Last Updated : 27 Oct, 2020 09:27 AM

 

Published : 27 Oct 2020 09:27 AM
Last Updated : 27 Oct 2020 09:27 AM

ஆடும் கால்கள்; இசைக்கும் கைகள்!

அனந்த் ரகுநந்தன்

இரண்டு கைகளின் சுண்டுவிரல்களைப் பிணைத்துக் காட்டினால் காதலர்களுக்குள் மகிழ்ச்சி என்று பொருள். அதுவே, சுட்டுவிரல்களைப் பிணைத்துக் காட்டினால் காதலர்களுக்குள் பிணக்கு என்று பொருள். இப்படி நுணுக்கமான சவால்களைக் கொண்ட கலை பரதநாட்டியம். நுணுக்கங்கள் நிறைந்த பரதக் கலையில் தன் அரங்கேற்றத்தை நடத்துவதற்காக அமெரிக்காவின் மியாமி மாகாணத்திலிருந்து வந்திருந்தார் அனந்த் ரகுநந்தன்.

டி.என்.ராஜரத்தினம் கலையரங்கத்தில் அவரது நாட்டிய அரங்கேற்றம் அண்மையில் நடந்தது. ‘இதிலென்ன ஆச்சரியம்?’ என்பவர்களுக்கு ஒரு தகவல். அனந்த், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட 22 வயது சிறப்புக் குழந்தை. இவருடைய பெற்றோர் ரமா, ரகுநந்தன் இருவருமே அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் பேராசிரியர்களாகப் பணியில் இருப்பவர்கள். அனந்தின் சகோதரர் அனீஷ் ரகுநந்தனும் பேராசிரியரே.

பாரம்பரியமான பரதநாட்டிய வழிமுறைகளைப் பின்பற்றி புஷ்பாஞ்சலி, அலாரிப்பு, ஜதிஸ்வரம், வர்ணம், தில்லானா என ஒவ்வொன்றிலும் முத்திரை பதித்தது அனந்தின் நடனம். காதில் விழும் ஜதிக்கு ஏற்றபடி கால்களின் அசைவு இருக்க வேண்டும். கைகளின் அசைவுகளுக்கு ஏற்றபடி கண்ணின் அசைவு இருக்க வேண்டும். சாதாரணமானவர்களுக்கே இது சவாலான கலை எனும்போது, மூளையின் கட்டளைப்படி உடலின் பாகங்களைச் செயல்படுத்துவதில் சிக்கல் கொண்ட ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைக்கு பரதநாட்டியம் போன்ற (மோட்டார் ஆக்டிவிடி) அதிகமுள்ள கை, கால், கண்களை இயக்கும் கலை எவ்வளவு சவாலானதாக இருக்கும்?

“அனந்துவால் எப்படி இதைச் செய்யமுடிந்தது?”

“எளிமையாக சொன்னால், இந்தக் கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என அவரே விரும்பித் தேர்ந்தெடுத்ததுதான் காரணம். ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருப்பதிக்குக் குடும்பத்தோடு சென்றிருந்தோம். அங்கே தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்தபோது, பெரிய திரையில் திருப்பதி தேவஸ்தான டிவி சேனலில் ஒரு நடன நிகழ்ச்சியை அனந்த் பார்த்தார். அப்போதுதான் பரதநாட்டிய நிகழ்ச்சியையே அவர் முதன்முறையாகப் பார்க்கிறார். அவரின் முகத்தில் இனம்புரியாத பரவசம். நானும் இதுபோல் ஆடணும் என்றார். அதற்கு முன்பாக ‘மோட்டார் ஆக்டிவிடி’க்காக கராத்தே போன்ற தற்காப்பு கலை, ஹிப்ஹாப் போன்ற மேற்கத்திய நடனப் பயிற்சிகளிலும் அவரை ஈடுபடுத்தினோம். பெரிதாக முன்னேற்றம் தெரியவில்லை.

ஆனால் அவரே விரும்பிக் கேட்டதால், முதலில் கலாஷேத்ராவில் நடனம் பயின்று, பிறகு மியாமியில் இருக்கும் ஹரிஜா சிவகுமாரிடம் பரதம் கற்றுக்கொள்ள சேர்த்துவிட்டோம். நல்ல முன்னேற்றம் தெரிந்தது. அவரிடம் இரண்டு ஆண்டுகள் பயிற்சிக்குப் பின், கடந்த இரண்டு ஆண்டுகளாக கலாஷேத்ரா அறக்கட்டளையில் நடன ஆசிரியராக இருக்கும் கே.மோகனன் தகுந்த முறையில் பயிற்சியளித்து தற்போது அரங்கேற்றத்துக்கு ஏற்ற வகையில் அனந்தைத் தயார்படுத்தியிருக்கிறார்” என்கிறார் அனந்தின் தந்தை ரகுநந்தன்.

‘லைஃப்ஸ்மார்ட்’ என்னும் பெயரில் ‘வாட்ஸ் அப்’ குழுவைத் தொடங்கி, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோர்களை அதன் மூலம் ஒருங்கிணைத்துவருகிறார் அனந்தின் தாய் ரமா.

நடனத்தின் அசைவுகள் அனந்தனின் கால்களுக்குப் பயிற்சியால் கிடைத்திருப்பதுபோல், பியானோவில் இசையின் அசைவுகளும் அவரின் கைகளுக்குக் கிடைத்துள்ளன. தற்போது மருத்துவ ஆவணப் பராமரிப்புப் பட்டயப் படிப்பையும் இரண்டு ஆண்டுகளாக அனந்த் படித்துவருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x