Published : 27 Sep 2020 08:22 AM
Last Updated : 27 Sep 2020 08:22 AM

பக்கத்து வீட்டில் கரோனா வந்தால்...

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இல்லை என்கிற அறிவிப்பு வெளியானதும் ஒரு பக்கம் ஆசுவாசமாகவும் மறுபக்கம் மக்களின் பொறுப்பற்ற தன்மையால் என்னவெல்லாம் நேருமோ என்று பதற்றமாகவும் இருந்தது.

அத்தியாவசியத் தேவைகளுக்கோ பணி நிமித்தமாகவோ வெளியே சென்று வருகிறவர்களைப் பற்றி எந்தப் புகாரும் சொல்ல முடியாது. ஆனால், வீட்டுக்குள் இருப்பதால் சலிப்பாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு பொழுதைப்போக்கவென்று வெளியே சுற்றித்திரிகிறவர்களை நினைத்தால் கோபம்தான் வருகிறது. அதுவும் முகக்கவசம்கூட இல்லாமல் வெளியே செல்கிறவர்களைப் பார்த்தால் கோபம் உச்சந்தலைக்கு ஏறுகிறது.

முகக்கவசமே ஆயுதம்

முகக்கவசம் அணிவது நமக்கு மட்டுமல்ல; நம்மைச் சுற்றியிருக்கிற வர்களையும் கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்பதை, இதற்குமேலும் எப்படிச் சொல்லிப் புரியவைப்பதென்றே தெரியவில்லை.

கரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்கத் தொடங்கியதுமே மருத்து வர்கள் அறிவுறுத்திய பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் கூடுமானவரை நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம். புதிய இயல்புநிலைக்கு நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர முடிகிறது.

ஊரடங்குத் தளர்வால் என் கணவர் வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டார். வீட்டு வேலைகளில் உதவுகிற அக்காவும் வேலைக்கு வரத் தொடங்கிவிட்டார். ஆனால், நாங்கள் அனைவருமே முன்பிருந்த எச்சரிக்கை உணர்வுடன்தான் இப்போதும் இருக்கிறோம். என் கணவர் வேலை முடிந்து வீடு திரும்பியதும் நேராகக் குளியலறைக்குத்தான் செல்வார். குளித்துவிட்டு, அவர் அணிந்திருந்த ஆடைகளை அவரே துவைத்தும் விடுவார். வீட்டு வேலைக்கு வரும் அக்கா, வீட்டுக்குள் நுழைந்ததுமே கை, கால், முகத்தை சோப்பு போட்டுக் கழுவிய பிறகே அடுக்களைக்குள் செல்வார். நானும் என் மகளும் குப்பையைக் கொட்ட வெளியே செல்லும்போதும் முகக்கவசம் அணிகிறோம்.

அந்த இரண்டு நாள்கள்

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு நாள் எங்கள் தெருவின் முனையில் சில வீடுகளைச் சுற்றி பிளீச்சிங் பவுடர் தூவியிருப்பதைப் பார்த்தேன். பரிசோதனை முகாம் அமைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருந்தன. ஒருவேளை அந்த வீடுகளில் யாருக்காவது கரோனா இருக்குமோ என்ற சந்தேகத்தை, அடுத்த இரண்டு மணி நேரத்தில் வந்த அழைப்பு உறுதிசெய்தது. தெருமுனையில் இருக்கும் வீட்டைச் சேர்ந்த மூவருக்கு கரோனாவாம். அதனால், தெரு வாசிகளைப் பரிசோதனை செய்வதற்காக முகாம் அமைத்திருந்தார்கள். அந்த வீட்டைச் சேர்ந்த ஒருவர் ஏற்கெனவே கரோனாவால் பாதிப்பட்டவர். அந்த வீட்டில் வேலைசெய்யும் பெண்தான், எங்கள் அடுக்ககத்திலும் வேலை செய்கிறார். கரோனா தொற்றுக்கு ஆளானவரின் வீட்டுக்குக் குறைந்தது இரண்டு வாரங்களாவது வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று சொல்லியும், அந்தப் பெண் அங்கே வேலைக்குச் சென்றபடி இருந்தார். ஒரு வேளை அவர் கரோனாவால் பாதிக்கப்படாமல் அடுத்தவருக்குப் பரப்பும் ‘கேரியராக’ இருந்தால் என்ன செய்வது என்று, அப்போது தோன்றிய கவலை இப்போது பன்மடங்கானது.

