Last Updated : 27 Oct, 2020 09:21 AM

 

Published : 27 Oct 2020 09:21 AM
Last Updated : 27 Oct 2020 09:21 AM

கற்றலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் டிஜிட்டல் நூலகம்

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இணையம் குறித்த சிந்தனை விவாதிக்கப்பட்டாலும், 1960இல்தான் அது சாத்தியமானது. 1960களில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை, ARPANET என்ற பெயரில் இணையத்தைக் கண்டுபிடித்தபோது, இணையம் நம்முடைய வாழ்க்கையில் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிவியலாளர்கள் உட்பட யாரும் கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

1991இல் டிம் பெர்னர்ஸ்– லீ கூட்டணி, வேர்ல்டு வைடு வெப் (WWW) கண்டுபிடித்து, இண்டர்நெட் என்கிற பெயரில் அதைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அளித்தனர். அதன் பின்னர் இணையத் தொழில்நுட்பம் கண்ட அசுர வளர்ச்சி, வரலாறு. இணையத் தொழில்நுட்பத்தின் வீச்சும் அதன் அபரிமித ஆற்றலும் கனவிலும் நினைக்க முடியாத திறன்களை இன்று சாத்தியப்படுத்தியுள்ளன. மாணவர்களின் பயன்பாட்டுக்காகவும் இந்திய மனிதவளத் திறன் மேம்பாட்டுக்காகவும் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக உருவாக்கப்பட்டிருக்கும் தேசிய மின்னணு நூலகமும் (NDLI) அத்தகைய சாத்தியங்களில் ஒன்று.

நூலகத்தின் பின்னணி

இந்தியத் தேசிய டிஜிட்டல் நூலகம் (NDLI) என்பது அனைத்து வகையான கற்றல் வளங்களைத் தன்னுள் கொண்டுள்ள மெய்நிகர் களஞ்சியம். இந்த நூலகம் கரக்பூர் ஐ.ஐ.டி.யால் உருவாக்கப்பட்டு, இயக்கப்பட்டு, பராமரிக்கப்படுகிறது. NMEICT மூலம் செயல்படுத்தப்பட்ட இந்த நூலகத் திட்டம், மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் வழிநடத்தப்படுகிறது.

எப்படிப் பயன்படுத்துவது?

இந்த டிஜிட்டல் நூலகத்தைப் பயன்படுத்த விருப்பமுள்ளவர்கள் https://ndl.iitkgp.ac.in/ என்கிற இணையதளத்துக்குள் சென்று, அதில் உறுப்பினராகப் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த நூலகத்தில் உள்நுழைவதற்கு உறுப்பினர்களுக்குத் தனிப் பயன்பாட்டுப் பெயரும் கடவுச்சொல்லும் வழங்கப்படும். அதைப் பயன்படுத்தி உறுப்பினர்கள் டிஜிட்டல் நூலகத்துக்குள் சென்று தங்களுக்குத் தேவையான மின்னணுப் புத்தகங்களைப் பதிவிறக்கம்செய்து பயனடையலாம். அறிவை வளர்த்துக்கொள்ளலாம். திறனையும் மேம்படுத்திக்கொள்ளலாம்.

பயன்படுத்தப்படும் மொழிகள்

உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில் இந்த நூலகம் தொகுக்கப்பட்டுள்ளது. எந்த மொழியின் உள்ளடக்கத்தையும் இதனுள் சேகரித்துவைக்க முடியும். இந்தியாவில் பரவலாகப் பயன்பாட்டில் உள்ள தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் இந்த நூலகம் செயல்படுகிறது. இதனால், பயனாளர்கள் தங்களுடைய மொழியிலேயே தமக்கு வேண்டியதைத் தேடி எடுத்துக்கொள்ள முடியும்.

