Published : 14 Sep 2020 09:47 AM
Last Updated : 14 Sep 2020 09:47 AM

அதிகரிக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு: நாம் என்ன செய்யப்போகிறோம்?

பேராசிரியர் ரு. பாலசுப்ரமணியன் rubalu@gmail.com

உலகில் பொருளாதார வளர்ச்சி மிக வேகமாக அதிகரிக்க அதிகரிக்க அதற்கேற்ப ஏற்றத்தாழ்வுகளும் அதிகரித்து வருகின்றன. ஒரு சாராரிடம் மட்டும் செல்வம் குவிந்துகொண்டிருக்க மற்றவர்கள் ஏழ்மையை நோக்கி தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக கடந்த 40 ஆண்டுகளில் பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகப் பெரிய அளவில் உருவாகி இருக்கிறது. ஏன் உலகம் இத்தகைய ஏற்றத்தாழ்வுமிக்கதாக மாறியிருக்கிறது? ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதற்கு மனிதர்களுக்கிடையிலான உடல் வலிமை மற்றும் அறிவுத்திறன் போன்றவற்றில் நிலவும் இயற்கையான வேறுபாடுகள் மட்டும்தான் காரணமா? அல்லது, சமூக, பொருளாதார அமைப்பில் உள்ள சிக்கல்கள் காரணமா? பேசுவோம்.

1 ஏற்றத்தாழ்வுகளின் தோற்றம்: பிற உயிரினங்களிடத்திலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. ஆனால் அவை உடல் பலத்தினால் ஏற்பட்டவை. மனிதர்கள்போல் உபரி உற்பத்தி, சொத்துரிமை என்ற வாழ்வியல் முறை பிற உயிரினங்களிடத்தில் இல்லாததால் அவையிடத்தில் ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து நீடிப்பதற்கோ, பெருகுவதற்கோ வாய்ப்பில்லை. மனித சமுதாயம் ஒரு காலகட்டம் வரை அப்படித்தான் இருந்தது. காய், கனிகளை சேகரித்து உண்டகாலத்திலும், விலங்குகளை வேட்டையாடி உணவாக்கிய காலகட்டத்திலும் ஏற்றத்தாழ்வுகள் இல்லை. அதனால்தான் அப்போது அரசும், மதங்களும் தோன்றவில்லை.

விவசாயம் தோன்றிய பின் உபரி உற்பத்தி உருவாகியதால் அதை சேமிக்க வேண்டிய தேவை உருவானது. விளைவாக, சொத்துரிமை தோன்றியது. இருந்தபோதிலும், உபரி என்பது தானியமாக, கால்நடைகளாக இருந்த வரை ஏற்றத்தாழ்வுகள் மிகவும் குறைவாகவே இருந்தன. எப்போது மனித குலம் நாடோடி வாழ்க்கையிலிருந்து குடியமைவு என்கிற வாழ்க்கை நிலைக்கு மாறியதோஅப்போதுதான் சேமிப்புக்கான தேவை அதிகரித்தது. இதனால் அதிக அளவில் உபரி உருவாக்கப்பட்டது. அதன் நீட்சியாக நிலவுடைமையும் உழைப்புப் பிரிவினையும் தோன்றி ஏற்றத்தாழ்வுகள் பெருக ஆரம்பித்தன.

2 நல அரசும் நவதாராளமயமாக்கலும்: அறிவியல் கண்டுபிடிப்புகள் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை பல மடங்கு அதிகரித்தது. ஆனால் அதன் பலன்கள் அனைத்தும் அதிகாரத்தில் இருந்தவர்களிடமும், பணபலம் கொண்டிருந்தோரிடமுமே குவிந்தது. இந்தச் சூழல் தீவிரமடையவும் பொதுவுடமை சித்தாந்தம் தோன்றுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கம்யூனிச சித்தாந்தத்தின் தாக்கம் பரவலாக இருந்தது. அதன் பரவலைத் தடுக்கும் நோக்கில் முதலாளித்துவ அரசுகள், செல்வந்தர்கள் மீது அதிகமான வரிகள் விதித்து அரசுச் செலவுகள் மூலம் ஏழை, எளியோர்களுக்கான நலத் திட்டங்களைத் தீவிரமாகச் செயல்படுத்தும் வகையில் மக்கள் நல அரசுகளைக் (welfare state) கட்டமைத்தது. இந்தக் காலகட்டத்தில்தான் மக்களாட்சி முறையும், தொழிற்சங்களின் வளர்ச்சியும் நிகழ்ந்தது. இந்த மாற்றங்கள் ஏற்றத்தாழ்வுகள் பெருகுவதைப் பெருமளவு மட்டுப்படுத்தின.

