Published : 16 Sep 2020 09:36 AM
Last Updated : 16 Sep 2020 09:36 AM

டிங்குவிடம் கேளுங்கள்: நாய்கள் ஏன் நீண்ட நேரம் தூங்குவதில்லை?

நதி நீர் உப்பாக இல்லை. அந்த நதி கலக்கும் கடல் நீர் மட்டும் உப்பாக இருப்பது ஏன், டிங்கு?

- தே. யாழினி இளம்பிறை, 4-ம் வகுப்பு, செவன் டாலர்ஸ் தொடக்கப் பள்ளி, பாளையங்கோட்டை.

நல்ல கேள்வி, யாழினி இளம்பிறை. உலகில் உள்ள தண்ணீரின் பெரும்பகுதி கடலில் உப்பு நீராகத்தான் இருக்கிறது. இந்தக் கடலுக்கு மழை நீர் மூலம் தண்ணீர் வந்துசேர்கிறது. மழைநீர் பாறைகள், மணல்களைக் கரைத்துக்கொண்டு ஆறுகளில் சேர்கிறது. இப்படி வரும்போது பாறைகள், மணல்களில் உள்ள தாதுக்களையும் உப்புகளையும் எடுத்துக்கொண்டு செல்கிறது. ஆறுகள் இந்த நீரைக் கடலில் சேர்த்துவிடுகின்றன. கடலில் சேரும் நீர் வெப்பத்தால் ஆவியாகிறது. தண்ணீரில் உள்ள உப்பு மட்டும் கடலிலேயே தங்கிவிடுகிறது. ஆவி, மேகமாகக் குளிர்ந்து மீண்டும் மழையாகப் பொழிகிறது. அந்த நீர் தாதுக்களையும் உப்புகளையும் எடுத்துக்கொண்டு ஆறு மூலம் கடலில் சேர்த்துவிடுகிறது. இப்படித்தான் கடல் நீர், உப்பு நீராக இருக்கிறது.

சூரியன் உருவானது எப்படி, டிங்கு?

- வி.கு. சுகதேவ், 3-ம் வகுப்பு, கம்மவார் தொடக்கப் பள்ளி, அருப்புக்கோட்டை.

சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தூசும் வாயும் நிறைந்திருந்த நெபுலா எனப்படும் மேகம் சொந்த ஈர்ப்பு விசையால் தகர்ந்து, தட்டையானது. வட்டின் மையத்தில் விழுந்த வாயுக்கள், அதன் மீது விழும் வாயுக்களைச் சூடாக்கின. வட்டின் மையம் சூடாகவும் அடர்த்தியாகவும் மாறி, சூரியன் உருவானது. எஞ்சியிருந்த வாயுக்களும் தூசுகளும் கோள்களாக மாறி, சூரியனைச் சுற்றி வருகின்றன, சுகதேவ்.

கடல்கன்னி நிஜமாகவே இருக்கிறதா, டிங்கு?

- ராகவி, 4-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம்.

உடலின் மேல் பகுதி மனித உருவமாகவும் கீழ்ப் பகுதி மீனாகவும் தோற்றம் அளிக்கும் கடல்கன்னி, மனிதர்களின் அபாரமான அழகான கற்பனைகளில் ஒன்று. மனிதர்களால் தண்ணீருக்குள் நீண்ட நேரம் வாழ முடியாது. மீன்களால் தண்ணீருக்கு வெளியே நீண்ட நேரம் வாழ முடியாது. இப்படி வெவ்வேறு இயல்புகொண்ட இரு உயிரினங்களை இணைத்து, ஓர் உயிரினமாக மனிதர்கள் மாற்றி வைத்திருக்கிறார்கள். இந்தக் கற்பனையான கடல்கன்னிகளை வைத்து உலகம் முழுவதும் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. மற்றபடி கடல்கன்னிகள் நிஜத்தில் இல்லை, ராகவி.

நாய்கள் ஏன் நீண்ட நேரம் தூங்குவதில்லை, டிங்கு?

- வி. சிந்தாணிக்கா, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, திருச்சி.

நம்மைப் போலவே நாய்களும் தூங்கவே செய்கின்றன. குட்டியாக இருக்கும்போது 18 மணி நேரம் வரை தூங்குகின்றன. மனிதர்களைப் போலவே வளர வளர தூங்கும் நேரம் குறைந்துவிடுகிறது. நன்கு முதிர்ச்சியடைந்த நாய் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வரை தூங்குகிறது. ஆனால் நம்மைப் போல இரவில் படுத்து, காலையில் எழுவது போல் நீண்ட தூக்கத்தை மேற்கொள்வதில்லை. ஒரு நாளைக்குப் பலமுறை குட்டி தூக்கத்தை மேற்கொள்கின்றன. குட்டி தூக்கமாக இருந்தாலும் ஆழ்ந்த தூக்கத்துக்குச் சென்றுவிடுகின்றன. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாலும் சிறிய ஒலி கேட்டவுடன் விழித்துவிடுகின்றன, சிந்தாணிக்கா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x