Published : 19 Sep 2020 09:43 AM
Last Updated : 19 Sep 2020 09:43 AM

கரோனாவும் காலநிலை மாற்றமும்: அடுத்து என்ன செய்ய வேண்டும்?

நாராயணி சுப்ரமணியன்

கரோனா வைரஸின் அச்சுறுத்தல், பொருளாதார நெருக்கடி என இரு பெரும் சவால்களை எதிர்கொண்டிருக்கிறது உலகம். ‘இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புதல் என்பதை வழக்கம்போல் வரையறுத்துவிட முடியாது. இனி இதுவே புதிய இயல்பு வாழ்க்கையாக (New Normal) இருக்கும். அதற்கு நாம் தயாராக வேண்டும்’என்கிறார்கள் நிபுணர்கள். அந்தப் புதிய இயல்பு வாழ்க்கையில், கரோனா வைரஸைவிடப் பல மடங்கு தீவிரமான காலநிலை மாற்றமும் நம்மைத் தொடர்ந்துவரும் என்பதுதான் கவனத்தில் கொள்ள வேண்டிய பெரும் சிக்கல்.

இந்தக் கொள்ளைநோயிலிருந்து வெற்றி கரமாக மீண்டு வந்துவிட்டாலும்கூட, காலநிலை மாற்றம் என்கிற பேராபத்து, மனித குலத்துக்கு எஞ்சியிருக்கிறது என்பதே அறிவியலாளர்கள் விடுக்கும் எச்சரிக்கை. கரோனா வைரஸ் கொள்ளைநோய் பேரழிவுக்கு ஒரு சின்ன முன்னோட்டத்தை வழங்கியிருக்கிறது. காலநிலை மாற்றம் நிச்சயமாக இதைவிட மிகத் தீவிரமானது.

எல்லாமே கலைத்துப் போடப்பட்டு, நாட்களைப் பயத்துடன் கழித்துக்கொண்டி ருக்கும் நமக்குக் காலநிலை மாற்றம் குறித்த எச்சரிக்கை ஒருவித சலிப்பைத் தரக்கூடும். ஆனால், காலநிலை மாற்ற அச்சுறுத்தல் என்பது சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாகத் தீவிரமடைந்துவருகிறது. ஏற்கெனவே காலநிலை மாற்றத்துடன் போராடிக்கொண்டிருக்கும் உலகை, கொள்ளை நோயும் சேர்ந்து அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது என்ற வகையில்தான் இதை அணுகியாக வேண்டும்.

பொருளாதாரமும் காலநிலை மாற்றமும்

உலகப் பொருளாதாரம் மிகவும் அபாயகரமான வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் வைக்கும் செயல்பாடுகளை உலக நாடுகள் முன்னெ டுக்குமா என்பது விடை தெரியாத கேள்வி.

நவம்பர் 2020-ல் நடக்கவிருந்த COP26 மாநாடு மிக முக்கியமானது. பாரிஸ் ஒப்பந்தத்துக்குப் பிறகு, காலநிலை மாற்றத்தைப் பற்றி உலக நாடுகள் இந்த மாநாட்டில் விவாதிக்க இருந்தன. கரோனா அச்சுறுத்தலால் இந்த மாநாடு 2021-க்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே சிறு கூட்டங்கள் இணையவழியில் நடந்தாலும், முக்கியமான இந்த மாநாடு தள்ளிவைக்கப்பட்டிருப்பது பெரும் பின்னடைவு தான். இதனால், நாடுகள் ஒப்பந்தங்களைப் பின்பற்றும் தீவிரம் குறையலாம்.

ஏற்கெனவே நடைமுறையிலிருந்த காலநிலை சார்ந்த ஒப்பந்தங்களைப் பின்பற்றுவதிலும் பல நாடுகள் சிக்கல்களை எதிர்கொள்ளலாம். குறிப்பாகப் பொருளாதாரரீதியில் பின்தங்கியிருக்கும் நாடுகள் ஒரே நேரத்தில் கரோனா பாதிப்பு, பொருளாதார பின்னடைவு, இயற்கைச் சீற்றங்கள் என்று எல்லாவற்றையுமே எதிர்கொள்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் கார்பன் உமிழ்வை (Carbon emissions) கட்டுக்குள் வைக்க முயற்சி எடுப்பதற்கான சாத்தியம் குறைவு.

பசிபிக், இந்தியப் பெருங்கடலில் இருக்கும் தீவு நாடுகளின் அடிப்படை வாழ்வாதாரங்களான சுற்றுலாவும் வேளாண்மையும் கரோனாவாலும் காலநிலை மாற்றத்தாலும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றன. அந்த நாடுகளாலும் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. பொருளாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான கார்பன் உமிழ்வு அளவை மீளாய்வு செய்தல், தேவைப்பட்டால் காலநிலை இழப்பீடு (Climate Compensation) வழங்குதல் ஆகியவை தற்போதைய உடனடித் தேவை.

ஊரடங்கால் உமிழ்வு குறைந்திருக்கிறதா?

பொதுவாக கார்பன் உமிழ்வு அளவு, ஆண்டுக்கு ஒரு சதவீதம் என அதிகரித்துக் கொண்டே இருக்கும். ஆனால், கொள்ளைநோய் அச்சுறுத்தலால் பல நாடுகள் ஊரடங்கை அறிவித்தன. இதனால், உமிழ்வின் அளவு குறைந்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட சரிவைக் கணக்கிட்டால் 2020-ன் மொத்த உமிழ்வு அளவு நான்குமுதல் எட்டு சதவீதம்வரை குறையலாம். ஆண்டுக்கு ஐந்து சதவீதம் உமிழ்வு அளவு குறைந்தாலே பாரிஸ் ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவை எட்டிவிடலாம்.

