Published : 03 Oct 2020 09:39 AM
Last Updated : 03 Oct 2020 09:39 AM

கரோனா வைரஸும் காடழிப்பும்: விடை தெரிந்தும் தீர்வு காணப்படாத புதிர்

சரியாக 112 ஆண்டுகளுக்கு முன் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பரவிய ஸ்பானியக் காய்ச்சல் எனும் நோய்த்தொற்று உலகை ஆட்டிப்படைத்துள்ளது. இந்திய விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்ததற்கு, இந்த நோய்ப்பரவல் ஏற்படுத்திய தாக்கமும் ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அதற்குப் பிந்தைய ஆண்டுகளில் அதே வீரியத்துடன் வேறு எந்த நோயும் உலக அளவில் பரவவில்லை.

எய்ட்ஸ், எபோலா போன்றவை உலகளாவிய நோய்த்தொற்றாக மாறவில்லை. அந்த வகையில் இந்த ஆண்டின் தொடக்கம் முதல் உலகைச் சிறிது சிறிதாக முடக்கிவந்துள்ள நாவல் கரோனா வைரஸே, ஸ்பானியக் காய்ச்சலுக்குப் பிந்தைய மிகப் பெரிய நோய்த்தொற்றாகக் கருதப்படுகிறது.

கரோனாவின் தோற்றுவாய் எது?

இந்த வைரஸ் முதலில் எங்கிருந்து வந்திருக்கும், அதன் தோற்றுவாய் என்ன? வூகான் நகரத்தில் பெரும் இறைச்சிச் சந்தை உண்டு. அங்கு வளர்ப்புக் கால்நடை இறைச்சி மட்டு மில்லாமல்,காட்டுயிர் இறைச்சியும் விற்கப்பட்டது. காட்டுயிர்கள் இறைச்சியாகவும், பிடிக்கப்பட்டு கூண்டுகளில் அடைக்கப்பட்டு உயிருடனும் விற்கப்பட்டுள்ளன. வளர்ப்புக் கால்நடைகள், உயிருள்ள காட்டுயிர்கள் ஆகியற்றை அருகருகே நெருக்கடியாக அடைத்துவைப்பது அங்கே இயல்பு.

இந்தப் பின்னணியில் காட்டுயிர்களுக்கு ஏற்பட்ட உளவியல் நெருக்கடி, சுகாதாரமற்ற பராமரிப்பு ஆகியவற்றால் அவற்றின் உடலிலிருந்து சிதறுப்பரவல் மூலமாக (Spillover) வளர்ப்புக் கால்நடைகளுக்கு நாவல் கரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இப்படி அந்தச் சந்தைக்கு வந்த காட்டுயிர் அலங்கு (Anteater-எறும்புத்தின்னி), மரநாய் (Civet) ஆகியவற்றில் ஒன்றாக இருக்கலாம். இந்தக் காட்டுயிர்களுக்கு, காட்டு வௌவால்கள் மூலம் வைரஸ் பரவி யிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இவை எல்லாமே கருதுகோள்கள் தான். நாவல் கரோனா வைரஸ் பற்றிக் கடந்த ஒன்பது மாதங்களாக மட்டுமே நமக்குத் தெரியும். அதனால், இந்த வைரஸ் திட்டவட்டமாக எங்கிருந்து தோன்றியது என்று இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. வௌவால்களின் உடலில் உள்ள சார்ஸ் நோய்க்குக் காரணமான கரோனா வைரஸ் வகையை, நாவல் கரோனா வைரஸ் வகையும் 76 சதவீதம் ஒத்திருப்பதால், வௌவால்களே நாவல் கரோனா வைரஸ் தேக்கியாக (Virus Carrier) இருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது.

எங்கே தவறவிடுகிறோம்?