திறன் மிக்க தேடல்

பல படிநிலைகளிலிருக்கும் மாணவர்களுக்குப் பல சேவைகளை வழங்கும் இந்த மின்னணு நூலகத்தில், திறன்மிக்க தேடல் வசதியும் சலிப்பு ஏற்படுத்தாத உலாவல் வசதியும் உண்டு. கற்பவர்கள் தங்களுக்கு வேண்டிய தரவுகளை/ நூல்களைக் குறைந்த முயற்சியில், குறைந்த நேரத்தில் கண்டடையும் வகையில் தேடல் திறன்மிக்கதாக இந்த நூலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

யாருக்குப் பயன்படும்?

பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலை தேடுவோர், போட்டித் தேர்வுக்கு ஆயத்தமாவோர் போன்றோருக்குக் குறிப்பிட்ட சேவைகளை அவர்களுக்குத் தேவைப்படும் விதத்தில் தனித்தனியே வழங்கும் வசதி இந்த நூலகத்தில் உண்டு. ஆராய்ச்சியாளர்கள், வாழ்நாள் முழுவதும் கற்பவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான சேவைகளை அனைத்து துறைகளிலும், அனைத்து கல்வி நிலைகளிலும் இந்த நூலகம் வழங்குகிறது.

மலைக்க வைக்கும் தொகுப்பு

ஆராய்ச்சியாளர்களின் கற்றலுக்கும் ஆய்வுகளுக்கும் தேவைப்படும் நூல்களும் பல ஆதாரங்களிலிருந்து தொகுக்கப்பட்ட தரவுகளும் இந்த நூலகத்தில் மலைபோல குவிந்துள்ளன. புத்தகங்கள், கட்டுரைகள், வீடியோக்கள், ஆடியோக்கள், ஆய்வுரை, கல்வி சார்ந்த பலதரப்பட்ட தகவல்கள் ஆகியவற்றால் இந்த நூலகம் நிரம்பி வழிகிறது.

சுமார் 70 மொழிகளில் 3 லட்சம் நூலாசிரியர்களால் எழுதப்பட்ட சுமார் 7 லட்சம் நூல்கள், 3 லட்சம் கட்டுரைகள், அதில் 95 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள், 2.4 லட்சம் ஆடியோ விரிவுரைகள், 18 ஆயிரம் வீடியோ விரிவுரைகள் ஆகியவை இந்த டிஜிட்டல் நூலகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களுக்குத் தேவையான நூல்களை பி.டி.எஃப். வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பாடப் புத்தகங்களின் தொகுப்பு

பள்ளிக் கல்வி, தேர்வுக்கான தயாரிப்பு, பொறியியல், அறிவியல், மானுடவியல், இலக்கியம், சட்டம், மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பாடங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை என்.சி.இஆர்.டி, தமிழகப் பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட 20 பள்ளிக் கல்வி வாரியங்களின் பாடத்தொகுப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இந்த நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவைதவிர பொதுவான வாசிப்புக்கு என்.பி.டி.யின் புத்தகங்களும் உள்ளன. இத்துடன் கோவிட்-19 நோயை வெல்ல உதவும் யோசனைகள், ஆராய்ச்சிகள், கருத்தரங்குகள், சவால்கள் உள்ளிட்ட தகவல்களும் இந்தத் தேசிய டிஜிட்டல் நூலகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.

மாற்றங்களின் நீட்சி

நம்முடைய அறிவுத் தேடலும் கற்றலும் இன்று முற்றிலும் இணையத்தைச் சார்ந்தே உள்ளன. இணையத்தால், கற்றல் இலகுவாகிவிட்டது. கற்றலும் அறிவுத்தேடலும் மாணவர்களுக்கு விருப்பமானவையாக மாறிவிட்டன. கல்வித் துறையில் இணையம் ஏற்படுத்திவரும் ஆரோக்கியமான மாற்றங்களின் நீட்சியே தேசிய மின்னணு நூலகம். இது நம் தலைமுறை மாணவர்களின் கற்றல்திறனை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும். அவர்களுடைய திறனை மெருகேற்றும். முக்கியமாக, கரோனா காலத்தில் வீட்டினுள் முடங்கியிருக்கும் இன்றைய மாணவர்களுக்குத் தடையற்ற கல்வியை அளிக்கும்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x