Last Updated : 06 Oct, 2020 09:41 AM

 

Published : 06 Oct 2020 09:41 AM
Last Updated : 06 Oct 2020 09:41 AM

ஹம்போல்ட் 250: இயற்கையிடம் கற்கச் சொன்ன அறிவியலாளர்

அறிவியலாளர் என்றதும் நமக்கு என்ன தோன்றும்? ஓர் ஆய்வக அறைக்குள், கையில் வேதிக்குடுவையுடன் இருப்பார். அறிவியல் இவ்வளவு வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும், நமக்கு இப்படியொரு மனச்சித்திரமே தோன்றுகிறது. இருநூறு ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த அறிவியலாளர் ஹம்போல்ட், தன் வாழ்க்கையின் மூலம் சொன்ன செய்தி - ஆய்வாளர்கள் அறையைவிட்டு வெளிவர வேண்டும். பரந்து விரிந்திருக்கும் இயற்கை, அத்தனை அறிவியல் ரகசியங்களையும் நமக்குக் கற்றுத்தர காத்துக்கொண்டிருக்கிறது என்றார். அவர் பிறந்த 250ஆவது ஆண்டு இது.

பணியும் ஆராய்ச்சியும்

அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட் 1769 செப்டம்பர் 14 அன்று பிறந்தார். ஜெர்மன் நாட்டின் பெர்லின் நகரில் இளம் வயது கழிந்தது. சிறுவயதில் இருந்தே ஏட்டுக் கல்வியில் நாட்டமில்லாமல்தான் இருந்தார். அப்போதே, அருகிலிருக்கும் காடுகளில் உள்ள மரங்கள், பூச்சிகளைப் பற்றிக் குறிப்பெடுப்பது அவருடைய வழக்கமாக இருந்தது. 22ஆவது வயதில், தன் தாயின் விருப்பத்துக்கு இணங்க சுரங்கக் கண்காணிப்பாளராகப் பணியில் சேர்ந்தார். அதேநேரம் ஜெர்மனியின் ரைன் நதிக்கரையில் இருக்கும் பசால்ட் (basalt) எரிமலைப்பாறைகள் குறித்தும், ஃபிரெய்பர்க்கில் (Frieberg) உள்ள தாவரங்கள் குறித்தும் நூல்களை எழுதினார்.

ஆய்வுப் பயணங்களும் கண்டுபிடிப்புகளும்

1796 ஆம் ஆண்டு ஹம்போல்ட்டின் தாயார் இறந்தார். அதற்குப் பின் ஒரே மாதத்தில் பணியை ராஜினாமா செய்துவிட்டு, ஆய்வுப் பயணத்துக்கு ஹம்போல்ட் தயாரானர். அன்றைய காலகட்டத்தில் நடந்த போர்களால், அவருடைய பயணத் திட்டம் தடைபட்டு, 1799ஆம் ஆண்டில்தான் தொடங்கியது. ஐந்தாண்டு நீடித்த மாபெரும் பயணமாக அது இருந்தது.

கடல்வழியாகத் தென்னமெரிக்காவின் வெனிசுலாவில் உள்ள குமானா (Cumana) சென்றார். வெப்பநிலை, விண்மீன்கள், கடலில் உள்ள மீன்கள், பறவைகள், தாவரங்கள் என்று அனைத்தைப் பற்றியும் குறிப்பெடுத்தார், மாதிரிகளைச் (Samples) சேகரித்தார்.

பின்பு குமானாவின் கரகாஸ் (Caracas) மலைப்பகுதியை ஆராய்ந்த பின்பு, வேலென்ஷியா ஏரியை (Lake Valencia) அடைந்தார். அப்போது வேலென்ஷியா ஏரியானது வறண்டுபோகத் தொடங்கியிருந்தது. இதன் அடிப்படையில் அங்கே நிலவும் தட்பவெப்பம், நிலப்பகுதி, வேளாண்மை உள்ளிட்ட அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஹம்போல்ட் ஆய்வுசெய்தார். அதன் அடிப்படையில், ‘மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்படும் காலநிலை மாற்றம்’ குறித்து உலகுக்கு முதன்முதலில் ஹம்போல்ட் அறிவித்தார்.