மேற்கண்ட காரணங்களால்தாம் நாவல் கரோனா வைரஸ் பரவியது என்றாலும், நாவல் கரோனா வைரஸுக்கும் ஒட்டுமொத்தச் சுற்றுச் சூழலுக்கும் இடையிலான தொடர்பு இவற்றுடன் முடிந்துபோய்விட்டதா? நிச்சயமாக இல்லை. இதெல்லாம் நாவல் கரோனா வைரஸின் அடிப்படை பற்றியது மட்டுமே. அதாவது பெரும் பனிப்பாறையின் சிறு நுனியைத்தான் பார்த்தி ருக்கிறோம். நிஜக் கதை இனிமேல்தான் தொடங்குகிறது. அது பனிப்பாறையைப் போன்றே ஆழமானது.

“காட்டுயிர்கள் வாழும் சுற்றுச் சூழலில் தொந்தரவு ஏற்பட்டதற்குக் காரணமே மனிதர்களான நாம்தான். இதுவரை சென்றிராத சூழலியல் தொகுதிகளுக்குள் எல்லாம் ஆழமாக நாம் ஊடுருவிவிட்டோம்” என்கிறார் அமெரிக்காவின் மூத்த வைரஸ் ஆராய்ச்சியாளர் டென்னிஸ் காரெல். மஞ்சள் காய்ச்சல், ஸிகா காய்ச்சல், டெங்கு, சிக்குன் குன்யா, எபோலா, சார்ஸ், நிபா வைரஸ், கியாசனூர் காட்டு நோய் (கர்நாடகம், 1957), மெர்ஸ்-கோவ், ரேபிஸ், ராக்கி மலை புள்ளிக் காய்ச்சல், தூக்க நோய், ஹன்டா வைரஸ், யானைக்கால் நோய், மலேரியா... இந்த நோய்கள் அனைத்தும் தோன்றியதற்கு ஒற்றைக் காரணம் காடழிப்புதான் என்கிறார்கள் மருத்துவர்களும் பிரபல அறிவியல் எழுத்தாளர்களுமான கல்பிஷ் ரத்னா.

மேற்கண்ட நோய்களில் பெரும் பாலானவை கடந்த நூற்றாண்டில் மனிதர்களை ஆட்டிப்படைத்தவை. இந்த நோய்களுக்கான அடிப்படைக் காரணம் குறித்தும், நூற்றாண்டின் முதல் 20 ஆண்டுகளில் பரவிய மிக மோசமான நோய்த்தொற்றுகள் குறித்தும் ஆராய்ச்சிகள் நடைபெற்றிருக் கின்றன. சார்ஸ் (2002), மெர்ஸ் (2012), எபோலா (2013), ஸிகா (2015) போன்ற நோய்கள் சமீப காலத்தில் அடுத்தடுத்துப் பரவியிருக்கும் நிலையில், வைரஸ் ஆராய்ச்சியாளர்கள், அறிவிய லாளர்கள் அடுத்துவரக்கூடிய பெருந்தொற்று குறித்து எச்சரித்துக் கொண்டேதான் இருந்தார்கள். ஆனால், ஆட்சியாளர்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் தனியார் அறிவியல் நிறுவனங்களும் இதில் போதிய கவனம் செலுத்தினவா என்பது பெருங்கேள்வி.

மற்றொருபுறம் காடுகளை, இயற்கை வளங்களைத் தொந்தரவு செய்யாமல் இருப்பது குறித்து சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்களும் இயற்கை செயற்பாட்டாளர்களும் வலியுறுத்தி வந்ததை ஆட்சியாளர்களும் அறிவியல் துறையினரும் செவிமடுக்கவில்லையோ என்ற கேள்வியும் எழுகிறது. பொதுவாகவே சுற்றுச்சூழல் அக்கறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவை அறிவியலுக்கும் வளர்ச்சிக்கும் தடைக்கல்லாகவே முன்னிறுத்தப்படு கின்றன. இவ்வளவு நோய்களை மனித குலம் எதிர்கொண்ட பிறகும், காடழிப்பைத் தடுப்பதில் நம்முடைய அக்கறை திரும்பாமல் இருப்பது, பெரும் நோய்த்தொற்றுகளின் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கிற தன்மையையே காட்டுகிறது.

எச்சரிக்கை சமிக்ஞை

நவீன அறிவியல், அதன் விளை வாகத் தொழிற்புரட்சி தொடங்கும்வரை, மனித குலம் காடுகளையோ இயற்கை வளங்களையோ கட்டுமீறி அழிக்கும் தன்மையைக் கொண்டிருக்கவில்லை. ஐரோப்பிய நாடுகளில் தொழிற்புரட்சி தொடங்கியபின் முதலாளித்துவமும் அந்த நாடுகளை நிர்வகித்துவந்த அரசுகளும் லாபம் மீது பெருவெறி கொள்ளத் தொடங்கின. பெரிய பெரிய இயந்திரங்கள், தொழிற்சாலை களுக்குப் பெருமளவு மூலப்பொருள் தேவைப்பட்டது. அதற்காக இயற்கை வளமும் மனித வளமும் நிறைந்திருந்த ஆப்பிரிக்க, ஆசிய, தென்னமெரிக்க நாடுகளைக் காலனி ஆட்சியாளர்கள் அடிமைப்படுத்தத் தொடங்கினார்கள்.

தொழிற்புரட்சியின் தொடக்கக் காலத்தில் அழிக்கப்படத் தொடங்கிய காடுகள், இன்றுவரை இடைவெளி இல்லாமல் அழிக்கப்பட்டுவருகின்றன. அது மட்டுமல்லாமல், இயற்கை வளம் நிறைந்த வளரும் நாடுகளில் காடுகளைக் கிழித்துக்கொண்டு சாலை, பாலம், ரயில் பாதை போன்றவை அமைக்கப்படுகின்றன. காடுகளுக்குள் உறங்கிக்கிடக்கும் மரங்கள், கனிமங்கள் பெருமுதலாளிகள், நிறுவனங்களின் அடிப்படை மூலப்பொருள்களாக இருக்கின்றன. இப்படிக் காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றிய கவலை நம்மில் பெரும்பாலோருக்கு இல்லை. அதன்மூலம் கிடைக்கும் மூலதனமற்ற லாபத்தில் மட்டுமே அரசும் நிறுவனங்களும் கவனமாக இருக்கின்றன.

அதேநேரம் காடுகள் இப்படி அழிக்கப்படுவதன் மூலம், காட்டுயிர்களை மனிதர்கள் நெருங்கிச் சென்றுகொண்டே இருக்கிறார்கள் அல்லது வேறு வழியற்று ஊர்களை நோக்கிக் காட்டுயிர்கள் நகர நாம் வழிவகுக்கிறோம். உலகில் இதுவரை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய பெரும்பாலான கொள்ளைநோய், பெருந்தொற்றுகளின் மூலகாரணம் காடுகளை மனிதர்கள் இடைவிடாது சிதைத்துக்கொண்டே இருப்பதுதான். காடழிப்பு - உயிரினங்களைத் தொந்தரவுக்கு உள்ளாக்குவதற்கும் மனிதர்களிடையே பெருந்தொற்று பரவுவதற்கும் இடையே நேரடித் தொடர்பு இருக்கிறது.

அமேசான் அழிக்கப்படுவதன் தொடர்ச்சியாகவே ஸிகா வைரஸைப் பரப்பும் ஏடிஸ் எஜிப்தி கொசுக்களின் பரவல் அதிகரித்தது. அந்த வைரஸ் நோய் பிரேசிலில் கருவிலுள்ள குழந்தைகளின் மூளை வளர்ச்சியைத் தடுத்தது நமக்குத் தெரியாத செய்தியல்ல. ஆப்பிரிக்காவில் காடுகள் அழிக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவே வௌவால்களிடம் இருந்த எபோலா வைரஸ் மக்களைப் பலிகொள்ளத் தொடங்கியது. இன்றைக்கு நாவல் கரோனா வைரஸிடம் மண்டியிட்டுக் கிடக்கிறோம். சார்ஸ், மெர்ஸ் போன்ற கரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த பிற வைரஸ் வகைகள் பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொற்றத் தொடங்கியபோதே அறிவியல் உலகம் விழித்துக்கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் காடுகளை அழிப்பதை, காட்டுயிர்களை நெருங்கிச் செல்வதையாவது குறைத்திருக்க வேண்டும்.

