Last Updated : 24 Oct, 2020 09:51 AM

 

Published : 24 Oct 2020 09:51 AM
Last Updated : 24 Oct 2020 09:51 AM

கரோனா: இளம் வயதினர் இறப்பது ஏன்?

கரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிதல், கைகளைத் தூய்மையாக வைத்திருத்தல் என்பது போன்ற பல எளிய நடைமுறைகள் இருக்கின்றன. இன்னொரு முக்கியமான விஷயம் நோய்த் தடுப்பாற்றலைத் தரக்கூடிய உணவு வகைகளைச் சாப்பிடுவது. ஏனென்றால், கரோனா வைரஸ் நம் உடலுக்குள் நுழைந்ததும், நம் உடலைக் காக்க உடனே துணைக்குவருவது நோய்த் தடுப்பாற்றல் மண்டலத்தின் போர் வீரர்கள்தாம். வயது முதிர்ந்தவர்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கு, அவர்களின் நோய்த் தடுப்பாற்றல் குறைந்துபோவதும் முக்கியக் காரணம்.

இதில், சில கேள்விகள் எழுகின்றன – வயது மிகுந்தவர்களில்கூடச் சிலருக்கு மட்டும் நோய்த்தொற்று தீவிரமடை வதற்குக் காரணம் என்ன? தடுப்பாற்றல் திறன் அதிகமிருக்கும் இளவயதினர் சிலருக்கும் நோய்த்தொற்று ஏன் தீவிரமடைகிறது? எல்லோர் உடலிலும் நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் ஒன்றுபோலத்தான் செயல்படுகின்றதா? அவசியமான கேள்விகள் இவை.

படிநிலைகளும் தடுப்பாற்றல் மண்டலமும்

கரோனா நோய்த்தொற்றில் மூன்று படிநிலைகள் இருப்பதாகச் சொல்லலாம். முதல் நிலை – நோய் அறிகுறியற்றது; இரண்டாம் நிலை – மிதமான அறிகுறியுடன் இருப்பது; மூன்றாம் நிலை – தீவிரத் தொற்று. முதல் இரண்டு நிலைகளில் இருப்பவர்களுக்குப் பெரிய பிரச்சினை இல்லை. நோய்க்கு ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் நோய்த் தடுப்பாற்றல் மண்டலம், வைரஸ் உடல் முழுவதும் ஆக்கிரமிக்க விடாமல் தடுக்கும். நோய் அறிகுறியைக் கட்டுப்பாட்டில் வைத்து நம்மைக் காப்பாற்றும்.

ஆனால், மூன்றாம் நிலையில் இருப்பவர்களுக்கு மருத்துவச் சவால்கள் அதிகம். நம்முடைய நோய்த் தடுப்பாற்றல் மண்டலத்தின் செயல்பாடுகள் நமக்கே பகைவனாக மாறக்கூடும்என்பதால் இந்தச் சவால் தீவிரமடைகிறது. எடுத்துக்காட்டாக, கூரான மரப்பட்டைக் கையில் கிழித்துவிட்டால் என்ன ஆகிறது? வலிக்கும், அந்த இடம் சிவப்பாகும், எரிச்சல் இருக்கும். இந்த அறிகுறிகள் ஏன் ஏற்படுகின்றன? மரப்பட்டையில் இருக்கும் தூசு, பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகள் காயம் ஏற்பட்ட இடத்தின் மூலம் உடலுக்குள் நுழையும். மரப்பட்டை கிழித்ததால், அந்தப் பகுதி தோலில் உள்ள செல்களும் பாதிக்கப்படும். இவற்றை உடனே தடுத்தாக வேண்டும். அதற்காக நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் தன் வீரர்களை அங்கே அனுப்பி, கிருமிப் பரவலைத் தடுக்கும். அந்த இடத்தில் நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் வேலை செய்துகொண்டிருக்கிறது என்பதற்கான அறிகுறிகள்தாம் வலியும் எரிச்சலும். இதை அழற்சி (inflammation) என்பார்கள்.

