

saravanan.j@hindutamil.co.in
சமீப ஆண்டுகளில் இந்திய ஆட்டோமொபைல் துறை அபரிமிதமான வளர்ச்சி கண்டது. காரணம் மக்கள் சொந்தமாக வாகனங்கள் வாங்கிப் பயணிப்பதில் அதிக ஆர்வம் காட்டினர். இதனால் புதிய புதிய மாடல்களை நிறுவனங்கள் அறிமுகப்படுத்தின. புதிய நிறுவனங்களும் இந்தியாவுக்குள் நுழைந்தன. தற்போது கரோனா காலத்தில் வாகன விற்பனை பாதிக்கப்பட்டிருந்தாலும், இனிவரும் காலங்களில் வாகன விற்பனை அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கரோனா வைரஸ் தொற்று பயத்தின் காரணமாகவும், கரோனாவுக்குப் பிந்தைய பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாகவும் இயல்பாகவே மக்களின் நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
மக்கள் பொதுப் போக்குவரத்தை தவிர்த்து தனிப்பட்ட போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள். இதனால் இந்தியாவின் பெட்ரோலிய பொருட்களின் தேவை அதிகரிக்கும் சூழல் உண்டாகும். சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள எரிசக்தி கணிப்பு 2020 அறிக்கையிலும் இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையானது 2050-ல் இரண்டு மடங்காக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக உள்நாட்டில் எரிசக்தி நுகர்வு அதிகரிப்பதன் விளைவு இது. மேலும் நிலக்கரி பயன்பாட்டை குறைக்க நம் நாடு திட்டமிடப்பட்டிருப்பதால் இயற்கை எரிவாயுவின் தேவையும் அதிகரிக்கும் என கூறியுள்ளது. இந்தியா, சீனா இரண்டுமே எண்ணெய் நுகர்வு அதிகம் உள்ள நாடுகளாக உள்ளன. அதேசமயம் எண்ணெய் உற்பத்தி நாடுகளாக இல்லாமல் இறக்குமதி செய்யும் நாடுகளாக இருப்பதால் இந்த நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் பற்றாக்குறை வேகமாக அதிகரிக்கிறது.
ஆனால், cவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் இறக்குமதி 2050இல் குறையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் அங்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவின் தேவை 50 சதவீதம் குறையும் எனக் கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவை 2 மடங்காக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் கரோனா பாதிப்புக்குப் பிறகு சர்வதேச அளவில் நிலவும் நெருக்கடியினால் நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவில் சிக்கல்கள் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் எரிசக்தி தொடர்பான பாதுகாப்பு கவலைbஅளிக்கும் நிலைக்கு மாறியுள்ளது. குறிப்பாக இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்கும் நாடுகள் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் நிபந்தனைகளுக்கு ஆளாக வேண்டிய பாதுகாப்பற்ற சூழலைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
பொதுவாக கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட துறைகள் இன்னும் சில ஆண்டுகளில் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிடும் ஆனால் சில துறைகளில் பாதிப்பு தொடரும் என்றே நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும் உலக ஜிடிபி 2025இல் 2.5 சதவீதம் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. 2050இல் 3.5 சதவீதம் வரை குறையலாம் எனவும் கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த கரோனா நெருக்கடியினால் இந்தியா, பிரேசில் ஆப்பிரிக்கா போன்ற வளர்ந்துவரும் நாடுகளின் பொருளாதாரம் அளவுக்கு அதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளின் பொருளாதாரக் கட்டமைப்பு கரோனா போன்ற திடீர் நெருக்கடிகளுக்கு எளிதில் பாதிப்புக்குள்ளாகும் வகையில் உள்ளன. அரசின் வருவாய் ஏற்கெனவே வெகுவாகப் பாதித்துள்ளது.
ஏற்றுமதி தொழில்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்தால் நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் அதிகரிக்கும். ஏற்கெனவே தங்கத்தின் இறக்குமதி நாட்டின் நிதிநிலைக்குப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. கச்சா எண்ணெய் இறக்குமதியும் அதிகரித்தால் மேலும் அரசின் நிதி நிலை சவாலைச் சந்திக்க நேரும்.
இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவை தற்போது உள்ளதை விடவும் இரண்டு மடங்கு உயரும்பட்சத்தில் இறக்கு மதியை மட்டுமே நம்பியிருக்கும் நம் நாடு பற்றாக்குறையை எதிர்கொள்ள முன்கூட்டியே திட்டமிட வேண்டியது அவசியம்.