Published : 01 Oct 2020 09:45 AM
Last Updated : 01 Oct 2020 09:45 AM

அகத்தைத் தேடி 35: தையல் எடுத்த துணி தையலுக்கும் ஆகாதே!

தாமிரபரணியில் சிந்துப் பூந்துறை, குட்டந்துறை, திருமஞ்சனத் துறை என்று பல துறைகள் இருக்கின்றன. சேர்மன் துறை என்றும் ஒரு துறை இருக்கிறது. இந்தத் துறையில் நீராடி எழுந்தால் கர்ம வினை தீருவதாக ஒரு நம்பிக்கை. மனிதன் தெய்வமாகலாம் என்பதை நிரூபித்தவர் சேர்மன் சுவாமிகள்.

பனைகளும் உடை மரங்களும் சூழ்ந்த பகுதியில் அருஞ்சுனை காத்த ஐயனார் கோவில் ஒன்று இருக்கிறது. அந்தப் பகுதியைச் சேர்ந்த குமாரசாமி நாடார் மிகப் பெரும் செல்வந்தர். சாதுக்கள், பரதேசிகள், ஆண்டிகள் ஆகியோரை ஆதரிப்பவர். அப்படி வந்த ஆண்டிகளில் ஒருவர் மனம் மகிழ்ந்து, உங்கள் உள்ளத்திலே ஒரு ஒளியேற்றிவைக்கிறேன். மக்களை நச்சுப் பூச்சிகள் எவை கடித்தாலும், இந்த ஒளி உங்கள் கண்வழி வெளிப்பட்டு உங்கள் பார்வையிலேயே அந்த நச்சு முறியும். இந்தச் சக்தி உங்கள் பரம்பரைக்கே வருமாறு செய்துவிட்டேன் என்று சொல்லிப் போனார். அந்தப் பரம்பரையில் வந்த ராமசாமி நாடார் - சிவன் அணைந்த அம்மாளுக்கு அருந்தவப் புதல்வராகப் பிறந்த அருணாசலம்தான் பின்னர் சேர்மன் சுவாமிகளாக ஆனார்.

மேலப் புதுக்குடியிலிருந்து ஏழுகல் தொலைவிலிருந்த ஏட்டுப் பள்ளியில் பாடம் பயிற்றுவித்த அண்ணாவியிடம் படிப்பு தொடக்கம். தொடக்கக் கல்வி தொடங்கிய காலத்திலேயே அன்னை மறைந்தார். ஏரலில் வசித்த சித்தப்பா வீட்டில் தங்கிப் படித்து வந்தவர் மனத்திலே, அன்னையின் பிரிவு ஏதோ ஒரு வெறுமையை விதைத்தது. வெறித்த பார்வையுடன் அருணாசலம் நடந்து திரிந்தார்.

கடவுளின் நிழல்

அருணாசலம் பயின்ற பள்ளியில் மர்காஷிஸ் என்ற பாதிரியாரிடம் கிறிஸ்தவ வேதத்தைக் கற்று, அதன் சாரத்தை ஏற்றார். ஏரலில் வாழ்ந்த முகமதிய நண்பர்களின் தொடர்பால் இஸ்லாமிய மார்க்க போதனைகளையும் கற்றுத் தேர்ந்தார். இந்து சமய நூற்களையும் ஐயம் திரிபறக் கற்று ஆத்ம விசாரணையில் மனம் திளைத்தார்.

ஆற்றங்கரையோரம், ஆலமர நிழலில் தன்னைத் தேடி தன்னுள் கரைந்து வீற்றிருந்த அவரை, ஊரார் கண்டனர். வாலிபன் மீது படிந்த குளிர்ச்சி, கடவுளின் நிழலோவென மயங்கினர்.

எங்கு சென்றாலும் இளைஞர் கூட்டம் ஒன்று, அவரைப் பின்தொடர்ந்தது. சிறுவர்களும் விதிவிலக்கல்ல. ஆடு மாடு மேய்க்கும் சிறுவர்களுக்குக் கதை சொல்வது, நதிக்கரையோரம் மரம் நடுவது, உயிரினங்களைக் காப்பது ஆகிய வையே அவருக்குப் பிடித்தமான காரியங்கள். வீட்டிலும் தனி அறை, மோனம், மனத்தில் சுழலும் மந்திர மொழிகள், ஏகாந்த நாட்டம், பிரம்மச்சரியம், பிதுரார்ஜிதமாக வந்துசேர்ந்த ‘பார்வை வைத்திய வித்தை’. வார்த்தை குறைந்தது. மெளனம் மிகுந்தது.

அருணாசலத்தின் உள்ளே நடப்பதை வீட்டார் அறியவில்லை. பல ஊர்களில் பரவிக் கிடந்த நிலபுலன்களைச் சுற்றிப்பார்க்க விலை உயர்ந்த வெள்ளைக் குதிரை ஒன்றை வாங்கித் தந்தனர்.

