Published : 22 Sep 2020 09:43 AM
Last Updated : 22 Sep 2020 09:43 AM

ஒரு பெண்ணின் சொல்ல மறந்த கதை!

சாமுவேல்

வெளியூரிலிருந்து கையில் மஞ்சள் பையுடன் வந்து உழைப்பின் சிகரமாக மாறுவதை சினிமாவில் நிறையவே பார்த்திருப்போம். அதை நிஜத்தில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார் செளபர்ணிகா. கோவையிலிருந்து சென்னைக்கு வெறுங்கையுடன் வந்து, 300 ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கி, இன்று கோலிவுட்டில் காஸ்டியூம் டிசைனராக வலம்வந்துகொண்டிருக்கிறார் செளபர்ணிகா.

கோவையில் வசதியான குடும்பத்தில் வளர்ந்துகொண்டிருந்த செளபர்ணிகாவின், வாழ்க்கையை ஒரு கறுப்பு நாள் புரட்டிப்போட்டது. குடும்பம் வறுமையில் தள்ளப்பட்டது. ஏழ்மையும் பிரச்சினைகளும் அவமானங்களும் ஒன்றுசேர்ந்து துரத்த, வேறு வழியின்றி சென்னைக்கு ரயிலேறினார் செளபர்ணிகா.

“சென்னை டைடல் பார்க்கில்தான் என் முதல் வேலையைத் தொடங்கினேன். எப்போது வேலை போகும் என்று தெரியாது. இன்னொரு வேலையில் சேர்வேன். கிடைக்கும் சிறு வாய்ப்பையும் பயன்படுத்தி வேலைசெய்தேன். ஆனால், எந்த வேலையைச் செய்தாலும், இது நமக்கான வேலை இல்லையே என்ற குழப்பமும் தயக்கமும் மனத்தை ஆட்டுவிக்கும். கிடைக்கும் வேலையை விட்டுவிடக் கூடாது என்பதற்காக வேலைகளைச் செய்துகொண்டிருந்தேன். சென்னையில் மட்டும் இப்படி 12 கம்பெனிகளில் வேலைபார்த்திருக்கிறேன்.

ஒரு நாள் கையிலிருந்த 300 ரூபாயில் 100 விசிட்டிங் கார்டு அடித்து ‘விளம்பர ஏஜென்சி’ ஒன்றைத் தொடங்கினேன். அந்த விசிட்டிங் கார்டின் டிசைனைப் பார்த்து, அதேபோன்ற ஒரு கார்டை ஒருவர் கேட்டார். அதில் 1,000 ரூபாய் சம்பாதித்தேன். அதுதான் என்னுடைய முதல் தொழில் வருமானம்” என்று சுருக்கமான ஃபிளாஷ்பேக் சொல்கிறார் செளபர்ணிகா.

சென்னையில் வழிநடத்தவும் ஆள் இல்லாமல், கை தூக்கிவிடவும் ஆள் இல்லாமல் இருந்த செளபர்ணிகா, சுயமாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயன்றார். இடையே வந்த திருமண பந்தமும் தோல்வியில் முடிய, கைக்குழந்தையுடன் தனிமரமானார். அப்போதுதான் யூடியூபைப் பார்த்து பெண்களுக்கான ஆடைகளை வடிவமைக்கக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். “பெண்களை ஆடை விஷயத்தில் திருப்திப்படுத்துவது கடினம். ஆடை அணிவதில் எல்லோருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். அதை மனத்தில்கொண்டே ஆடைகளை வடிவமைத்தேன். வீட்டில் இருந்தபடியே ‘ஜூன்பெர்ரி’ என்ற நவீனத் துணி வடிவமைப்பு நிறுவனத்தைத் தொடங்கினேன்” என்கிறார் செளபர்ணிகா.

அவருடைய ஆடை வடிவமைப்புக்கு வரவேற்பு கிடைக்கவே வாடிக்கையாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கினார்கள். செளபர்ணிகா வளரத் தொடங்கினார். “சினிமாத் துறையில் காஸ்டியூம் டிசைனராகப் பணிபுரிய வேண்டும் என்று மனத்தில் ஆசை உதித்தது. நடிகர், நடிகைகள் பலரைச் சந்தித்து வாய்ப்பு பெற முயன்றேன். என்னுடைய விடாமுயற்சி வீண் போகவில்லை. நடிகர் விஜய் ஆண்டனியின் ‘திமிரு பிடிச்சவன்’ படத்தில் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் படத்துக்குப் பிறகு அடுத்தடுத்து நான்கு படங்களில் பணிபுரிய வாய்ப்புகள் கிடைத்தன” என்கிறார் செளபர்ணிகா.

இன்றோ தமிழ் தாண்டி மலையாளப் பட வாய்ப்பு, நடிகைகள் சிலருக்குத் தனிப்பட்ட காஸ்டியூம் டிசைனர் என செளபர்ணிகா பிசியாகிவிட்டார். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி தரும் என்பதற்கு இவர் சிறந்த எடுத்துக்காட்டு. வாழ்க்கையில் உயர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஓர் உற்சாக டானிக்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x