பரிசோதனை முடிவு குறித்தும் தனிமைப்படுத்துதல் குறித்தும் அச்சப்பட்ட சிலர் பரிசோதனைக்கு வரவில்லை. நானும் மகளும் பரிசோதனை முகாமுக்குப் புறப்பட்டோம். எங்களைப் பார்த்த எங்கள் பக்கத்து வீட்டுப் பெண் அவருடைய மகன், மகளுடன் வந்தார். பரிசோதனைக்கு மாதிரியை எடுத்துக்கொண்டு கபசுரக் குடிநீரைக் கொடுத்து அனுப்பினார்கள் மாநகராட்சிப் பணியாளர்கள். முடிவு வர இரண்டு நாள்கள் ஆகும் என்று தெரிந்தும், ஒவ்வொரு நாளும் படபடப்புடனேயே கழிந்தது.

எதிர்பாராத முடிவு

மூன்றாம் நாள் பக்கத்து வீட்டுப் பெண் போனில் அழைத்தார். அவருடைய மகளுக்கு பாசிட்டிவ் என்று வந்திருப்பதாகச் சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. காரணம் பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் அந்தப் பெண் வீட்டைவிட்டு வெளியே செல்வதே இல்லை. அது மட்டுமல்லாமல், அவளைத் தவிர அந்த வீட்டில் வேறு யாருக்கும் கரோனா தொற்று இல்லை. உடனே எங்கள் மருத்துவருக்கு போன் செய்து கேட்டேன். விட்டமின் குறைபாடு இருந்தாலும் இப்படி முடிவு வரும் என்று அவர் சொன்னார். அந்தப் பெண்ணுக்கு விட்டமின் டி குறைபாடு இருப்பது அப்போதுதான் நினைவுக்கு வந்தது.

கரோனா தொற்றுக்கு ஆளான தங்கள் மகள் அழுதபடி இருப்பதாக, அந்தப் பெண் சொன்னார். பிறகு மாநகராட்சி ஊழியர்களின் வழிகாட்டுதல்படி அவளை தாம்பரம் சானடோரியத்தில் இருக்கும் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவளுக்கு மேலும் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. காய்ச்சல் உள்பட எந்த அறிகுறியும் இல்லை என்பதால், அவளுக்குப் பச்சை நிற அட்டையைக் கொடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளச் சொல்லியிருக்கின்றனர். பிறகு, காய்ச்சல் வந்தால் எடுத்துக்கொள்ளச் சொல்லி சில மாத்திரைகளையும் விட்டமின் மாத்திரைகளையும் தந்து அனுப்பியிருக்கிறார்கள்.

அவள் வீடு திரும்புவதற்குள் எங்கள் அடுக்ககம் முழுக்க இந்தத் தகவல் காட்டுத்தீயாகப் பரவிவிட்டிருந்தது. சிலர் என்னிடமும் போன் செய்து ஏதோ அந்தப் பெண் செய்யக்கூடாத குற்றத்தைச் செய்துவிட்டதைப் போல் பேசினார்கள். எனக்கு எரிச்சலாக இருந்தது. நாவல் கரோனா வைரஸ் தொற்றால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டதில், அந்தப் பெண்ணின் பங்கு என்ன? அவராக விரும்பித்தான் இந்தத் தொற்றை ஏற்றுக்கொண்டாரா?

கைகொடுத்த முன்னெச்சரிக்கை

பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுடன் அன்று காலை வரைக்கும் நான் பேசிக்கொண்டுதானே இருந்தேன். எனக்கு ஏன் தொற்று ஏற்படவில்லை என்றும் தோன்றி யது. இவ்வளவு நாள்களாக நாங்கள் கடைப்பிடித்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே கரோனா தொற்றிலிருந்து எங்களை விலக்கிவைத்திருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். காரணம் கடைக்குச் சென்றாலும் பக்கத்து வீட்டில் இருக்கிறவர்களுடன் பேசினாலும் குறைந்தபட்ச சமூக இடைவெளியை நாங்கள் கடைப்பிடித்துவருகிறோம்.

வெளியே சென்றால் எதையும் தொடுவதில்லை. வேறு வழியின்றி மாடிப்படி, கடையின் தடுப்புச் சுவர்களைத் தொட நேர்ந்தால் எக்காரணம் கொண்டும் கைகளை முகத்துக்குக் கொண்டுசெல்வதில்லை. வீடு திரும்பிய பிறகு கை, கால்களையும் முகத்தையும் சோப்பு போட்டு நன்றாகக் கழுவிவிடுவோம்.

உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தோம். புரதச்சத்து, விட்டமின் சி இரண்டும் நிறைந்த உணவைத்தான் கரோனா நோயாளிக்குத் தருகிறார்கள் என்று அரசு மருத்துவர்கள் சொன்ன நாளிலிருந்து எங்கள் வீட்டில் வாரத்தில் நான்கு நாள்கள் கீரை, வேகவைத்த முட்டை, தினமும் ஏதாவது ஒரு சுண்டல், மிளகும் சீரகமும் தூக்கலாகச் சேர்க்கப்பட்ட ரசம் என்று வகைப்படுத்திக்கொண்டோம்.

தொடக்கத்தில் கீரையைச் சாப்பிட அடம்பிடித்த மகளும் கரோனா நோயின் தீவிரத்தை உணர்ந்த பிறகு மறுக்காமல் சாப்பிடுகிறாள். விட்டமின் சி சத்துள்ள கொய்யா, நெல்லிக்காய், திராட்சை, ஆரஞ்சு, பப்பாளி போன்றவற்றில் ஏதாவது ஒன்றை நாள்தோறும் சாப்பிடுவோம். வாரத்தில் மூன்று நாள்களாவது மாடிக்குச் சென்று வெயிலில் நின்றுவிட்டு வருவோம். விட்டமின் டி வேண்டுமே.

வலுப்படுத்தும் கஷாயம்

இவற்றுடன் வாரம் ஒரு முறை கஷாயம் நிச்சயம். வீட்டில் யாருக்காவது லேசாகத் தொண்டைக்கட்டுவதுபோல் இருந்தால் துளசி, ஓமவள்ளி, வெற்றிலை, மிளகு, சீரகம், இஞ்சி ஆகியவற்றைக் கொதிக்கவைத்துக் குடிப்போம். கூடுமானவரை வெந்நீரைத்தான் குடிக்கிறோம். இரவில் தூங்கப்போகும் முன் வெந்நீரில் சிறிதளவு கல் உப்பு, மஞ்சள் தூள் கலந்து வாயைக் கொப்பளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.

எங்கள் வீட்டில் முடக்கத்தான் கீரை இருப்பதால் கை, கால் வலி என்றால் கைப்பிடி அளவு முடக்கத்தான் இலைகளுடன் சிறிதளவு வெங்காயம், தக்காளி, மிளகு, சீரகத்தைச் சேர்த்து சூப்பு வைத்துக் குடிப்போம். இல்லையென்றால் அதைத் தோசை மாவுடன் சேர்த்து அரைத்துத் தோசையாகச் சுட்டுவிடுவோம்.

சிறுதானியங்களும் அரிசிக்கு நிகரான விலைதான் என்பதால் அவற்றையும் அடிக்கடி பயன்படுத்து கிறோம். கம்பு இட்லி, கேழ்வரகுக் களி, குதிரைவாலி பொங்கல், சாமை சோறு போன்றவை எங்கள் வீட்டுச் சமையலில் தவறாமல் இடம்பிடிக்கும். பக்கத்து வீடுவரைக்கும் வந்த கரோனா எங்கள் வீட்டை எட்டிப் பார்க்காததற்கு, இவை எல்லாம்கூடக் காரணமாக இருக்கலாம். பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கும் சில உணவு வகைகளைப் பரிந்துரைத்தேன்.

யாரை விலக்குவது?

கரோனா தொற்றுக்கு ஆளானவரின் வீட்டைச் சேர்ந்த அனைவரையுமே, எங்கள் அடுக்ககத்தைச் சேர்ந்த சிலர் புறக்கணிப்பதும் முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்வதுமாக இருந்தனர். செல்போனிலும் தொலைக்காட்சியிலும் இவர்கள் அடிக்கடி கேட்கும் ‘நோயாளியிடம் பாகுபாடு காட்டாதீர்கள்’ என்பற்கு என்ன பொருள் என்பதை எப்போது உணர்வார்கள் எனத் தெரியவில்லை.

அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளும் திறக்கப்படலாம் என்கிற நிலையில், நாம் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு அவசியம். காரணம், இதுபோன்ற நேரத்தில் சமூகப் பரவல் அதிகரிக்கக்கூடும். தவிர, நாம் கடந்து செல்கிறவர்களில் எவ்வளவு பேருக்கு கரோனா இருக்கிறது என்பதும் நமக்குத் தெரியாது. கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கவோ குணப்படுத்தவோ மருந்துகள் இன்னும் வராத நிலையில், நம்மை நாம்தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும்?

- தேவி, சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x