ஆனால், 1980-க்குப் பின், உலக முதலாளியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டது. அதன் காரணமாக மக்கள் நல அரசுகள் புறந்தள்ளப்பட்டு, நவதாராளமயமாக்கல் (Neo-liberalism) கொள்கைகள் அமலாக்கப்பட்டன. கட்டற்ற சந்தைப் பொருளாதாரம், குறைந்தபட்ச அரசு (minimal state), தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாதல் கொள்கைகள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டன. அவை தொழிற்சங்கங்களை பலவீனப்படுத்தின.இதனால் உழைப்புச் சந்தையில் தொழிலாளர்களின் பேரத்திறன் குறைந்தது. அதேசமயம், பெருநிறுவனங்களில் உயர்பதவி வகிப்போரின் ஊதியம் பல்கிப் பெருகியது. பொருள் உற்பத்தியின் மூலம் இலாபம் ஈட்டும் மெய்யான பொருளாதாரத்திற்கும் (Real economy), பணத்தை வைத்தே பணம் பெருக்கும் நிதிப்பொருளாதாரத்திற்குமான (financial economy) இடைவெளி மிகப் பெரிய அளவில் விரிவடைந்தது. இது ஏற்றத்தாழ்வுகள் பெருகியதற்கான முக்கியமான காரணியாகும்.

3 புள்ளிவிவரங்கள் சொல்வதென்ன?: 1980-க்குப் பிறகு உலகின் அனைத்துப் பகுதிகளிலுமே பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது என்கிறார் ஏற்றத்தாழ்வுகள் குறித்து விரிவான ஆய்வுகள் செய்துள்ள பிரெஞ்சுப் பொருளியலர் தாமஸ் பிக்கெட்டி. 1990 முதல் 2015 வரையான காலத்தில் இந்தியா, சீனா உட்பட உலகின் 71 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள நாடுகளில் ஏற்றத்தாழ்வுகள் பெருமளவு அதிகரித்துள்ளது. இந்தியாவை எடுத்துக்கொண்டால், அதன் மொத்த தேசிய வருமானத்தில் 55 சதவீதம், இந்திய மக்கள் தொகையில்10 சதவீதத்தினரிடம் சென்றடைகிறது. மீதமுள்ள 45 சதவீத வருமானம் 90 சதவீத மக்களால் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. உதாரணமாக, இந்தியாவின் மக்கள் தொகை 100 பேர் எனவும் தேசிய வருமானம் 1,000 ரூபாய் என்றும் வைத்ததுக் கொள்வோம். இதை சமமாகப் பங்கிட்டால் ஒரு நபருக்கு 10 ரூபாய் கிடைக்கும். ஆனால், தற்போதுள்ள நிலையின்படி, பொருளாதாரக் கட்டமைப்பில் உயர் நிலையில் உள்ள 10 பேருக்கு, நபர் ஒருவருக்கு 55 ரூபாய் வீதம் 550 ரூபாய் கிடைக்கிறது. மீதமுள்ள 90 பேருக்கு நபர் ஒருவருக்கு 5 ரூபாய் வீதம் மொத்தமாக 450 ரூபாய் மட்டுமே சென்றடைகிறது.