ஹம்போல்ட்டுக்கு எரிமலைகள் மீது அலாதி ஆர்வம் தந்தது. குறிப்பாக நெருப்பைக்கக்காத எரிமலையான சிம்பரோசாவில் (Chimboroza) ஏறினார். எவரெஸ்ட்டின் உயரம் குறித்து (8,848 மீ) அப்போது அவர் அறியாமல் இருந்ததால், 6,400 மீட்டர் உயரம் கொண்ட சிம்பரோசாதான் உயரமான மலை என்று கருதினர். 5,920 மீட்டர்வரை ஏறினார். அன்றைய காலகட்டத்தில் அது வேறு யாரும் அடைந்திராத உயரம்.

சிம்பரோசா மலை மீதிருந்தபோதுதான் உயிர்கள் அனைத்தும் ஒன்றோடொன்று வலைப்பின்னலாகத் தொடர்புகொண்டிருக்கின்றன (web of life) என்பதை அவர் கண்டறிந்தார். சிம்பரோசா மலையில் ஏறியபோது வெப்பநிலை, அழுத்தம், தாவரம், பாறைகள் என்று அனைத்தைப் பற்றியும் குறிப்பெடுத்து, பின்னர் அவற்றின் அடிப்படையில் 'Naturgemalde' என்னும் அறிவியல் படம் ஒன்றை வரைந்தார். இப்படியாக இயற்கையைப் பற்றி ஆய்வுசெய்யும் முறையை உலகுக்கு உணர்த்தியவர் ஹம்போல்ட்.

மெக்சிகோ, கியூபா ஆகிய நாடுகளில் ஆய்வுசெய்த பின்னர், வட அமெரிக்காவின் பிலடெல்ஃபியா சென்றடைந்தார் (1804). அங்கிருந்த அடிமைச் சந்தையை, இயற்கைக்கு முற்றிலும் எதிரானது என்று அடையாளப்படுத்தினார்.

அறிவுப் புதையல்

ஆய்வுப்பயணத்தில் தான் கண்டறிந்தவற்றை ஹம்போல்ட் நூல்களாகத் தொகுத்தார். 'Essay on the Geography of Plants' என்னும் தலைப்பில் வெளிவந்த நூலில், Naturegemalde என்னும் சிறப்புவாய்ந்த வரைபடம் இடம்பெற்றது. அடுத்ததாக அவர் தொகுத்த 'Views of Nature', 11மொழிகளில் வெளியானது. இவருடைய 'Personal Narrative' என்னும் நூலை வாசித்தபின்புதான், டார்வின் தன்னுடைய மருத்துவப் படிப்பை விட்டுவிட்டு ஆய்வுப் பயணத்தைத் தொடங்கினார். ஹம்போல்ட்டின் மிக முக்கியமான நூல் தொகுப்பு நான்கு பகுதிகளைக் கொண்ட காஸ்மாஸ் 'Cosmos'. அறிவியலாளர்கள் மட்டுமல்லாது மக்களும் படிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்டது இது. ஐந்தாம் பகுதியைத் தொகுத்துக்கொண்டிருந்தபோது வயது முதிர்வால் 89 வயதில் காலமானார்.

ஹம்போல்ட்டின் நூறாம் பிறந்தநாளை (1869) உலகம் கோலாகலமாகக் கொண்டாடியது. ஹம்போல்ட்டும் பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் போனபார்ட்டும் ஒரே ஆண்டில் பிறந்தவர்கள். அந்தக் காலத்தில் இருவரும் மக்களிடையே ஒரே அளவு புகழைப் பெற்றிருந்தார்கள் என்பதுதான் இதில் குறிப்பிடத்தக்கது!

கட்டுரையாளர், இஸ்ரேல் டெக்னியான் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் கட்டுரையாளர் தொடர்புக்கு: hemazephyrs@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x