வைரஸ் தொற்று ஏற்பட்டு, தீவிர நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் உடலில் முக்கிய உறுப்புகளான நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்டவை அதிகம் பாதிக்கப்படுகின்றன. இந்த உறுப்புகளில் இருக்கும் செல்கள் பாதிக்கப்படும்போது, அங்கேயும் அழற்சி (inflammation) உண்டாகும். எனவே, வைரஸால் பாதிக்கப்பட்ட இந்த செல்களைக் காப்பாற்ற, நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் ஓடிவரும். மேம்போக்காகப் பார்க்கும்போது இது நல்லதுதானே என்று தோன்றினாலும், இதனால் சிக்கல்களும் ஏற்படுகின்றன.

தீவிரத் தொற்றும் தடுப்பாற்றல் சிக்கல்களும்

நம் நோய்த் தடுப்பாற்றல் மண்டலத்தின் செயல்பாடுகள் பரந்துபட்டவை. ஓரிடத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்னும் சமிக்ஞையை அனுப்பும், கிருமிகளை அழிக்கும், பாதிக்கப்பட்ட செல்களை அழிக்கும், மீண்டும் அதே கிருமித் தொற்று ஏற்பட்டால் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்காகக் கிருமிகளின் உயிரி வடிவத்தை நினைவில் வைத்துக்கொள்ளும். சீராக இயங்கும் நோய்த் தடுப்பாற்றல் மண்டலமானது, சூழலுக்கு ஏற்றவாறு பணிகளை முடுக்கிவிடும்.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட உறுப்புகளில் உள்ள நல்ல செல்களைக் காப்பாற்ற நம் நோய்த் தடுப்பாற்றல் மண்டலம், பாதிக்கப்பட்ட செல்களைச் செயலிழக்கச் செய்யும். நல்ல ஆப்பிள்கள் இருக்கும் கூடையில், ஓரே ஒரு அழுகிய ஆப்பிள் இருந்தாலும், மற்ற ஆப்பிள்களும் அழுகத் தொடங்க லாம். அதனால், அழுகிய ஆப்பிளை அகற்றிவிடுவோம். அதுபோல், கரோனாவால் பாதிக்கப்பட்ட செல்கள் செயலற்றுப் போகும். இதனால், உறுப்புகள் சிதையத் தொடங்கும்.

இது கரோனா தாக்கத்தில் மிகப்பெரிய பிரச்சினை. மேலும், சில நோயாளிகளின் உடலில் நோய்த் தடுப்பாற்றல் மண்ட லத்தின் செயல்பாடுகள் ஒன்றுக்கொன்று பிணைப்பில்லாமல், சீர்கெட்ட சூழலுக்குச் செல்லவும் கூடும். அப்போதும், கிருமிகளுக்குப் பதிலாக மனித செல்களைச் செயலிழக்கச் செய்துவிடும். மேற்கூறிய பிரச்சினைகளால் கரோனா வைரஸுக்கும் நம் நோய்த் தடுப்பாற்றல் மண்டலத்துக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆய்வுகள் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்றுவருகின்றன.

மரபணுப் பிரச்சினையும் சில எதிரணுக்களும்

சிலருக்கு நோய் அறிகுறியே இல்லை; சிலருக்கோ நோய் தீவிரமடை கிறது. இப்படி, ஒவ்வொருவர் உடலிலும் ஒவ்வொரு விதமாக வைரஸ் செயலாற்றுவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கலாம் என்ற கேள்வி கரோனா தொற்று பரவத் தொடங்கிய காலத்திலிருந்தே இருந்துவருகிறது. இப்போது ஓரளவு தெளிவு கிடைத்திருக்கிறது.

உலக அளவில் நடைபெற்ற ஆய்வுகளில், நோய்த் தொற்று தீவிரம் அடைந்தவர்களின் மரபணுவும் (gene), மிதமான தொற்று ஏற்பட்டவர்களின் மரபணுவும் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன. இதில், நோய் தீவிரம் அடைபவர்களுக்கு மரபுரீதியாகப் பிழை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மனித செல் ஒன்று வைரஸ் தொற்றால் அழியும்போது, இன்டர்ஃபெரான் (interferon) என்னும் புரதத்தை வெளி யிடும். இந்தப் புரதத்தின் பணி, அருகில் இருக்கும் மற்ற செல்களை எச்சரிப்பது. ‘நான் அழிந்துகொண்டிருக்கிறேன், உன்னை நீ காப்பாற்றிக்கொள்’ என்று சொல்வது. மரபுரீதியாகப் பிழை இருப்பவர்களுக்கு, இன்டர்ஃபெரான் புரதம் வெளிப்படுவது சீராக நடைபெற வில்லை. இதனால், நோய்த் தொற்று வேகமாகப் பரவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வில் கலந்துகொண்ட பதின்ம வயதினரில் இருந்து முதியவர்வரை இந்தப் பிழை இருந்திருக்கிறது. இதுவே இளவயதினருக்குக்கூடச் சில நேரம் தொற்று தீவிரம் அடைவதற்கு முக்கியக் காரணியாகக் கருதப்படுகிறது.

இதே ஆய்வின் நீட்சியாக, இன்னொரு விஷயமும் கண்டறியப் பட்டுள்ளது. கரோனா வைரஸ் உடலுக்குள் நுழைந்தவுடன், நம்முடைய நோய்த் தடுப்பாற்றல் மண்டலம், சரியான எதிரணுக்களைத் தயாரித்து அனுப்பும். இந்த எதிரணுக்கள் வைரஸை அழிக்கும். தீவிரத் தொற்று ஏற்பட்டவர்களின் உடலில் உள்ள எதிரணுக்களையும், மிதமான தொற்று ஏற்பட்டவர்களின் எதிரணுக்களையும் ஒப்பிட்டுப் பார்த்ததில், முக்கிய புரிதல் கிடைத்திருக்கிறது. சீரான நிலையில் இல்லாத நோய்த் தடுப்பாற்றல் மண்டலம், தவறான எதிரணுக்களைத் தயாரிக்கிறது. இவற்றை ‘வஞ்சக எதிரணுக்கள்’ (rogue antibodies) என்கிறார்கள். இவை, வைரஸை அழிப்பதற்குப் பதிலாக, நமக்கு நன்மை செய்யும் இன்டர்ஃபெரான் புரதத் தயாரிப்பைத் தடுக்கும். இதனால், நோய் தீவிரம் அடைகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த வஞ்சக எதிரணு பிரச்சினை உள்ளவர்களில் 94 சதவீதத்தினர் ஆண்கள். ஆண்களின் இறப்பு எண்ணிக்கை அதிகம் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆய்வு தரும் புரிதல்

இந்த ஆய்வு முடிவுகள், சிகிச்சைக்கும் பெரும் பயன் அளிக்கின்றன. முதல் இரண்டு நிலைகளில் இருக்கும் நோயாளி களுக்கு, நோய்த் தடுப்பாற்றலை ஊக்குவிக்கும் மருந்துகளும், தீவிர நிலையில் இருப்பவர்களுக்குத் தடுப்பாற்ற லைக் கட்டுக்குள் வைத்திருக்கும் சிகிச்சைகளும் பரிந்துரைக்கப்பட்டன. நோய் தீவிரம் அடைவதற்கு மரபணுக் காரணங்களும் இருப்பதால், கரோனா தொற்று ஏற்பட்டவரைக் குற்றவாளியாகப் பார்க்கும் பார்வை மாற வேண்டும். அத்துடன், தடுப்பாற்றலை அதிகரிக்கும் எலுமிச்சைச் சாறையும் மிளகு ரசத்தையும் பருகிவிட்டால் மட்டும் போதாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவசியம் கடைப்பிடித்தாக வேண்டும்.

கட்டுரையாளர், இஸ்ரேல் டெக்னியன் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: hemazephyrs@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x