ஆனால், ஆண்டு முழுவதும் அனைவரும் வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. பல நாடுகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கிறது; மக்கள் பயணம் செல்லத் தொடங்கிவிட்டார்கள்.தொழிற்சாலைகளைத் திறக்கவும் விமானங்களை வழக்கம்போல் இயக்கவும் அழுத்தம் தரப்படுகிறது. அதனால், உமிழ்வு பழைய நிலைக்குத் திரும்பலாம். இது ஒரு பக்கம் என்றால் துவண்டுபோயிருக்கும் பொருளாதாரத்தைச் சீரமைப்பதற்காக உற்பத்தி அதிகரிக்கப்படலாம். அதனால், கார்பன் உமிழ்வு வழக்கத்தைவிட அதிகரிக்கவும் சாத்தியம் உண்டு.

கொள்ளை நோய் கற்றுத்தரும் பாடங்கள்

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான சில பாடங்களையும் கொள்ளைநோய் கற்றுத் தந்திருக்கிறது. கொள்ளை நோய் பேரிடர் வரும்போது நமது இயல்பு வாழ்க்கையில் எவ்வளவு அசௌகரியங்கள் வந்தாலும், ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கிறோம். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் இதே மனநிலை தேவை.

தடுப்பூசியோ மருந்தோ கண்டுபிடிக்கப்பட்டு விட்டால் நோய் அச்சுறுத்தல் அகன்றுவிடலாம். ஆனால், காலநிலை மாற்றம் அதுபோல் ஓரிரு ஆண்டுகளில் அகன்றுவிடாத நெடுங்காலப் பிரச்சினை. அதேநேரம் கரோனா கால இடர்ப்பாடுகள் அளவுக்கு இல்லாமலேயே காலநிலை மாற்றத்தை நாம் எதிர்கொள்ள முடியும். தேவை சரியான திட்டமிடல் மட்டுமே.

வெளியிலிருந்து பார்ப்பதற்கு அதீத முன்னெச்சரிக்கைபோல் தெரிந்தாலும் பிரச்சினை தீவிரமாவதற்கு முன்பே, செயலில் இறங்குவது நல்லது. காலநிலை மாற்றமோ கொள்ளை நோயோ, சமூகப் பொருளாதார அடுக்கில் ஏற்கெனவே விளிம்புநிலையில் இருப்பவர்களே, அதிகம் பாதிப்புக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, திட்டவரைவுகள் அவர்களை மனத்தில் கொண்டே உருவாக்கப்பட வேண்டும். ஒரு பேரிடரை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை உருவாக்குவது முக்கியம்தான். அதேவேளை, பேரிடர் வராமலேயே காத்துக்கொள்வதற்கான வழி என்ன என்பதை விவாதிப்பதும் அவசியம். அறிவியல் நிபுணர்களின் ஆலோசனைப்படி எடுக்கப்படும் கொள்கை முடிவுகள், நல்ல விளைவைத் தருகின்றன.

மீள்வதும் எதிர்கொள்வதும்

கொள்ளை நோயிலிருந்து மீண்டு வருவதற்கான பாதையிலேயே, காலநிலை மாற்றத்தையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், இது மிகச்சிறந்த வாய்ப்பு. தற்சார்பு மிக்கப் பசுமைத் திட்டங்களை நம் வாழ்க்கைமுறையிலும் அரசுக் கொள்கை முடிவுகளிலும் இணைத்துக்கொள்ள, இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அலுவலகத்துக்கு நேரில் சென்றாக வேண்டு மென்ற அவசியமில்லை, இணையம் மூலமாக வீட்டிலிருந்தே பணியை மேற்கொள்ளலாம் என்பதை நாம் அனுபவப்பூர்வமாக உணர்ந்தி ருக்கிறோம். இன்னும் நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பல நிறுவனங்கள் வீட்டிலிருந்தபடியே வேலைகளைத் தொடரலாம் என்றும் அதற்கான வழிமுறைகளைக் கண்டறியப்போவதாகவும் அறிவித்துள்ளன. நம் அன்றாட வாழ்வின் பல செயல்பாடுகளில் தவிர்க்கக்கூடியவை எவையெவை என்பதும் நமக்குத் தெரிந்துவிட்டது. அவற்றைத் தொடரலாம்.

சூரிய ஒளி/காற்றாலை மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிபொருள் திட்டங்களில் முதலீடு செய்வது, நிபுணர்களின் ஆலோசனைக்கு உட்பட்டே கொள்கை முடிவுகளை வரையறுப்பது போன்றவற்றை உலக நாடுகள் முன்னெடுக்கலாம். பொருளாதார முன்னேற்றம் என்பதையும் சூழலியல் பாதுகாப்பு என்பதையும் தனித்தனி வழிகளாகப் பார்க்காமல், இரண்டையுமே இணைத்து உறுதிசெய்ய வழியிருக்கிறதா என்பது விரிவாக விவாதிக்கப்பட வேண்டும்.

“கோவிட்-19 என்பது அதிவேகமாகச் செயலாற்றும் காலநிலை மாற்றம்" என்கிறார் காலநிலை மாற்ற நிபுணர் கெர்னாட் வேக்னர். ஒரு அவசரநிலையைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப கொள்ளை நோய்க்கு நாம் எதிர்வினை ஆற்றுகிறோம். காலநிலை மாற்றமும் அதேபோன்றதொரு பெரும் அச்சுறுத்தலே. இதை மனத்தில் கொண்டு செயல்பட்டாக வேண்டிய கட்டாயம், நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

கட்டுரையாளர் தொடர்புக்கு: nans.mythila@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x