Published : 10 Oct 2020 09:52 AM
Last Updated : 10 Oct 2020 09:52 AM
தங்களுடைய கண்டுபிடிப்புகளின் மூலம் அறிவியலின் எல்லையை ஆராய்ச்சியாளர்கள் விரிவுபடுத்திக்கொண்டே வந்துள்ளனர். இத்தகைய ஆராய்ச்சியாளர்களின் தன்னிகரற்ற சேவையைப் போற்றும்விதமாக, ஒவ்வோர் ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 2020-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் ஹார்வி ஜே. ஆல்ட்டர், சார்லஸ் எம். ரைஸ், பிரிட்டிஷ் விஞ்ஞானி மைக்கேல் ஹாவ்டன் ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெபடைடிஸ் சி வைரஸ் கண்டறியப்பட்டதன் முக்கியத்துவம், இந்தப் பெருந்தொற்று காலத்தில் நோபல் பரிசு உணர்த்தும் சேதி, மருத்துவ அறிவியலின் வளர்ச்சி, தடுப்பூசிகள் உள்ளிட்டவை குறித்து பிரபல இரைப்பைக் குடலியல் சிறப்பு மருத்துவர் பா. பாசுமணியுடனான நேர்காணல்:
நாவல் கரோனா வைரஸ் பிடியி லிருந்து மீளும் வழி தெரியாமல் உலகம் தவித்துவரும் சூழ்நிலையில் வழங்கப்பட்டிருக்கும், இந்த நோபல் பரிசைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பொதுவாக எந்த ஒரு கண்டு பிடிப்பையும் யாரோ ஒரு தனிமனிதரை மட்டும் சார்ந்தது என்று சொல்லிவிட முடியாது. பலருடைய சிந்தனைகளின் விளைவால் ஏற்படும் சாத்தியங்களின் ஒட்டுமொத்த தொகுப்பே அது. உயிர்கள் அடையும் பரிணாம வளர்ச்சி/மாற்றத்தைப் போன்று, சிந்தனைகளும் கற்பனைகளும் பரிணாம வளர்ச்சி அடைந்து ஒரு கண்டு பிடிப்பாக வெளிப்படுகின்றன.
கண்டுபிடிப்புகள் ஒரு தொடரோட்டப் போட்டியைப் போன்றவை. இறுதிக்கோட்டைத் தாண்டுபவருக்கு மட்டும் உரித்தானதல்ல வெற்றி. முகம் தெரியாத ஆராய்ச்சியாளர்கள் பலர் ஓடியிருக்கின்றனர், ஓடிக்கொண்டு உள்ளனர், இனியும் ஓடுவார்கள். கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸை எதிர்த்து உலகம் போராடிவரும் சூழ்நிலையில், ஹெபடைடிஸ் சி வைரஸைக் கண்டுபிடித்ததற்காக வழங்கப்பட்டிருக்கும் இந்தப் பரிசு, கரோனாவுக்கு எதிராகப் போராடிக்கொண் டிருக்கும் அறிவியலாளர்களுக்கு நிச்சயம் உத்வேகத்தை அளிக்கும்.
நோபல் பரிசு வழங்கப்படும் அளவுக்கு இந்தக் கண்டுபிடிப்பின் சிறப்பு என்ன?
ஹெபடைடிஸ் வைரஸைப் பொறுத்தவரை, அதில் ஏ, பி, சி, டி, இ என ஐந்து வகைகள் உள்ளன. நோபல் பரிசு பெற்ற இந்த அறிவியலாளர்கள் மூவரும் ஹெபடைடிஸ் சி வைரஸைக் கண்டறிவதற்கு முன்புவரை ஹெபடைடிஸ் ஏ, ஹெபடைடிஸ் பி ஆகிய வைரஸ் குறித்த கண்டுபிடிப்பே முக்கியமானதாகக் கருதப்பட்டது.
உலக அளவில் ஹெபடைடிஸ் சி நோய்ப் பாதிப்பால் ஏழுகோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. சத்தமின்றி மனித உயிர்களைப் பறிக்கும் உயிர்க்கொல்லியாக ஹெபடைடிஸ் சி பல ஆண்டுகளாக இருந்துள்ளது. எதிரி யார் என்று தெரிந்தால்தானே, அதற்கு எதிராகப் போராட முடியும்? அந்த வகையில் இதுதான் எதிரி, கல்லீரலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வைரஸ் இதுதான் என்பதைக் கண்டுபிடித்த இந்த விஞ்ஞானிகள், பல கோடி மனிதர்களின் உயிரிழப்பைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இன்றைக்கு 8-12 வாரங்களுக்கு மாத்திரை சாப்பிடுவதன் மூலம் இந்த வைரஸை முற்றிலும் ஒழித்துவிடலாம்.அந்த வகையில் ஹெபடைடிஸ் சி வைரஸை ஒட்டுமொத்தமாக வென்றுவிட்டோம். இந்தக் கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதற்குக் காரணமும் இதுதான்.
