Published : 03 Oct 2020 09:22 AM
Last Updated : 03 Oct 2020 09:22 AM

கரோனா: வேலூர் சி.எம்.சி.யின் முன்னுதாரண முயற்சிகள்

இந்தியாவில் கரோனா தொற்றுக்குச் சிகிச்சை அளிப்பதில் 120 ஆண்டுகள் பழமையான வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (சி.எம்.சி.) முன்னோடியாக விளங்கி வருகிறது. இந்தப் பணிகளுக்காகச் சமீபத்தில் இரண்டு விருதுகளை சி.எம்.சி. பெற்றுள்ளது.

இந்தியச் சுகாதார அமைப்புடன் இணைந்த சி.ஏ.எச்.ஓ (CAHO- Committee of Accreditation Of Health Care Organisation) என்ற அமைப்பின் சார்பில் கரோனா தொற்றுக்குச் சிறப்பான சிகிச்சை அளித்துவருவதில் சி.எம்.சி.க்கு முதலிடத்துக்கான விருதும், ஃபிக்கி (FCCI - Federation Of Indian Chambers Of Commerce And Industry) விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதைப் பெருமையுடன் பகிர்ந்து கொண்ட சி.எம்.சி. மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பிரசாத் மேத்யூஸ், ‘‘இந்தியா, இலங்கை, துபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்து C.A.H.O. விருதுக்கான போட்டியில் 600-க்கும் அதிகமான படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் பிரிவில் சி.எம்.சி.-க்கு விருது கிடைத்துள்ளது. கடந்த ஜனவரி மாதமே கரோனாவை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டோம். மார்ச் மாதத்தில் 150 படுக்கை வசதிகளுடன் கரோனாவுக்கான சிகிச்சை வார்டைத் தொடங்கி, தற்போது 924 படுக்கைகள் கொண்டதாக உயர்த்தியிருக்கிறோம்’’ என்கிறார்.

வேலூர் மாவட்டத்தில் அதிக கரோனா நோயாளிகளைக் கையாளும் மருத்துவமனையாக சி.எம்.சி. செயல்படுகிறது. தற்போதுவரை 27 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை முடிவுகள் சி.எம்.சியில் வெளியாகியுள்ளன.

சிறப்பு ஏற்பாடுகள்

கரோனா சிகிச்சை வார்டுகள் தொடங்கி மற்ற வார்டுகளை நிர்வகிக்கத் தேவையான உள்கட்டமைப்பு வசதி களை மாற்றியமைத்தாக கூறும் நோய்த்தொற்றுத் தடுப்பு அதிகாரி டாக்டர் மாலதி முருகேசன், “பிற வார்டுகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய கடமையும் எங்களுக்கு இருந்தது. கரோனா பரிசோதனைக்கு வருபவர்களுக்காகத் தனிப் பிரிவை ஏற்படுத்தியதுடன் அவசர சிகிச்சை வார்டில் இரண்டு தனித்தனி பாதை களை ஏற்படுத்தினோம்” என்கிறார்.

கரோனா தொற்றிலிருந்து மீள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தி அவசி யம் என்பதால் அதற்கென உணவின் தனி கனவம் செலுத்துகிறார்கள். “கரோனா பாதித்தவர்களுக்குத் தானியம், பயறு வகைகள், காய்கறி, பழங்கள், பால், முட்டை எனச் சரிவிகித உணவை வழங்குகிறோம். சைவம், அசைவ உணவுடன் நாள்தோறும் இஞ்சி, மஞ்சள், மிளகு, புதினா, எலுமிச்சை, வெல்லம், தனியா கலந்த மூலிகை மசாலா கஷாயத்தைக் கொடுக்கிறோம்” என்கிறார் ஊட்டச்சத்து - உணவுத் துறை அலுவலர் மணிமேகலை.

கையாளும் பயிற்சி

“தமிழக அரசு நியமித்துள்ள மருத்துவ வல்லுநர் குழுவில் சி.எம்.சி.மருத்துவர்கள் பங்கெடுத்து ஆலோசனை வழங்கிவருகிறார்கள். தேசிய அளவிலான கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மருத்துவர்கள் பிரியா ஆபிரகாம், ககன்தீப் காங்க், சி.எம்.சி. முன்னாள் முதல்வர் ஜெயபிரகாஷ் முளியல், ஜேக்கப் ஜான், ஓ.சி.ஆபிரகாம், ஜெயசீலன் உள்ளிட்டோர் பங்காற்றிவருகின்றனர். அமெரிக்காவில் பணியாற்றிவரும் சி.எம்.சி. முன்னாள் மாணவர்கள் அங்கித் பரத், பிரியா சம்பத், வின்சென்ட் ராஜ்குமார் போன்றவர்களின் ஆலோசனைகளையும் பெற்றுச் செயல்படுகிறோம்.

கரோனா முன்களப் பணியாளர்களான 5,000 மருத்துவர்கள், செவிலியர்களுக்கு டாடா அறக்கட்டளை மூலமாக சி.எம்.சி.பயிற்சி வழங்கியுள்ளது. மேலும், விரைவில் 10,000 ஆஷா, அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு அசிம் பிரேம் ஜிஅறக்கட்டளை மூலமாக சி.எம்.சி.தொலைநிலை கல்வி அமைப்பு இணையவழிப் பயிற்சி வழங்கவுள்ளது’’ என்கிறார் மருத்துமவனையின் இயக்குநர் டாக்டர் ஜே.வி.பீட்டர்.

படங்கள்: வி.எம். மணிநாதன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x