ஆட்சிப் பொறுப்பு

தும்பைப்பூ வேட்டி, முழுக்கை கோட்டு, தலைப்பாகை, குதிரை மேல் அருணாசலம் செல்கின்ற காட்சி இளவரசன் ஒருவன் நகர்வலம் புறப்பட்டதுபோல் தோன்றும். நாடாண்ட ஆங்கிலேய ஆட்சியர்களுக்கும் அருணாசலத்தின் பெருமை எட்டியது. ஆங்கிலப் பேச்சு, தலைமைப் பண்பு போன்ற வற்றால் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அவரை கிராம முன்சீப்பாக நியமித்தனர். வரிவசூல் மட்டுமன்றி வழக்குகளைத் தீர்த்துவைத்து, நீதி வழங்கும் பொறுப்பும் அருணாசலத்துக்கு வழங்கப்பட்டது.

அவருக்கு முன்னால் சாதி இல்லை, மதம் இல்லை, சமயம் இல்லை. பிறப்பால் உயர்ந்தோர், தாழ்ந்தோர் இல்லை. அவர் நீதி வழங்கிய திறன் கண்டு வெள்ளையரே வியந்தனர்.

ஏழை எளியோருக்கு தன் செல்வத்தை வாரி வழங்கினார் அருணாசலம். இரு பத்தைந்து வயதே ஆன அருணாசலத்தை ஆங்கிலேய அரசு ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஆக நியமித்தது. இதற்குப்பின் மக்கள் அவரை சேர்மன் என்றே குறிப்பிடத் தொடங்கினர்.

அகம், புறம் மறைந்தது

அகத்திலும், இகத்திலும் அவர் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருந்தன. மனம் தவத்தை நாடினாலும் மக்கள் பணியை சிரமேற்கொண்டார் சேர்மன் அருணாசலம். அவரது பொது வாழ்க்கை விரிந்தது. அகம், புறம் என்ற பேதம் ஒழிந்தது.

இளைஞரான சேர்மன் நாள்தோறும் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு இறை வழிபாட்டுக்குச் செல்வது வழக்கம். ஒரு நாள் காலை ஆற்றில் தனது வேட்டியை கல்லில் துவைத்துவைத்துவிட்டு, துண்டைக் கட்டிக்கொண்டு குளித்துக்கொண்டிருந்தார்.

சற்றுத் தள்ளித் தண்ணீர் எடுக்கவந்த பெண்கள் அருணாசலத்தை கேலிசெய்ய எண்ணினர். அவர்களில் குறும்புக்காரப் பெண் ஒருத்தி, துவைத்துவைத்த வேட்டியை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாள். கரையேற முனைந்த சுவாமிகள் வேட்டி யைக் காணாது திகைத்தார். ஆனால், சற்றும் சினமின்றி புன்முறுவலுடன் எங்கோ பார்த்தார். அவ்வழியே வேட்டி விற்பவர் ஒருவர் வந்தார். சுவாமிகள் எப்போதும் உடுத்தும் கரை இல்லாத வேட்டி, அவரிடம் இருந்தது. அதை உடுத்திக்கொண்டு தம்மைக் கண்டு சிரித்த பெண்களை நோக்கி ‘தையல் எடுத்த துணி தையலுக்கும் ஆகாதே’ என்று கூறிச் சென்றார் சேர்மன் சுவாமிகள். சேர்மனின் வேட்டியை வீடு சென்று பிரித்துப் பார்த்தபோது, தைக்க இடமின்றி அது சுக்கலாகக் கிழிந்திருந்ததாம்.

மகனுக்குத் திருமணம் செய்துவைக்க சேர்மனின் பெற்றோர் முயன்றனர். இது சுட்ட மண், எதனுடனும் ஒட்டாது. இப்படியே என்னை 28 வயதுவரை விட்டுவிடுங்கள். அதற்குப் பிறகு நானிருந்தால் பேசலாம் என்று கூறிவிட்டார்.

அவர் சொன்னபடியே ஆயிற்று. 28 வயதிலேயே இறைவனடி சேர்வதற்கு அழைப்பு வந்துவிட்டதாக, தானே நாளும் குறித்தார். ஊரே கூடிவிட்டது. அன்று அமாவாசை நாள். சேர்மன் வழக்கம்போல் எழுந்தார், குளித்தார், அலுவலகம் சென்றார். கோப்புகளைப் பார்வையிட்டார். நகர சுத்தித் தொழிலாளர் ஊதிய உயர்வு பற்றிய கோப்பில், அவர் கையெழுத்திட்டதே கடைசிக் கோப்பு.

முற்பகலில் அவர் உடலில் சில மாற்றங்கள். அறைக்குள் படுத்தார். தியானத்தில் மூழ்கினார். அவர் குறித்தபடியே உச்சிப் பொழுதில் பகல் 12 மணிக்கு பரம்பொருளுடன் கலந்துவிட்டார்.

சேர்மனுக்காக கட்டிய சமாதி, கோவில் ஆயிற்று. கோவில் வளாக மண் எடுத்துக் குழைத்து பூசி நோயிலிருந்து குணம் பெற்றோர் ஏராளம்.

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : thanjavurkavirayar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x