இந்தியா சுதந்திரமடைந்தபோது, வருமான அடிப்படையில் உச்சத்திலிருந்த 1 சதவீதத்தினரின் மொத்த வருவாய், நாட்டின் மொத்த வருவாயில் 20 சதவீதமாக இருந்தது. சுதந்திரத்திற்குப் பிந்தைய முப்பதாண்டுக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நாட்டுடைமையாக்கல், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் அதிகரிப்பு போன்ற பொருளாதாரக் கொள்கைகளினால் பொருளாதார ஏற்றத்தாழ்வு குறைந்தது. இதனால், 1980-களின் தொடக்கத்தில், வருமான அடிப்படையில் உச்சத்திலிருந்த 1 சதவீதத்தினரிடம் குவிந்துகொண்டிருந்த நாட்டின் மொத்த வருவாயின் பங்கு 6 சதவீதமாகக் குறைந்தது. ஆனால், 1980-க்குப் பின் பின்பற்றப்பட்ட நவதாராளமயமாக்கல் கொள்கைகளினால் பொருளாதார வளர்ச்சி அதிகரித்தபோதிலும் அவ்வளர்ச்சியினால் செல்வம் படைத்தவர்களே அதிகம் பலன் பெற்றனர்.

இதனால், வருமான அடிப்படையில் உச்சத்திலிருந்த1சதவீதத்தினரிடம் குவிந்துகொண்டிருந்த நாட்டின் மொத்த வருவாயின் பங்கு 22சதவீதமாக உயர்ந்து, இந்தியாவின் ஏற்றத்தாழ்வுகள் வரலாறு காணாத அளவை எட்டியுள்ளது என்கிறது உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை 2018. 1980-க்குப் பிறகு ஏறத்தாழ அனைத்து நாடு களிலுமே பொது மூலதனம் மிகப்பெருமளவில் தனியார் மூலதனமாக மாற்றப்பட்டுள்ளது தெளிவாகிறது. மொத்தத்தில், பரந்துபட்ட பொருளாதார வளர்ச்சி நிகழ்ந்திருந்தபோதிலும் பொதுச் செல்வம் தனியார் செல்வமாக மாற்றப்பட்டதால் அரசுகள் ஏழ்மையுற்றன. இதன் காரணமாக அரசுகள், ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும் மக்கள் நல அரசுகளாகச் செயல்படும் பொருளாதார வலிமையை இழந்துவிட்டன என்கிறது அவ்வறிக்கை.

4 ஏன் கவலைப்பட வேண்டும்?: பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பல்வேறு சமூக, பொருளாதார சிக்கல்களுக்கு வழிவகுக்கின்றன. உதாரணமாக, ஏற்றத்தாழ்வுகள் அதிகமுள்ள நாடுகளில் மக்களுக்கிடையிலான பரஸ்பர நம்பிக்கை குறைந்து விடுவதுண்டு (Trust deficit). இதனால் பரிவர்த்தனைச் செலவுகள் (transaction cost) அதிகரித்து வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பதால் உற்பத்தித்திறனும் அதன் தொடர்ச்சி யாக பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும் என்கிறது 2020ல் வெளியான உலக வங்கியின் உலக உற்பத்தித்திறன் பற்றிய ஆய்வுநூல். ஏற்றத்தாழ்வுகளினால் சமூகப் பதற்றம் மற்றும் அரசியல் நிலையின்மை அதிகரிப்பதுடன் மனிதவளத் திரட்டல் குறையவும் வாய்ப்புள்ளது. தானியங்கிமயமாதல், கரோனா நோய்த்தொற்று மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றால் ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காலநிலை மாற்றத்தினால், ஏழை நாடுகளின் பொருளாதாரம் அதிகமாகப் பாதிக்கப்பட்டதன் காரணமாக உலகளாவிய ஏற்றத்தாழ்வு 25 சதவீதம் அதிகரித்துள்ளது. அனைவருக்குமான இலவசக் கல்வி, சுகாதாரம், குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பொதுச் சேவைகள், சமூகப் பாதுகாப்பு, வேலை வாய்ப்புகள், வரி உயர்வுகள் மூலம் வருவாய் மறுபங்கீடு போன்ற சமத்துவத்தை ஊக்குவிக்கும் கொள்கைகள், திட்டங்களால் மட்டுமே ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, பரந்துபட்ட வளர்ச்சியை உறுதி செய்ய முடியும். ஏற்றத் தாழ்வற்ற சமநிலைச் சமுதாயத்தை நோக்கி நகர்வதே நாகரிக சமூகத்தின் பண்பாகும். நாம் என்ன செய்யப்போகிறோம்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x