இயற்கை சமமா?

“இயற்கையை அழிக்கும் மனிதச் செயல்பாடுகள், காட்டுயிர் வாழிடங்களில் மனித ஊடுருவல் போன்றவையே புதுப்புது நோய்த் தொற்றுப் பரவலுக்கு அடிப்படைக் காரணம். காடுகளைத் தொந்தரவு செய்யும் மனிதச் செயல்பாடுகளை நிறுத்தினால் மட்டுமே, இதுபோன்ற புதிய கிருமிகள் எதிர்காலத்தில் தொற்றாமல் இருப்பதை உறுதிசெய்ய முடியும்” என்கிறார், வௌவால்களிடம் வைரஸ் குறித்து ஆராய்ந்துவரும் கனடாவின் மேக்மாஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளரான அரின்ஜெய் பானர்ஜி.

காடுகள், இயற்கை வாழிடங்கள், அங்கு வாழும் தாவரங்கள், உயிரினங்கள், புழு பூச்சிகள், நுண்ணுயிரிகள் ஆகிய அனைத்தும் அடங்கியதுதான் ஒரு சூழலியல் தொகுதி. அந்த சூழலியல் தொகுதியில் வாழும் பல்லுயிர்கள் தங்களுக்குள் யுகம் யுகமாக ஊடாடி ஒரு சமநிலையையும் இணக்கத்தையும் கண்டடைகின்றன. இதன் நீட்சியாக, ‘ஒட்டுமொத்த உலகும் ஓர் உயிர்’ என முன்மொழியும் கையா கொள்கையை சூழலியலாளர் ஜேம்ஸ் லவ்லாக் பல்லாண்டுகளுக்கு முன்பே முன்வைத்துவிட்டார்.

இந்தப் பின்னணியில் நுண்ணுயிர்கள் (பாக்டீரியா, வைரஸ்) திடீர் மாற்றம் (Mutation) அடைவதும் அவை வாழும் பல்லுயிரியத் தொகுதியுடைய இயல்பே. இந்த நிலையில் வைரஸ் வகைகள் காட்டுயிர்களின் உடலிலிருந்தாலும்கூட, அவற்றை நேரடியாகப் பாதிப்பதில்லை. மனிதன் என்ற வெளிக்காரணி, காடழிப்பு என்ற அழிப்புச் செயல்பாடு நடைபெறும் போதே பிரச்சினை வெடிக்கிறது. காடுகள், அங்கு வாழும் உயிரினங்களை நாம் சமமாக நடத்தாதவரை மேற்கண்ட புதிருக்கான தீர்வு கிடைக்கும் எனத் தோன்றவில்லை.

இந்த இடத்தில் புகழ்பெற்ற செவ்விந்தியத் தலைவர் சியாட்டிலினுடைய உரையின் ஒரு பகுதியைக் கூறுவது பொருத்தமாக இருக்கும்: எப்படி நம் உடலின் அனைத்துப் பகுதிகளையும் ரத்தம் இணைக்கிறதோ, அதுபோல் உலகில் உள்ள அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டுள்ளன. வாழ்க்கை என்ற வலையை நாம் நெய்யவில்லை. அந்தப் பெருவலையின் ஒரு சிறு பகுதி மட்டுமே நாம். அந்த வலைக்கு நாம் என்னவெல்லாம் செய்கிறோமோ, அதெல்லாமே நமக்கு நாமே செய்துகொள்பவைதான்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

அக். 2 முதல் அக். 8 வரை தேசியக் காட்டுயிர் வாரம்

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x