Published : 07 Oct 2020 09:21 AM
Last Updated : 07 Oct 2020 09:21 AM

டிங்குவிடம் கேளுங்கள்: நிறம் மாறும் உயிரினங்கள்

அதிகமானவர்கள் விரும்பிக் குடிக்கும் பானம் தேநீரா, காபியா டிங்கு?

- ஜி. இனியா, 4-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

உலகம் முழுவதும் அதிக மக்களால் விரும்பிக் குடிக்கப்படும் பானம் தேநீர்தான். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் காபியை அதிகம் பருகுகிறார்கள். ஆசியாவில் அதிக மக்களால் விரும்பப்படுவது தேநீர்தான். ஒரு நாளைக்குச் சுமார் 6 பில்லியன் கோப்பை தேநீர் குடிக்கப்படுகின்றன.

அவற்றில் நீங்களும் நானும் பருகும் 4 கோப்பை தேநீரும் அடங்கும், இனியா. காபியை மனிதர்கள் பயன்படுத்த ஆரம்பிப்பதற்குச் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தேநீரின் பயன்பாடு வந்துவிட்டது. சுவைக்காக மட்டுமல்ல, காபியோடு ஒப்பிடும்போது தேநீரின் விலை குறைவு என்பதாலும், தேநீர் அதிக அளவில் பருகப்படுகிறது.

இரவு நேரத்தில் கேட்கும் பூச்சிகளின் சத்தம் ஏன் பகல் நேரத்தில் கேட்பதில்லை, டிங்கு?

- பி. ஜெரூசா, 3-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம்.

பெரும்பாலான பூச்சிகள் இரவு நேரத்தில்தான் சுறுசுறுப்பாக இயங்கு கின்றன. குடும்பம் நடத்துவதற்குத்
தங்கள் இணையை அழைப்பதற்காக ரீங்காரம் செய்கின்றன. பகலிலும் சில பூச்சிகள் ரீங்காரம் செய்கின்றன. ஆனால், அதிமான சுற்றுப்புற ஒலி காரணமாக நமக்குக் கேட்பதில்லை, ஜெரூசா.

காந்தியைப் போல் ஆட்டுப்பாலும் வேர்க்கடலையும் சாப்பிட்டால்தான் எளிய உணவா, டிங்கு?

- த. புகழேந்தி, 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

காந்தி காலத்தில் ஆட்டுப்பாலும் வேர்க்கடலையும் எங்கும் கிடைத் திருக்கும். அதனால் அதை எளிய உணவாகப் பயன்படுத்திக்கொண்டார். இப்போது ஆட்டுப்பாலுக்கு எங்கே போவது? நாம் வாழும் பகுதியில் என்ன விளைகிறதோ எதை வாங்க முடிகிறதோ அதைக் கொண்டு சாப்பிடுவதுதான் எளிய உணவு முறை, புகழேந்தி.

தீயசக்திகள் இருக்கின்றனவா? உனக்கு அதில் நம்பிக்கை இருக்கிறதா, டிங்கு?

- வி. ஹேம வர்ஷினி, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பள்ளி, திருச்சி.

திரைப்படங்களிலும் கதைகளிலும்தாம் தீயசக்திகள் இருப்பதாகக் காட்டப்படுகின்றன. நல்லசக்தி, தீயசக்தி என்பது சில மனிதர்களின் நம்பிக்கை. நிரூபிக்க முடியாத ஒன்றை அறிவியல் ஏற்றுக்கொள்வதில்லை. நம்பிக்கை என்பது வேறு, அறிவியல் என்பது வேறு. நம்பிக்கைக்கு எந்தவித வரையறையும் இல்லை, அதை நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், அறிவியலுக்கு வரையறை இருக்கிறது, அதை நிரூபிக்கவும் முடியும். என்னைப் பொருத்தவரை நல்லசக்தி, தீயசக்தி இரண்டுமே இல்லை. இல்லாத ஒன்றை நினைத்து ஏங்குவதோ பயப்படுவதோ தேவையில்லை. நல்லவிதமாகச் சிந்தித்து, நல்ல செயல்களைச் செய்து வாழ்ந்தால் போதும். எந்தத் தீயசக்தியைக் கண்டும் அஞ்ச வேண்டியதில்லை, ஹேம வர்ஷினி!

பச்சோந்தியைப் போல் நிறத்தை மாற்றிக்கொள்ளும் வேறு விலங்கு ஏதாவது உண்டா, டிங்கு?

- ஜி. மஞ்சரி, 10-ம் வகுப்பு, ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

பொதுவாகச் சூழ்நிலைக்கு ஏற்ப நிறத்தை மாற்றிக்கொள்ளும் விலங்கு என்ற பெயரைப் பச்சோந்தி தட்டிச் சென்றுவிட்டது. இன்னும் சில உயிரினங்களும் இப்படித் தங்களின் உடல் நிறத்தை மாற்றிக்கொள்ளும் திறனைப் பெற்றிருக்கின்றன மஞ்சரி. பொன் ஆமை வண்டு, மைமிக் ஆக்டோபஸ், நண்டுச் சிலந்தி, பசிபிக் மரத் தவளை, சில கடல்குதிரைகள், கணவாய்மீன் போன்றவை சூழ்நிலைக்கு ஏற்பத் தங்கள் நிறத்தை மாற்றிக்கொள்ளும் தகவமைப்பைப் பெற்றிருக்கின்றன. இந்த நிறத்தை மாற்றிக்கொள்ளும் பண்பு மூலம் எதிரிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ளவும் தங்களுக்குத் தேவையான இரையைப் பெற்றுக்கொள்ளவும் இவற்றால் முடிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x