Published : 19 Oct 2020 09:58 AM
Last Updated : 19 Oct 2020 09:58 AM

வால்மார்ட்டின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் சூத்திரம்

சுப. மீனாட்சி சுந்தரம்
somasmen@gmail.com

அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டு இன்று உலகெங்கும் கால் பதித்திருக்கும் வால்மார்ட் நிறுவனத்தை தோற்றுவித்த சாம் வால்டனின் வாழ்க்கையையும் வால்மார்ட்டின் வரலாற்றையும், அதை வளர்த்தெடுத்ததில் அவர் கையாண்ட முக்கிய உத்திகள் மற்றும் நிர்வாகக் கொள்கைகளையும் உள்ளடக்கிய புத்தகம்தான் “சாம் வால்டன்: மேட் இன் அமெரிக்கா” (Sam Walton: Made in America).

ஆர்கன்சாஸ் நகரில் உள்ள ஒரு பலசரக்குக் கடையை வாங்குவதன் மூலம் தனது தொழில் பயணத்தைத் தொடங்கினார் சாம் வால்டன். வீட்டு உபயோகத்திற்கு தேவைப்படும் பலசரக்கு சாமான்களை விற்பனை செய்துவந்த அந்தக் கடைதான் அவருக்கு பயிற்சி மைதானமாக அமைந்து. அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளுடன் எப்படி போட்டியிட வேண்டும் என்பதை அங்குதான் கற்றுக் கொண்டார். குறைந்த விலையில் விற்பதன் மூலம் அதிகமான விற்பனையை எட்டுவது, அதிரடி விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் வாடிக்கையாளர்களை கவர்வது ஆகியவை அங்கிருந்து அவர் கற்றுக்கொண்ட விற்பனை உத்திகள்.

அக்காலகட்டத்தில் அமெரிக்காவில் பிரம்மாண்டமான சூப்பர் மார்க்கெட்டுகள் பெரும் வளர்ச்சி கண்டுவந்தன. இதனால் வால்டன் போன்றவர்கள் ஆரம்பித்த சிறிய வகை பலசரக்கு கடைகள் தங்களது வியாபாரத்தை இழந்தன. ஆனால் சாம் வால்டன் பெரு நிறுவங்களின் அதிரடிப் போக்குகளை கண்டு துவளவில்லை. அவற்றைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தினார். ஏற்கனவே பலசரக்கு கடைகள் இருந்த இடங்களில் அதிக தள்ளுபடி வழங்கும் கடைகளை ஆரம்பித்தார். அவரது வெற்றிப் பயணம் ஆரம்பமானது.

பெரு நிறுவனங்கள் சிறிய நகரங்களை தவிர்ப்பதை வால்டன் உணர்ந்தார். சிறு நகரவாசிகளுக்கு உள்ளூரிலேயே சிறந்த விலையில் தரமான பொருள்கள் கிடைத்தால் அங்குள்ள வாடிக்கையாளர்கள் நகரங்களுக்கு செல்வதற்குப் பதிலாக உள்ளூரிலேயே ஷாப்பிங் செய்ய விரும்புவார்கள் என்பதை உணர்ந்து கொண்டார். அதுவே வால்மார்ட்டின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்து. சிறியதாக நினைத்து செயல்பட்டால் பெரிய அளவில் சாதனைகள் செய்ய முடியும் என்பதே வால்டனின் வெற்றிச் சூத்திரம்.

வால்டனின் வெற்றிக்கு காரணமான 8 கட்டளைகள்

1 தொழிலில் முழு மனதை செலுத்த வேண்டும் . மற்றவர்களை விட நமக்கு அதிக நம்பிக்கை இருக்க வேண்டும் எந்தச் சிக்கல்களையும் சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஒருபோதும் அஞ்சக்கூடாது.

2 வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தை நாம் மட்டும் எடுத்துக்கொள்ளாமல் நிறுவனத்தின் அதிகாரிகள், ஊழியர்கள், கூட்டாளிகள் என அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும். நிறுவனத்தில் வேலை செய்பவர்களையும் கொஞ்சம் முதலீடு செய்யத் தூண்ட வேண்டும்.

3 தினமும் புதுப்புது உத்திகளை கண்டுபிடிக்க வேண்டும். ஊழியர்களையும் சிந்திக்க வைக்க வேண்டும்.

4 ஊழியர்களும் நிர்வாகிகளும் அடிக்கடி தொடர்பு கொண்டு கருத்துக்களை பரிமாறிக்கொள்வது அவசியம்.

5 நிர்வாகிகள் அல்லது ஊழியர்களின் செயலாற்றலை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும்.

6 சிறிய அளவிலேயே வெற்றி கிடைத்தாலும், அதை அனைவருடன் சேர்ந்து கொண்டாட வேண்டும். தோல்வி ஏற்படும்போது நகைச்சுவையுடன் பேசி சமாளிக்க வேண்டும்.

7 விற்பனையாளர்கள் நிறுவனத்தைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்கள்தான் வாடிக்கையாளர்களோடு நேரடி தொடர்பில் இருப்பவர்கள். கடைநிலை ஊழியர்களிடம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கான நல்ல யோசனைகள் இருக்கும் . எனவே அவர்களது கருத்துக்களை காது கொடுத்து கேட்க வேண்டும்.

8 வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை விட அவர்களுக்கு அதிக அளவில் சேவை செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x