Last Updated : 22 Sep, 2020 09:28 AM

 

Published : 22 Sep 2020 09:28 AM
Last Updated : 22 Sep 2020 09:28 AM

கவனம் பெறுமா செவித்திறன் குறைந்தோர் குரல்?

மாற்றுத் திறனாளிப் பள்ளி மாணவர்களையும் சென்றடையும் வகையில் இணையவழிக் கல்வி, கரோனா பேரிடர் காலத்தில் கற்பிக்கப்படுகிறதா என்ற கேள்வியை மும்பை உயர் நீதிமன்றம் சமீபத்தில் எழுப்பியிருந்தது. தமிழகத்தை பொறுத்தவரை நெடுநாட்களாக கவனிப்பாரற்று இருந்த மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சைகை மொழிக் காணொலிகள், கல்வித் தொலைக்காட்சி யூடியூப் அலைவரிசையில் சமீப நாள்களாகப் பதிவேற்றப்பட்டுவருகின்றன. இதைத் தவிர்த்து அந்த மாணவர்களின் கோரிக்கைகள் கவனம் பெற்றிருக்கின்றனவா?

ஒரே கல்வித்திட்டம் எப்படி சரி?

“தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டமே புதுச்சேரியிலும் பின்பற்றப்பட்டுவருகிறது. காது கேளாத, பார்வைக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான இலவச உண்டு உறைவிட அரசுப் பள்ளி எங்களுடையது. காஞ்சிபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த சிறப்புக் குழந்தைகள், இங்கே படித்துவருகிறார்கள். கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் அவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிட்டார்கள். இணையம்வழியே சைகை மொழிப் பாடம் கற்பிக்கும் பணியை ஒரு மாதமாகச் செய்துவருகிறோம். ஆனால், ஸ்மார்ட்போன் வைத்துக்கொள்ளும் வசதியுடன் அந்தக் குழந்தைகளின் குடும்பச் சூழல் இல்லை. அக்கம்பக்கத்தினரிடம் அலைபேசியை இரவல் வாங்கிப் படிக்கும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெருவாரியான மாணவர்களின் நிலை இதுவே.

காது கேளாத மாணவர்களுக்கே உரிய தனிப்பட்ட சிக்கல்களோ இன்னும் வேறுபட்டவை. மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகள் அரசால் உறுதிசெய்யப்பட்டிருந்தாலும், பிறவியிலேயே காது கேளாமல் இருப்பவர்களால் பேச முடியாது என்கிற குறைந்தபட்ச விழிப்புணர்வுகூடப் பலருக்கும் இல்லை. கல்வித் துறையிலும்கூட இந்த புரிதல் போதுமான அளவு இல்லை.

செவித் திறன் குறைபாடுள்ள மாணவர்கள் தேர்வு எழுதக் கூடுதலாக ஒரு மணிநேரம் அனுமதிப்பது, ஒரே ஒரு மொழிப் பாடத்தைப் படிப்பது உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.

ஆனாலும் வழக்கமான பாடத்திட்டத்தையே இவர்களும் படித்துத் தேற வேண்டுமென்பது, இந்தக் குழந்தைகள் மீது சுமத்தப்பட்டுள்ள பெருஞ்சுமை. கேட்டல், பேசுதல் வாய்க்கப் பெறாத இவர்களுக்கு என்னதான் மொழிப் பயிற்சி அளித்தாலும், அவர்களால் மற்றவர்களைப் போல் படித்துத் தேர்வு எழுத முடிவதில்லை. கணிதம், சமூக அறிவியலில் வரைபடம் உள்ளிட்டவற்றை இவர்கள் எளிதாகக் கற்றுக்கொள்கிறார்கள். படிப்பைவிட விளையாட்டு, நடனம், ஓவியம் போன்ற தனித்திறமைகளில் ஜொலிக்கிறார்கள்.

அதனால் வழக்கமான கல்வித் திட்டத்திலிருந்து மாறுபட்ட கல்வித் திட்டம் இவர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட வேண்டும்” என்கிறார் புதுச்சேரி பிள்ளைச்சாவடியில் உள்ள ஆனந்தரங்கம் பிள்ளை அரசு சிறப்புப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியை ஒருவர்.

