Last Updated : 29 Oct, 2020 08:47 AM

 

Published : 29 Oct 2020 08:47 AM
Last Updated : 29 Oct 2020 08:47 AM

சித்திரப் பேச்சு: உமாதேவியுடன் ஆலங்கொண்டார்

திருவாரூர் அசலேஸ்வர் கோவிலில் இருக்கும் இவருக்கு, ‘ஆலங்கொண்டார்' என்று பெயர். இதற்கு ஆலகால விஷத்தை உட்கொண்டவர் என்று பொருள். இரண்டேகால் அடி உயரத்தில் ஆஜானுபாகுவாகப் பரந்த தோள்களுடன் பத்மபீடத்தில் இடது காலை மடித்தபடி, வலது காலை தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் காணப்படுகிறார்.

மேலிரு கரங்களில் மான், மழுவை ஏந்தி இருக்கிறார். வலது கரம் அபயஹஸ்தமும், இடதுகரம் சிம்மகர்ண ஹஸ்தமாகவும் இருக்கிறது. இறைவனின் ஜடாமுடியில் வலப்புறத்தில் சந்திரனும் இடப்புறத்தில் நாகமும் உள்ளன. இறைவனின் வலது காதில் மகரக் குண்டலமும், இடது காதில் ஓலையும் காணப்படுகின்றன. முகத்தில் மெல்லிய புன்னகையுடன் சாந்த சொரூபியாகக் காட்சியளிக்கும் இவரது நெற்றியில் நெற்றிக்கண்ணும் உள்ளது. இதைக் காணும்போது திரிபுரத்தை எரித்த கதை நினைவுக்கு வருகிறது.

இடையில் அணிந்துள்ள ஆடை, அணிமணிகளுடன் காணப்படும் சிம்மத்தை பார்க்கும் போது, இது சோழர்களின் கலை வடிவம் என்பது புலனாகிறது. உடனிருக்கும் உமாதேவியும் புன்னகை தவழும் முகத்துடன் பத்மபீடத்தில் வலது காலை மடக்கி சற்று உயர்த்தியபடி, இடது காலைத் தொங்கவிட்டு மாறுபட்ட கோலத்தில் அமர்ந்திருக்கும் பாங்கு சிறப்பானது.

வலது கரம், பத்மத்தை ஏந்தும் பாங்கிலும், இடது கரம் விரல்களைச் சற்றே மடித்து ஏடு ஏந்தும் அமைப்புடனும் காணப்படுகின்றன. இவை பஞ்சலோகத் திருமேனிகள். இத்தலம், ஏழாம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டு, பின்னர் சோழர்களால் திருப்பணி செய்யப்பட்டு விரிவாக்கப்பட்ட திருத்தலம். இங்கே மாறுபட்ட வகையில், நவக்கிரக நாயகர்கள் இறைவனை நோக்கியபடி ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x