Last Updated : 21 Sep, 2015 12:43 PM

 

Published : 21 Sep 2015 12:43 PM
Last Updated : 21 Sep 2015 12:43 PM

மியூச்சுவல் பண்ட் முதலீடு: அச்சம் தவிர்

சமீப காலமாக மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்பவர் களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போது இந்தியாவில் இருக்கும் அனைத்து மியூச்சுவல் பண்ட்களும் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு சொத்துகளைக் கையாளுகின்றன. வரும் 2018-ம் ஆண்டில் சுமார் ரூ.20 லட்சம் கோடி அளவுக்கு மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கையாளும் சொத்து மதிப்பு உயரும் என்று இஒய் மற்றும் கேப் மியூச்சுவல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கணித்திருக்கின்றன.

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கையாளும் சொத்து மதிப்பு ஆண்டுக்கு 16 சதவீதம் வரை உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால் ஏற்கெனவே முதலீடு செய்தவர்களின் பங்கு அதிகமாக இருக்கிறதே தவிர புதிதாக வரு பவர்களின் எண்ணிக்கை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. தவிர இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 30.6 சதவீதம் சேமிப்பாக இருந்தாலும் மியூச்சுவல் பண்ட்களுக்கு வரும் முதலீடு என்பது வெறும் 7 சதவீதம்தான்.

மியூச்சுவல் பண்ட்கள் நீண்ட நாளைக்கு நல்ல வருமானம் கொடுத்தாலும், அதன் மீது சிறு முதலீட்டாளர்களுக்கு உள்ள பயம் மற்றும் தேவையில்லாத நம்பிக்கை காரணமாக மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வதை தவிர்க்கின்றனர்.

பயம் தேவையா?

மியூச்சுவல் பண்ட்கள் என்றாலே ஏதோ சூதாட்டம் என்கிற நினைப்பு பல சிறு முதலீட்டாளர்களிடம் உள்ளது. இங்கு முதலீடு செய்யப்படும் தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்யப் படுகிறது. இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

ஆனால் அவை அனைத்தும் தேர்ந்த நிதி மேலாளர்களால் நிர்வகிக் கப்படுகிறது. மேலும், உங்களிடம் பெறப்படும் தொகை பல துறைகளில் முதலீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு துறையிலும் வெவ்வேறு பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது என்பதால் நஷ்டமடைவதற்கு வாய்ப்புகள் குறைவு. அதே சமயத்தில் கிடைக்கும் வருமா னமும் நிரந்தர வருமான முதலீட்டு திட்டங்களை விட அதிகமாக கிடைக்க வாய்ப்புண்டு.

வாய்ப்புகள் என்ன?

பங்குச்சந்தை சார்ந்த திட்டங்கள் ரிஸ்க் என கருதினால் பேலன்ஸ்ட் திட்டங்கள் உள்ளன. அதாவது பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தை இரண்டும் கலந்த திட்டங்கள். இதிலும் இரண்டு வாய்ப்புகள் உள்ளன.

பங்குச்சந்தையில் அதிக முதலீடும், கடன் சந்தையில் குறைவான முதலீடு இருப்பது போல உள்ள திட்டங்களை தேர்வு செய்யலாம். அல்லது பங்குச்சந்தையில் குறைவாகவும் கடன் சந்தையின் பங்கு அதிகமாக உள்ள திட்டங்களை தேர்வு செய்யலாம். பங்குச்சந்தையே வேண்டாம் என்று நினைப்பவர்களுக்குமான திட்டங்களும் இங்கு உண்டு.

இந்த திட்டங்களுக்கும் சாதாரண நிரந்தர வருமானம் முதலீட்டு திட்டங் களில் கிடைப்பதை விட அதிகமாக கிடைக்க வாய்ப்பு உண்டு.

இதை தவிர அதிக ரிஸ்க் உள்ள, அதிக வருமான வாய்ப்புள்ள திட்டங் களும் உண்டு. வெளிநாட்டு பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யும் பண்ட்கள், வங்கித்துறையில் மட்டுமே முதலீடு செய்யும் பண்ட்கள் என குறிப்பிட்ட துறையில் மட்டுமே முதலீடு செய்யும் பண்ட்களும் உள்ளன. இதில் அதிக ரிஸ்குகளும் உள்ளன. அதிக வருமான வாய்ப்புகளும் உள்ளன. அதிக முதலீட்டு வாய்ப்புள்ள திட்டங்கள் இருப்பது மியூச்சுவல் பண்ட்களில்தான்.