இந்த வைரஸ் வகைகள் எவ்வாறு பரவுகின்றன? மனிதர்களை அவை எவ்வாறு பாதிக்கின்றன?
ஹெபடைடிஸ் ஏ, ஹெபடைடிஸ் இ ஆகியவை உணவு, நீர் ஆகியவற்றில் கலக்கும் மனிதக் கழிவால் பரவுகின்றன. இவை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. இவற்றால் ஏற்படும் காய்ச்சல், கண் மஞ்சள் நிறத்தில் மாறுவது போன்ற அறிகுறிகளைக் கொண்ட காமாலை நோய்கள் விரைவில் தானாகவே சரியாகிவிடும்.
ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி போன்ற வைரஸ் வகைகள் நாள்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். கல்லீரல் பாதிப்பு, கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் அழற்சி, கல்லீரல் சுருக்கம் (சிரோஸிஸ்), ரத்த வாந்தி போன்ற பாதிப்புகளை இந்த வைரஸ் வகைகள் ஏற்படுத்துகின்றன. எந்த அறிகுறியுமின்றி மனிதர்களை இவை மரணத்துக்கு இட்டுச் சென்று விடும். இந்தியாவில் இன்றும் மூன்று சதவீதத்தினர் ஹெபடைடிஸ் பி வைரஸாலும், ஒரு சதவீதத்தினர் ஹெபடைடிஸ் சி வைரஸாலும் பாதிக்கப்படுகின்றனர்.
ரத்தம், விந்து ஆகியவற்றின் மூலம் இவை பரவுகின்றன. தாயின் கருவி லிருக்கும் குழந்தைகளுக்கும் இவை பரவும். 1960-1970 காலகட்டத்தில்தான் ரத்தப் பரிமாற்றம் பரவலானது. அப்போது மனிதனுக்கு வழங்கப்பட்ட ரத்தத்தின் மூலம் இந்த வைரஸ் வகைகள் அதிகமாகப் பரவின. டிஸ்போஸபிள் ஊசிகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட கண்ணாடி ஊசிகளின் மூலமாகவும் இந்த வைரஸ் பரவியது. காது குத்துதல், பச்சை குத்துதல், சலூன்களில் முகச்சவரம் செய்தல் மூலமாகவும் இது பரவக்கூடும். ஆபத்தான சூழ்நிலையில், தரம் உறுதி செய்யப்படாத ரத்த வங்கிகளில் ரத்தம் பெறும்போது, கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ஹெபடைடிஸ் சி வைரஸ் எவ்வாறு கண்டறியப்பட்டது?
இந்த வைரஸ்களை முறியடிப்பதற்கு முதலில் வித்திட்டவர் அமெரிக்க மருத்துவர் பேரி புளூம்பெர்க். அவர்தான் ஹெபடைடிஸ் பி வைரஸைக் கண்டறிந்தார். அவருடைய பிறந்த நாள்தான் ஹெபடைடிஸ் நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதற்குப் பிறகு, 1970-ல் ஹார்வி ஜே. ஆல்ட்டர், ஹெபடைடிஸ் பி அல்லாத ஒன்று ரத்தம் மூலம் பரவுகிறது என்பதைக் கண்டுபிடித்தார். மேலும் அதை ‘நான் ஏ’, ‘நான் பி’ (Non-A Non-B) என்று சொன்னார்.
அதேநேரம் அது எந்த வகை என்பதைக் கண்டுபிடிக்கவில்லை. அது எது என்பதை 1980களில் கண்டுபிடித்தவர் மைக்கேல் ஹாவ்டன். அவர் மிகவும் வித்தியாசமான முறையில், உடலின் நோய் எதிரணுக்களை (ஆன்டி பாடிகளை) ஆராய்ந்து, எதிரிக்கு எதிரி யார் எனும் முறையில், அது ஒரு வைரஸ்தான் என்று கண்டறிந்தார். அது என்ன வைரஸ் என்பதை, அதாவது ஹெபடைடிஸ் சி வைரஸை சார்லஸ் எம். ரைஸ் கண்டறிந்தார். இந்த மூவருக்குமே இந்த ஆண்டு நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.