இணையப் பிரச்சினைகள்

“செவி, பேச்சுத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இலவச உணவு, உறைவிடத்துடன் கல்வி வழங்கிவரும் தனியார் பள்ளி எங்களுடையது. கரோனா ஊரடங்கின் காரணமாக மாணவர்களை சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டோம். நாங்களே பிரத்யேகமாகத் தயாரிக்கும் சைகை மொழிக் காணொலிகளை இரண்டு மாதங்களாக இணையம்வழியே அவர்களுக்கு அனுப்பி வருகிறோம். ஆனால், இங்கு படிக்கும் குழந்தைகளில் பெரும்பாலோரின் பெற்றோர் கூலித் தொழிலாளர்கள். அவர்களிடம் ஸ்மார்ட்போன் வசதியெல்லாம் இல்லை.

வழக்கமான கல்வித் திட்டத்தில் படிப்பது செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு மிகவும் கடினம். மொழித்திறனே தடையாக இருப்பதால், அவர்களுக்கு சுயமாகச் சிந்தித்து எழுதுவது சிக்கலாக இருக்கிறது. இந்தப் பின்னணியில் பாடச் சுமையை கணிசமாகக் குறைப்பதும், புளூ பிரிண்ட் வழங்குவதும் அவசியம். அது மட்டுமல்லாமல் மாற்றுத் திறனாளிக்குக் கற்பிக்க அரசு நியமிக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.14 ஆயிரம் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. இப்படிப் பல அம்சங்கள் அரசு கவனமெடுத்துச் செயல்பட வேண்டிய தேவையுள்ளது” என்கிறார் திருவண்ணாமலை மாவட்டம் சந்தைமேடு பகுதியில் உள்ள பான் செக்கர்ஸ் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஆண்டனி பிரியா.

சம்பளமில்லா ஆறு மாதம்!

“சென்னை மாநிலக் கல்லூரியில் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்காகப் பணிபுரியும் விரிவுரையாளர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ரூ. 15,000 மாதச் சம்பளம் வழங்குகிறது. கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த ஆறு மாதங்களாக அதுவும் தரப்படவில்லை. என்றாலும் ஆகஸ்ட் 3ஆம் தேதியிலிருந்து இணையம்வழியே சைகை மொழிப் பாடத்தை எங்களுடைய மாணவர்களுக்குக் கற்பித்துவருகிறோம். ஆனால், பெரும்பாலோரிடம் ஸ்மார்ட்போன் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

வழக்கமான முறையில் உருவாக்கப்பட்ட காணொலிகளில் சைகை மொழியை இணைத்து, தற்போது கல்வித் தொலைக்காட்சி யூடியூப் அலைவரிசையில் பதிவேற்றப்படுகிறது. ஆனால், மாற்றுத் திறனாளி மாணவர்கள் அதை பார்த்துப் புரிந்துகொள்வது மிகவும் கடினம்” என்கிறார் சைகை மொழியில் கணினி அறிவியல் படித்துத் தற்போது சென்னை மாநிலக் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்துவரும் முனைவர் என்.வினோத்.

2011-ம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 3 லட்சத்து 318 பேர் செவி, பேச்சுத்திறன் சார்ந்த மாற்றுத் திறனாளிகள். 2020-ல்இந்த எண்ணிக்கை அதிகரித்து இருக்கக்கூடும். புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வரவிருக்கும் நிலையில், மாற்றுத் திறனாளி மாணவர்களில் ஒரு பிரிவினரான செவி, பேச்சுத்திறன் குறைபாடுடையவர்களுக்கு உரிய தனிக் கல்வித் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும். அத்துடன் இது சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உரிய வகையில் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக இணையவழிக் கல்வி மட்டுமே தற்போதுள்ள மாற்று ஏற்பாடு என்கிற நிலையில், இந்தப் பிரிவு சார்ந்த அனைத்து மாணவர்களிடமும் ஸ்மார்ட்போனைக் கொண்டு சேர்க்கும் நடவடிக்கையை அரசு முடுக்கிவிட வேண்டும். இந்தக் கோரிக்கைகள் உரியவர்கள் காதில் ஒலிக்குமா?

தொடர்புக்கு:

susithra.m@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x