எப்போது, எவ்வளவு முதலீடு

இப்போது முதலீடு செய்யலாமா, இல்லை பங்குச்சந்தை இன்னும் கொஞ்சம் சரிந்த பிறகு முதலீடு செய்யலாமா என்ற கேள்வி அவசிய மற்றது. பங்குச்சந்தை எப்போது சரியும், எவ்வளவு சரியும் என்பது கணிப்பது முடியாது விஷயம். பங்குச்சந்தையில் காலத்தை கணிக்க முயற்சிப்பது என்பது என்பது அலை ஓய்ந்த பிறகு கடற்கரைக்கு செல்வேன் என்று சொல்வது போலதான்.

காலத்தை கணிக்க முயற்சிப் பதைவிட ஒவ்வொரு காலத்திலும் முதலீடு செய்வதுதான் மிகச்சரியான வழியாக இருக்க முடியும். ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்து (எஸ்.ஐ.பி முறையில்) வரும் பட்சத்தில் சந்தையின் அனைத்து ஏற்ற இறக்கங்களிலும் முதலீடு செய்திருப்பீர்கள். நீண்ட காலத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அதேபோல அதிக தொகை இருந்தால்தான் முதலீடு செய்ய முடியும் என்ற எண்ணமும் தவறானது. சில பண்ட்களில் 100 ரூபாய் கூட முதலீடு செய்ய முடியும். பெரும்பாலான திட்டங்களில் குறைந்தபட்ச முதலீடு 500 ரூபாயாக உள்ளது. மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வதை தடுப்பது காலமோ தொகையோ அல்ல.

மீண்டும் எடுக்க முடியாதா?

பிக்சட் டெபாசிட் போடும்போது எப்போது வெளியே எடுப்போம் என்பது குறித்து யாரும் யோசிப்பதில்லை. முதலீட்டுக்கான தங்கம் வாங்குகிறோம் என்று சொல்லும் பலரும் தங்கத்தை அடகு வைப்பதோ விற்பதோ இல்லை. ஆனால் மியூச்சுவல் பண்ட் என்று வரும் போது மட்டும் எப்போது வெளியே எடுப்பது என்ற கேள்வி எழுகிறது. வரிவிலக்குக்கான போடப்படும் இ.எல்.எஸ்.எஸ் திட்டங்களில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு மூன்று வருடங்களுக்கு எடுக்க முடியாது. அதனை தவிர மற்ற திட்டங்களை எளிதாக எடுக்க முடியும். செய்த முதலீட்டை ஒரு வருட காலத்துக்குள் வெளியே எடுக்கும் போது வெளியேறும் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

இலக்கு முக்கியம்!

ஒரு வருட காலத்துக்குள் முதலீட்டை திரும்ப எடுக்க முடியும் என்றாலும் இலக்கினை நிர்ணயம் செய்து, அதற்கேற்ப முதலீடு செய்வது நல்லது. இலக்கினை நிர்ணயம் செய்யும் பட்சத்தில் அதற்கேற்றவாறு திட்டங்களை தேர்ந்தெடுக்க முடியும். குறைந்த காலம் (ஒரு வருடத்துக்குள் என்றால்) பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களை தவிர்ப்பது நல்லது. நீண்ட காலத்துக்கு முதலீடு செய்ய முடிவெடுத்தால் பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களை தேர்ந்தெடுப்பது நல்லது. ஒரளவுக்கு மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்த பிறகு அதிக ரிஸ்க் இருக்கும் செக்டோரல் பண்ட்களில் முதலீடு செய்யலாம்.

கொஞ்சம் ஆராய்ச்சி!

முதலீடு செய்தால் மட்டும் போதாது. அவ்வப்போது (கவனிக்க - அடிக்கடி அல்ல) நீங்கள் முதலீடு செய்திருக்கும் பண்ட்களின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை கண்காணிப்பது நல்லது. நண்பர்கள், அல்லது மியூச்சுவல் பண்ட் ஆலோசகர்களிடம் இது குறித்து விவாதிக்கலாம். செயல்பாடு நன்றாக இல்லை என்னும் பட்சத்தில், மியூச்சுவல் பண்ட் முதலீடே வேண்டாம் என்று சொல்லாமல், அதே மியூச்சுவல் பண்டில் உள்ள வேறு திட்டத்திலோ அல்லது வேறு பண்ட்களிலோ முதலீட்டை மாற்றிக்கொள்ளவும்.

காலங்கடந்து விட்டதோ என்று நினைக்க வேண்டாம். முதலீடு செய்யும் திட்டத்தை உடனடியாக செயல்படுத் துங்கள்.

karthikeyan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x