ஹெபடைடிஸ் சி வைரஸை எப்படிக் கண்டறியலாம்?
இந்த வைரஸைக் கண்டறியும் பரிசோதனை மாஸ்டர் ஹெல்த் செக்கப்பின் அங்கமாக இருக்க வேண்டும். மிகவும் மலிவான விலையில் இந்தப் பரிசோதனையைச் செய்யும் நிலை எவ்வளவு சீக்கிரம் உருவாகிறதோ, அவ்வளவு சீக்கிரம் இந்தக் கொடிய ஹெபடைடிஸ் வைரஸை முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். ஹெபடைடிஸ் பி வைரஸை முழுமையாக வெல்ல முடியாது, நாள்தோறும் ஒரு மாத்திரை சாப்பிடுவதன் மூலம் அதைக் கட்டுப்படுத்த முடியும். ஹெபடைடிஸ் சி வைரஸை 8 முதல் 12 வாரக் கூட்டுச்சிகிச்சையின் மூலம் முற்றிலும் அழித்துவிடலாம்.
ஆன்டிபயாடிக் மருந்துகளின் மூலம் பாக்டீரியாக்களை எளிதில் வெல்வதைப் போன்று, ஒரு பொதுவான ஆன்டி வைரல் மருந்தைக் கண்டுபிடிப்பதன் மூலம் வைரஸ்களை வெல்லும் நிலை எதிர் காலத்தில் ஏற்படச் சாத்தியமுள்ளதா?
அறிவியலின் ஆற்றலை நம்மால் குறைத்து மதிப்பிட முடியாது. இருபது ஆண்டுகளுக்கு முன்னர், கல்லீரலை ஸ்கேன் செய்து பார்ப்பது என்பது கனவிலும் சாத்தியமற்றதாக இருந்தது. இன்றைக்கு அது சாத்தியமாகியுள்ளது. இருந்தாலும், பாக்டீரியாவைப் போன்று, வைரஸை ஒடுக்குவது அவ்வளவு எளிதல்ல. ஹெபடைடிஸ் பி-யைக் கண்டறிந்து, இருபது ஆண்டுகளுக்குப் பின்னரே அதற்கான தடுப்பூசியும் மருந்தும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஹெபடைடிஸ் சி வைரஸின் நிலையும் இதுதான்.
தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படும் காலத்தையாவது குறைக்க முடியுமா?
அதற்கு உலக சுகாதார நிறுவனம் ஒரு வலுவுள்ள அமைப்பாக இருக்க வேண்டும். மருத்துவக் கண்டு பிடிப்புகள் அரசியல் காரணங்கள், வணிக லாபம், சுய அங்கீகாரம் போன்ற காரணிகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். கோவிட்-19 காலத்தில் ஒவ்வொரு நாட்டிலும், பல்வேறு நிறுவனங்களில் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள், இயற்கையைப் போன்று ஒன்றோடொன்று இயைந்த கூட்டு முயற்சியாக இருந்தால், கண்டுபிடிப்பு களுக்கு நாம் எடுத்துக்கொள்ளும் காலம் வெகுவாகக் குறையும். வருங்காலத்தில் இந்த நிலை ஏற்படலாம். எந்த ஒரு தடுப்பூசியும் பரவலான பயன்பாட்டுக்கு வருவதற்குக் குறைந்தது ஆறுமாதங்களாவது ஆகும்.
வைரஸ்களுடன் வாழ்வது இனி புது இயல்பாக மாறுமா?
அப்படித்தான் சொல்ல வேண்டும். கரோனாவுக்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்ட பின்னரும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அதிகக் கூட்டம் கூடும் இடங்களைத் தவிர்ப்பது, கைகளை அடிக்கடி தூய்மைப்படுத்திக்கொள்வது, முகக்கவசம் அணிவது போன்ற வற்றைக் கடைப்பிடிப்பது அவசியம். சுத்தத்தையும் சுகாதாரத்தையும் பராமரிப்பதை நம்முடைய இயல்பாக மாற்றிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். எல்லா நோய்களையும் விலக்கி வைக்க இந்த நடைமுறைகளை முறைப்படி கடைப்பிடித்தாக வேண்டும்.
தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT