இதழில் வெளியானது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்த பாலாஜி என்ற கிராமத்து ஏழை மாணவன் விவசாயம் செய்யும் ரோபோவை உருவாக்கி வருவது பற்றி அதில் குறிப்பிட்டிருந்தோம். இப்போது அந்த ரோபோவுக்குச் சர்வதேசக் கவனம் கிடைத்துள்ளது. மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற ஒரு விழாவில் சிறந்த படைப்பாக அது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. ரோபோவுக்குப் பெயர்போன ஜப்பானிலும் இந்த ரோபோ தடம் பதித்துவிட்டு வந்திருக்கிறது.

இந்தச் சாதனை பற்றிய அலட்டலின்றி பாலாஜி அமைதியாக அடுத்த இலக்கு நோக்கிக் கவனத்தைப் பதித்துள்ளார். விவசாயம் செய்யும் இந்த ரோபோவுக்குச் சர்வதேசக் கவனம் எப்படிக் கிடைத்தது எனக் கேட்டால், ‘‘திட்டமிட்ட பணிகளே காரணம்” என்கிறார் பாலாஜி.

“ரோபோ என்றாலே ஜப்பான்தான். இங்கு உருவாக்கப்படாத ரோபோக்களே கிடையாது. ஜப்பானில் டோக்கியோ டெண்டல் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரோபோடிக்ஸ் கண்காட்சி நடைபெறுவது பற்றிக் கேள்விப்பட்டவுடன், அதில் கலந்துகொள்ள நினைத்தேன். நான் ஏற்கனவே சில ரோபோக்களைச் செய்திருந்தாலும் சிறப்பான ரோபோ ஒன்றை உருவாக்கி, அதை அங்கே கொண்டுசெல்ல ஓராண்டாகத் திட்டமிட்டேன். அப்படி உருவாக்கப்பட்டதுதான் விவசாயம் செய்யும் ரோபோ. இதற்காகக் கடந்த மார்ச் மாதம் ஜப்பான் சென்றேன்” என்று கூறுகிறார் பாலாஜி.

அங்கே மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்படப் பல நாடுகளைச் சேர்ந்த ரோபோடிக்ஸ் ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்டார்கள் என்றும் இந்தியாவில் இருந்து தான் மட்டுமே சென்றிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“நான் மாணவனாக இருந்தபோதும் அவர்களுடன் போட்டி போட்டு எனது படைப்பையும் சமர்ப்பித்தேன். பலரும் எனது திட்டத்தைப் பாராட்டினார்கள். இதுவே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை” என்கிறார் பாலாஜி.

இதேபோல அமெரிக்க இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினீயர்ஸ் சார்பில் ஏப்ரல் மாதத்தில் மலேசியாவில் உலகப் புத்தாக்கப் போட்டி நடைபெற்றது. இதிலும் பாலாஜியின் ரோபோ, சிறந்த படைப்பாகத் தேர்வு செய்யப்பட்டது.

“ஜப்பானில் சமர்ப்பித்த பிறகு எனது ரோபோவில் பல மேம்பட்ட தொழில் நுட்பங்களைப் புகுத்தினேன். ஜப்பானில் ரிமோட் கன்ட்ரோலில் செயல்படுவதுபோல் செய்திருந்தேன். ஆனால், மலேசியாவில் சமர்ப்பித்தபோது எங்கிருந்தும் ரோபோவை இயக்க வசதியாக ஜி.பி.எஸ். நுட்பத்தையும் புகுத்தினேன். இதுவே எனது ரோபோ சிறந்த படைப்பாகத் தேர்வு செய்யக் காரணமாக இருந்தது” என்று உற்சாகப்படுகிறார் பாலாஜி.

சரி, அடுத்த இலக்கு என்ன என்று கேட்டால், “தற்போது நிலத்தில் இறங்கி வேலை செய்ய ஆட்கள் கிடைப்பது அரிதாகிவிட்டது. நாற்று நட, களை பறிக்க, அறுவடை செய்ய உதவும் வகையில் எனது ரோபோவில் சில மாற்றங்களைச் செய்யத் திட்ட மிட்டுள்ளேன். எல்லாப் பணிகளும் முடிந்த பிறகு மார்க்கெட்டிங் செய்யவும் ஐடியா வைத்திருக்கிறேன். நண்பர்களின் உதவியுடன் எனது அடுத்த இலக்கையும் அடைவேன்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் பாலாஜி.

விரைவில் நம்மூரில் ரோபோ, விவசாயம் செய்வதைப் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x